All Surahs

Surah 8

الأنفال

Al-Anfal

8. ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)

75 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ ؕ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَیْنِكُمْ ۪ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

(நபியே!) அன் ஃபால் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றார்கள். கூறுவீராக: “அன் ஃபால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியனவாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! மேலும், உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீராக்கிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.”

2

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِیَتْ عَلَیْهِمْ اٰیٰتُهٗ زَادَتْهُمْ اِیْمَانًا وَّعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚۖ

உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்போது, அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும்! மேலும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும், அவர்கள் தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள்.

3

الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ؕ

அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நம்முடைய வழியில்) செலவு செய்வார்கள்.

4

اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟ۚ

இத்தகையோர்தாம் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உயர்ந்த படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், தவறுகளுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன.

5

كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَیْتِكَ بِالْحَقِّ ۪ وَاِنَّ فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ لَكٰرِهُوْنَ ۟ۙ

(இந்தப் போர்ப் பொருட்கள் விவகாரத்தில் உருவாகிக் கொண்டிருக்கிற நிலை, முன்பு ஏற்பட்ட நிலையைப் போன்றே உள்ளது. அப்போது) உம் இறைவன் உம்மைச் சத்தியத்துடன் உம் வீட்டிலிருந்து வெளிக் கொணர்ந்தான். இறைநம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினருக்கு அது வெறுப்பாக இருந்தது.

6

یُجَادِلُوْنَكَ فِی الْحَقِّ بَعْدَ مَا تَبَیَّنَ كَاَنَّمَا یُسَاقُوْنَ اِلَی الْمَوْتِ وَهُمْ یَنْظُرُوْنَ ۟ؕ

அவர்கள் சத்தியம் தெளிவாகி விட்ட பின்னரும் அது குறித்து உம்மிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய நிலைமை, கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மரணத்தின் பக்கமாக இழுத்துச் செல்லப்படுவது போன்று இருந்தது.

7

وَاِذْ یَعِدُكُمُ اللّٰهُ اِحْدَی الطَّآىِٕفَتَیْنِ اَنَّهَا لَكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَیْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَكُمْ وَیُرِیْدُ اللّٰهُ اَنْ یُّحِقَّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَیَقْطَعَ دَابِرَ الْكٰفِرِیْنَ ۟ۙ

மேலும், இதனையும் நினைத்துப் பாருங்கள்; “இரு கூட்டத்தாரில் ஒரு கூட்டம் நிச்சயம் உங்கள் கைக்குக் கிடைத்து விடுவர்” என்று அல்லாஹ் உங்களிடம் வாக்குறுதி அளித்தான். ஆனால், நிராயுதபாணிகளான கூட்டத்தினர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் வாக்குகளால் சத்தியத்தை சத்தியம் என்று காட்டவும், நிராகரிப்பாளர்களை வேரறுக்கவுமே நாடியிருந்தான்.

8

لِیُحِقَّ الْحَقَّ وَیُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟ۚ

ஏனெனில், சத்தியம் சத்தியம்தான் என்றும், அசத்தியம் அசத்தியம்தான் என்றும் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காக! குற்றவாளிகள் (இதனை எவ்வளவு) வெறுத்தாலும் சரியே!

9

اِذْ تَسْتَغِیْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّیْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُرْدِفِیْنَ ۟

உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக் கொண்டிருந்ததையும் நினைத்துப் பாருங்கள்; அப்போது அவன் பதிலளித்தான்; “ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, திண்ணமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்.”

10

وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠

அல்லாஹ் இதனை அறிவித்தது, உங்களுக்கு ஒரு நற் செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே! தவிர, வெற்றி என்றைக்கும் அல்லாஹ்விடமிருந்துதான் ஏற்படுகிறது! நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான்.

11

اِذْ یُغَشِّیْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَیُنَزِّلُ عَلَیْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَهِّرَكُمْ بِهٖ وَیُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّیْطٰنِ وَلِیَرْبِطَ عَلٰی قُلُوْبِكُمْ وَیُثَبِّتَ بِهِ الْاَقْدَامَ ۟ؕ

இதையும் நினைத்துப் பாருங்கள்; அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும் அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான்.

12

اِذْ یُوْحِیْ رَبُّكَ اِلَی الْمَلٰٓىِٕكَةِ اَنِّیْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْا ؕ سَاُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ ۟ؕ

இதனையும் நினைவுகூருங்கள்: உம் இறைவன் வானவர்களிடம் அறிவித்துக் கொண்டிருந்தான்: “நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்! இதோ! நிராகரிப் பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே, நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள்; அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்!”

13

ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ وَمَنْ یُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟

இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான்! மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கின்றார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான்.

14

ذٰلِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِیْنَ عَذَابَ النَّارِ ۟

“இதுதான் உங்களுக்குரிய தண்டனை. இப்பொழுது இதனைச் சுவையுங்கள்!” மேலும், சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்குத் திண்ணமாக நரக வேதனை இருக்கிறது (என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்).

15

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ ۟ۚ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறைநிராகரிப்பாளர்களுடன் போரிட நேர்ந்தால், அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்!

16

وَمَنْ یُّوَلِّهِمْ یَوْمَىِٕذٍ دُبُرَهٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَیِّزًا اِلٰی فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟

அந்நாளில் யாரேனும் புறமுதுகு காட்டி ஓடினால் போர்த் தந்திரத்திற்காகவோ, வேறொரு படையுடன் சேர்ந்து கொள்வதற்காகவோ செல்பவரைத் தவிர மற்றவர்கள் திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவர். மேலும், அவர்களுடைய புகலிடம் நரகமாகும். அது மோசமான இருப்பிடமாகும்.

17

فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ ۪ وَمَا رَمَیْتَ اِذْ رَمَیْتَ وَلٰكِنَّ اللّٰهَ رَمٰی ۚ وَلِیُبْلِیَ الْمُؤْمِنِیْنَ مِنْهُ بَلَآءً حَسَنًا ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

உண்மை யாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான்! மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது உண்மையில் எறிந்தது நீரல்லர். மாறாக, அல்லாஹ்தான் எறிந்தான். மேலும், (இறை நம்பிக்கையாளர்களை இதில் பங்கேற்கச் செய்தது எதற்காகவெனில், அல்லாஹ் நம்பிக்கையாளர்களை நன்மை தரக்கூடிய சோதனையில் ஆழ்த்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

18

ذٰلِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَیْدِ الْكٰفِرِیْنَ ۟

இது உங்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையாகும். ஆனால் நிராகரிப்பாளர் (களின் நிலை யாதெனில் அவர்)களின் சதித்திட்டங்களைத் திண்ணமாக, அல்லாஹ் பலவீனப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றான்.

19

اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَآءَكُمُ الْفَتْحُ ۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ وَاِنْ تَعُوْدُوْا نَعُدْ ۚ وَلَنْ تُغْنِیَ عَنْكُمْ فِئَتُكُمْ شَیْـًٔا وَّلَوْ كَثُرَتْ ۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِیْنَ ۟۠

(இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறுவீராக) “நீங்கள் ஒரு முடிவை விரும்புகின்றீர்கள் என்றால், இதோ! அந்த முடிவு உங்கள் முன் வந்துவிட்டது. இனி நீங்கள் தவறான போக்கைத் தவிர்த்துக் கொண்டால், அது உங்களுக்கு நல்லதாகும். (அறிவற்ற இதே செயலின் பக்கம்) நீங்கள் மீண்டும் திரும்பினால், நாமும் மீண்டும் தண்டிப்போம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு அதிகமாயினும் சரியே, அது உங்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது. திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.”

20

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْتُمْ تَسْمَعُوْنَ ۟ۚۖ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! மேலும் (கட்டளையைச்) செவியேற்ற பின் அதைப் புறக்கணிக்காதீர்கள்;

21

وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟

மேலும், செவியேற்காமல் இருந்து கொண்டு “நாங்கள் செவியேற்றோம்” என்று கூறியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்!

22

اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟

திண்ணமாக சிந்தித்து உணராத செவிடர்களும், ஊமையர்களும்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குகளாவர்.

23

وَلَوْ عَلِمَ اللّٰهُ فِیْهِمْ خَیْرًا لَّاَسْمَعَهُمْ ؕ وَلَوْ اَسْمَعَهُمْ لَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ۟

அவர்களிடம் கொஞ்சமேனும் நல்லியல்பு இருப்பதாக அல்லாஹ் அறிந்திருந்தால், நிச்சயம் அவர்களுக்குச் செவியுறும் பேற்றினை அருளியிருப்பான். ஆனால் (நல்லியல்பற்றவர்களாய் இருந்தும்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்திருந்தால் புறக்கணித்தவர்களாய் முகம் திருப்பிக் கொண்டு போயிருப்பார்கள்!

24

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَجِیْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا یُحْیِیْكُمْ ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَحُوْلُ بَیْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு வாழ்வு அளிக்கக்கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்! அல்லாஹ், மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான் என்பதையும், திண்ணமாக அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

25

وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِیْبَنَّ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟

மேலும் எந்த ஃபித்னாவின் குழப்பத்தின் தீய விளைவு உங்களில் பாவம் புரிந்தவர்களைத் தாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாதோ அந்தக் குழப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! மேலும், திண்ணமாக அல்லாஹ் கடுமையாக தண்டனை அளிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

26

وَاذْكُرُوْۤا اِذْ اَنْتُمْ قَلِیْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِی الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ یَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰىكُمْ وَاَیَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

மேலும், இந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: நீங்கள் சிறுபான்மையோராய் இருந்தீர்கள்; பூமியில் வலிமையற்றவர்களாய்க் கருதப்பட்டீர்கள்; பிற மக்கள் உங்களை இறாஞ்சிச் சென்று விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தீர்கள். அப்போது, அல்லாஹ் உங்களுக்கு தஞ்சம் அளித்தான். தனது உதவியின் மூலம் உங்களுடைய கைகளை வலுப்படுத்தினான். மேலும், அவன் நல்ல பொருள்களிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான்; நீங்கள் நன்றி செலுத்தக் கூடும் என்பதற்காக!

27

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (அறிந்தும் புரிந்தும்) வஞ்சனை செய்யாதீர்கள்; அறிந்து கொண்டே உங்களுடைய அமானிதங்களில் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.

28

وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۙ وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟۠

உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உண்மையில் சோதனைப் பொருள்களே என்பதையும், திண்ணமாக அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

29

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ یَجْعَلْ لَّكُمْ فُرْقَانًا وَّیُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தீர்களாயின் உங்களுக்கு (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய) “உரைகல்லை” வழங்குவான். மேலும், உங்களுடைய தீமைகளை உங்களை விட்டு நீக்கி விடுவான். மேலும், உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் மாபெரும் அருளுடையவனாக இருக்கின்றான்.

30

وَاِذْ یَمْكُرُ بِكَ الَّذِیْنَ كَفَرُوْا لِیُثْبِتُوْكَ اَوْ یَقْتُلُوْكَ اَوْ یُخْرِجُوْكَ ؕ وَیَمْكُرُوْنَ وَیَمْكُرُ اللّٰهُ ؕ وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟

மேலும், இந்த நேரத்தையும் நினைவுகூருங்கள்: சத்தியத்தை நிராகரித்தவர்கள் உமக்கு எதிராக சதித் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்; உம்மைக் கைது செய்ய வேண்டும் அல்லது உம்மைக் கொலை செய்ய வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும் என்பதற்காக! (இவ்வாறாக) அவர்கள் தங்களுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தார்கள்; மேலும், அல்லாஹ் தன்னுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தான். இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் அனைவரையும்விடச் சிறந்தவனாய் இருக்கின்றான்.

31

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هٰذَاۤ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟

மேலும், நம் வசனங்கள் அவர்கள் முன் ஓதிக் காண்பிக்கப்படும்போது கூறுவார்கள்: “நாங்கள் கேட்டுக் கொண்டோம்; நாங்கள் நினைத்தால் இதைப் போன்று நாங்களும் உருவாக்கிக் கூறமுடியும்! இவையெல்லாம் முன்னோர்கள் கூறிவரும் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.”

32

وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَیْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَلِیْمٍ ۟

மேலும், அவர்கள் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும்: “இறைவனே! இது உன்னிடமிருந்து அருளப்பட்ட சத்தியம் என்பது உண்மையாயின், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழிந்து விடு; அல்லது துன்புறுத்தும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!”

33

وَمَا كَانَ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ وَاَنْتَ فِیْهِمْ ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ یَسْتَغْفِرُوْنَ ۟

ஆனால் நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவனாக இல்லை. மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் மீது வேதனையை இறக்கிவிடுவது அல்லாஹ்வின் நியதியல்ல.

34

وَمَا لَهُمْ اَلَّا یُعَذِّبَهُمُ اللّٰهُ وَهُمْ یَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوْۤا اَوْلِیَآءَهٗ ؕ اِنْ اَوْلِیَآؤُهٗۤ اِلَّا الْمُتَّقُوْنَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்குச் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்கு உள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுள்ளவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாய் ஆக முடியும்! எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள்.

35

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَیْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِیَةً ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟

கஅபா ஆலயத்தில் அவர்களுடைய தொழுகை, சீட்டி அடிப்பதும் கை தட்டுவதுமே அன்றி வேறில்லை! எனவே, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்!”

36

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِیَصُدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ فَسَیُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَیْهِمْ حَسْرَةً ثُمَّ یُغْلَبُوْنَ ؕ۬ وَالَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ یُحْشَرُوْنَ ۟ۙ

சத்தியத்தை மறுத்தவர்கள், அல்லாஹ்வின் வழியில் செல்ல விடாமல் (மக்களைத்) தடுப்பதற்காகத் தங்களுடைய பொருள்களைச் செலவழிக்கின்றார்கள். மென்மேலும் செலவழித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இறுதியில், இந்தச் செயல்களே அவர்கள் வருந்துவதற்குக் காரணமாய் அமைந்துவிடும். பிறகு அவர்கள் தோல்வி அடைவார்கள். மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகின் பக்கமே ஒன்று சேர்க்கப்படுவார்கள்;

37

لِیَمِیْزَ اللّٰهُ الْخَبِیْثَ مِنَ الطَّیِّبِ وَیَجْعَلَ الْخَبِیْثَ بَعْضَهٗ عَلٰی بَعْضٍ فَیَرْكُمَهٗ جَمِیْعًا فَیَجْعَلَهٗ فِیْ جَهَنَّمَ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠

எதற்காகவெனில், அல்லாஹ் தூய்மையானதிலிருந்து தூய்மையற்றதைப் பிரித்தெடுத்து, தூய்மையற்ற ஒவ்வொன்றையும் ஒன்று சேர்த்து, பிறகு அந்தக் குவியலை நரகத்தில் வீசி எறிவதற்காக! இத்தகையோர் தாம் முற்றிலும் இழப்புக்குரியவர்களாவர்.

38

قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّنْتَهُوْا یُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَ ۚ وَاِنْ یَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِیْنَ ۟

(நபியே!) இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறும்: “(இப்போதேனும் அசத்தியப் போக்கிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களாயின், முன்பு செய்த குற்றங்கள் யாவும் மன்னிக்கப்படும். ஆனால், (பழைய போக்கிற்கு) அவர்கள் மீண்டும் திரும்புவார்களாயின் முற்கால மக்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே!”

39

وَقَاتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ كُلُّهٗ لِلّٰهِ ۚ فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

(இறைநம்பிக்கை கொண்டவர்களே!) குழப்பம் இல்லாதொழிந்து தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள்! பிறகு, அவர்கள் (அதிலிருந்து) விலகிக்கொண்டால் அவர்களுடைய செயல்களைத் திண்ணமாக அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.

40

وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰىكُمْ ؕ نِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟

மேலும், அவர்கள் (ஏற்றுக் கொள்ளாமல்) புறக்கணித்தால், அல்லாஹ் உங்கள் பாதுகாவலனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலனும், சிறந்த முறையில் உதவி புரிபவனும் ஆவான்.

41

وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَیْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی عَبْدِنَا یَوْمَ الْفُرْقَانِ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! போரில் ஏதேனும் பொருள்களை நீங்கள் பெற்றால் அவற்றில் ஐந்திலொரு பாகம், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் வறியவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியதாகும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில், அதாவது (பத்ரு போரின்போது) இரு படைகளும் மோதிக் கொண்ட நாளில் நம் அடியாருக்கு நாம் இறக்கியருளியதன் மீதும் நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் (இந்தப் பாகத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி விடுங்கள்!) அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாய் இருக்கின்றான்.

42

اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْیَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰی وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ ؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِی الْمِیْعٰدِ ۙ وَلٰكِنْ لِّیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ۬ لِّیَهْلِكَ مَنْ هَلَكَ عَنْ بَیِّنَةٍ وَّیَحْیٰی مَنْ حَیَّ عَنْ بَیِّنَةٍ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ

நீங்கள் (பள்ளத்தாக்கிலிருந்து) மிக நெருங்கிய பகுதியிலும் அவர்கள் மிகத் தொலைவான பகுதியிலும் (தளம் அமைத்து) இருந்ததையும், மேலும் பயணக் கூட்டம் உங்களுக்குக் கீழே (கடற்கரை ஓரமாக) இருந்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்! (முன்னரே) நீங்களும் அவர்களும் (எங்காவது குறிப்பிட்ட இடத்தில் போர் செய்வதென) முடிவு செய்திருப்பீர்களாயின் அப்போது அந்த முடிவிலிருந்து நிச்சயம் நீங்கள் நழுவிச் சென்றிருப்பீர்கள். ஆயினும், தீர்மானிக்கப்பட்டிருந்த விஷயத்தை அல்லாஹ் நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக (இவ்வாறெல்லாம் நிகழ்ந்தன). ஏனெனில், அழிய வேண்டியவன் தக்க காரணத்துடன் அழிய வேண்டும்; மேலும், உயிர்வாழ வேண்டியவன் தக்க காரணத்துடன் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக! மேலும், திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான்.

43

اِذْ یُرِیْكَهُمُ اللّٰهُ فِیْ مَنَامِكَ قَلِیْلًا ؕ وَلَوْ اَرٰىكَهُمْ كَثِیْرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَلٰكِنَّ اللّٰهَ سَلَّمَ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

(நபியே!) அல்லாஹ் உம்முடைய கனவில் அவர்களின் எண்ணிக்கையை குறைவாய்க் காண்பித்ததை நீர் நினைத்துப் பாரும். அவன் உமக்கு அவர்களுடைய எண்ணிக்கையை அதிகமாய்க் காண்பித்திருந்தால், நிச்சயம் நீங்கள் ஊக்கம் குன்றியிருப்பீர்கள்; மேலும், போர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் பிணங்கியிருப்பீர்கள். எனினும், அல்லாஹ்தான் (உங்களை இதிலிருந்து) காத்தருளினான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றைக்கூட நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.

44

وَاِذْ یُرِیْكُمُوْهُمْ اِذِ الْتَقَیْتُمْ فِیْۤ اَعْیُنِكُمْ قَلِیْلًا وَّیُقَلِّلُكُمْ فِیْۤ اَعْیُنِهِمْ لِیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠

மேலும், இதனையும் நினைத்துப்பாருங்கள்: நீங்கள் போரிட்டபோது அவன், உங்களுடைய கண்களுக்கு அவர்களின் எண்ணிக்கையைக் குறைவாகவும், அவர்களுடைய கண்களுக்கு உங்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகவும் காண்பித்தான்; எதற்காகவெனில், நிகழ வேண்டிய செயலை அல்லாஹ் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக! (இறுதியில்) விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே திரும்பக்கொண்டு வரப்பட இருக்கின்றன.

45

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஏதேனும் ஒரு குழுவினரோடு நீங்கள் போரிடும்போது நிலைகுலையாமல் இருங்கள்! மேலும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்! நீங்கள் வெற்றி அடையலாம்.

46

وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِیْحُكُمْ وَاصْبِرُوْا ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟ۚ

மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அவ்வாறு செய்தால் உங்களிடையே பலவீனம் தோன்றிவிடும். மேலும், உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்து போய்விடும். ஆகவே பொறுமையை மேற்கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

47

وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ وَاللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟

மேலும், இறுமாப்புடனும் (தன் மதிப்பை) பிற மக்களுக்குக் காட்டும் வகையிலும் தங்களுடைய இல்லங்களிலிருந்து எவர்கள் வெளியேறினார்களோ, மேலும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் சூழ்ந்தறிபவனாய் இருக்கின்றான்.

48

وَاِذْ زَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْیَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّیْ جَارٌ لَّكُمْ ۚ فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰی عَقِبَیْهِ وَقَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكُمْ اِنِّیْۤ اَرٰی مَا لَا تَرَوْنَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ ؕ وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟۠

மேலும், இதையும் நினைத்துப்பாருங்கள்: ஷைத்தான் அவர்களுடைய (தீய) செயல்களை அவர்களின் பார்வையில் அழகாக்கிக் காட்டினான். மேலும், “இன்று மக்களில் எவரும் உங்களை வென்றிட முடியாது. நான் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கின்றேன்” என்றும் அவர்களிடம் கூறினான். ஆயினும் இரு படைகளும் மோதிக்கொண்டபோது அவன் புறங்காட்டித் திரும்பிச் சென்றுவிட்டான். மேலும், அவன் கூறினான்: “நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நான் அல்லாஹ்வைக் குறித்து அஞ்சுகின்றேன். மேலும், அல்லாஹ் தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையானவன்.”

49

اِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰۤؤُلَآءِ دِیْنُهُمْ ؕ وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

இதனையும் நினைத்துப் பாருங்கள்: நயவஞ்சகர்களும், எவர்கள் உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும் “இவர்களுடைய மார்க்கம் இவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என்று கூறினார்கள். உண்மை யாதெனில், எவரேனும் அல்லாஹ்வை முழுதும் சார்ந்து வாழ்வாரானால் (அல்லாஹ் அவருக்குப் போதுமானவன் ஆவான்.) திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்!

50

وَلَوْ تَرٰۤی اِذْ یَتَوَفَّی الَّذِیْنَ كَفَرُوا ۙ الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟

(வீழ்த்தப்பட்ட) நிராகரிப்பாளர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்ததை நீர் கண்டிருக்க வேண்டுமே! அந்த வானவர்கள் அவர்களின் முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும், (அவர்களிடம்) கூறிக் கொண்டிருந்தார்கள்: “இதோ, சுட்டுப் பொசுக்குகின்ற தண்டனையைச் சுவையுங்கள்!

51

ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۙ

உங்கள் கைகள் முன்பே சம்பாதித்த செயல்களினால் விளைந்த தண்டனைதான் இது! திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகளுக்கு அநீதி இழைப்பவன் அல்லன்.”

52

كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ اِنَّ اللّٰهَ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟

இவர்களுக்கு நேர்ந்த கதி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கும் நேர்ந்தது போன்றதாகும். அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆகையால், அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். திண்ணமாக, அல்லாஹ் மிக்க வலிமையுடையவனாகவும் கடும் தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.

53

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ یَكُ مُغَیِّرًا نِّعْمَةً اَنْعَمَهَا عَلٰی قَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ۙ وَاَنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ

‘எந்தச் சமுதாயத்தாரும் தங்களின் நடை முறையை மாற்றிக் கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த ஓர் அருட் கொடையையும் மாற்றுவதில்லை’ எனும் அல்லாஹ்வின் நியதிக்கேற்பவே இது நடைபெற்றது. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

54

كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذَّبُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِیْنَ ۟

ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கும் நேர்ந்த கதி இந்த நியதியின்படியே ஏற்பட்டது. தங்களுடைய இறைவனின் சான்றுகளை அவர்கள் பொய்யெனக் கூறினார்கள். அப்போது, அவர்கள் செய்த பாவச் செயல்களின் காரணமாக அவர்களை நாம் அழித்தோம். இன்னும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம். ஏனெனில், அவர்கள் அனைவரும் கொடுமை இழைப்பவர்களாய் இருந்தார்கள்.

55

اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِیْنَ كَفَرُوْا فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۖۚ

திண்ணமாக, எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ, பிறகு (எவ்விதத்திலும்) அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லையோ அவர்கள்தாம் பூமியில் நடமாடும் படைப்புகளிலேயே அல்லாஹ்விடத்தில் மிகவும் மோசமானவர்கள்.

56

اَلَّذِیْنَ عٰهَدْتَّ مِنْهُمْ ثُمَّ یَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِیْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا یَتَّقُوْنَ ۟

(குறிப்பாக) உம்மோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பின்னர் ஒவ்வொரு முறையும் தங்களுடைய ஒப்பந்தத்தை எவர்கள் முறிக்கின்றார்களோ, மேலும் கொஞ்சமும் இறையச்சம் கொள்ளாதிருக்கின்றார்களோ அவர்கள்தாம் இவர்களில் மிகவும் கெட்டவர்களாவர்.

57

فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِی الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟

எனவே, போரில் அவர்களை நீர் சந்தித்தால் அவர்களைச் சின்னாபின்னமாய்ச் சிதற அடித்து அவர்களுக்குப் பின்வருவோரைத் திகிலடையச் செய்திட வேண்டும். (உடன்படிக்கையை மீறுவதால் ஏற்படும் தீய கதியினைக் கண்டு) அவர்கள் படிப்பினை பெறக்கூடும்.

58

وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِیَانَةً فَانْۢبِذْ اِلَیْهِمْ عَلٰی سَوَآءٍ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْخَآىِٕنِیْنَ ۟۠

(உடன்படிக்கை செய்து கொண்டு) ஏதாவது ஒரு கூட்டத்தினர் உம்மிடம் நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொள்வார்களோ என்று நீர் அஞ்சினால் (அவர்களின் உடன்படிக்கையை) வெளிப்படையாக அவர்களிடமே எறிந்து விடும்! திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

59

وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَبَقُوْا ؕ اِنَّهُمْ لَا یُعْجِزُوْنَ ۟

மேலும், இறைமறுப்பாளர்கள், தாம் தப்பித்து விட்டதாக எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். திண்ணமாக, அவர்கள் நம்மை இயலாமையில் ஆழ்த்திட முடியாது.

60

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَیْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِیْنَ مِنْ دُوْنِهِمْ ۚ لَا تَعْلَمُوْنَهُمْ ۚ اَللّٰهُ یَعْلَمُهُمْ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فِیْ سَبِیْلِ اللّٰهِ یُوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟

மேலும், அவர்களை எதிர்ப்பதற்கென உங்களால் முடிந்த அளவு அதிகமான வலிமையையும் தயார்நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள்! இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் பகைவர்களாய் உள்ளவர்களையும் இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும். அந்தப் பகைவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை அறிவான். மேலும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதனைச் செலவு செய்தாலும் அதற்குரிய முழுமையான கூலி உங்களுக்கு வழங்கப்படும். மேலும், நீங்கள் ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.

61

وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

(நபியே!) பகைவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீரும் அதற்குத் தயாராகிவிடும். இன்னும், அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

62

وَاِنْ یُّرِیْدُوْۤا اَنْ یَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ ؕ هُوَ الَّذِیْۤ اَیَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِیْنَ ۟ۙ

அவர்கள் உம்மை ஏமாற்ற முனைந்தால் அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கின்றான். தன்னுடைய உதவியினாலும் இறைநம்பிக்கையாளர் மூலமாகவும் உமக்கு வலுவூட்டியவனும் அவனே.

63

وَاَلَّفَ بَیْنَ قُلُوْبِهِمْ ؕ لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ وَلٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْ ؕ اِنَّهٗ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

அவர்களுக்கிடையே உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியவனும் அவனே! உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் நீர் செலவழித்தாலும் அவர்களிடையே உளப்பூர்வமான இணைப்பை உம்மால் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களைப் பிணைத்தான். திண்ணமாக, அவன் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான்.

64

یٰۤاَیُّهَا النَّبِیُّ حَسْبُكَ اللّٰهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟۠

நபியே! உமக்கும், உம்மைப் பின்பற்றுகின்ற இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.

65

یٰۤاَیُّهَا النَّبِیُّ حَرِّضِ الْمُؤْمِنِیْنَ عَلَی الْقِتَالِ ؕ اِنْ یَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صٰبِرُوْنَ یَغْلِبُوْا مِائَتَیْنِ ۚ وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ یَّغْلِبُوْۤا اَلْفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟

நபியே! போர்புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக! உங்களில் நிலைகுலையாத இருபது பேர் இருப்பின் (இறைமறுப்பாளர்களில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும், இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால், இறை மறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்துகொள்ளாத மக்களாக இருக்கின்றார்கள்.

66

اَلْـٰٔنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِیْكُمْ ضَعْفًا ؕ فَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ یَّغْلِبُوْا مِائَتَیْنِ ۚ وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ یَّغْلِبُوْۤا اَلْفَیْنِ بِاِذْنِ اللّٰهِ ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟

இப்போது அல்லாஹ் உங்கள் சுமையைக் குறைத்துவிட்டான். இப்பொழுதும் உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே, உங்களில் நூறு பேர் உறுதி குலையாதவர்களாய் இருந்தால், இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். அத்தகையோர் உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் பேரை அவர்கள் வென்று விடுவார்கள். மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

67

مَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّكُوْنَ لَهٗۤ اَسْرٰی حَتّٰی یُثْخِنَ فِی الْاَرْضِ ؕ تُرِیْدُوْنَ عَرَضَ الدُّنْیَا ۖۗ وَاللّٰهُ یُرِیْدُ الْاٰخِرَةَ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

பூமியில் பகைவர்களை முற்றிலும் முறியடிக்காத வரையில் அவர்களைச் சிறைப்பிடிப்ப(தில் ஈடுபடுவ)து எந்த நபிக்கும் உகந்ததல்ல. நீங்கள் உலக ஆதாயங்களை விரும்புகிறீர்கள். ஆனால், அல்லாஹ் (உங்களுக்கு) மறுமை நலன்களை விரும்புகின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

68

لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِیْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟

அல்லாஹ்வின் தீர்ப்பு முன்னரே எழுதப்படாமல் இருந்தால், நீங்கள் (கைதிகளிடமிருந்து) பெற்றுக் கொண்டவற்றுக்குப் பகரமாக உங்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.

69

فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلًا طَیِّبًا ۖؗ وَّاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

எனவே, நீங்கள் போரில் கைப்பற்றிய பொருள்களை உண்ணுங்கள்; அவை அனுமதிக்கப்பட்டவையும் தூய்மையானவையுமாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்து வாருங்கள்! திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.

70

یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّمَنْ فِیْۤ اَیْدِیْكُمْ مِّنَ الْاَسْرٰۤی ۙ اِنْ یَّعْلَمِ اللّٰهُ فِیْ قُلُوْبِكُمْ خَیْرًا یُّؤْتِكُمْ خَیْرًا مِّمَّاۤ اُخِذَ مِنْكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

நபியே! உங்கள் கைவசத்திலுள்ள கைதிகளிடம் நீர் கூறும்: “உங்கள் உள்ளங்களில் (சிறிதளவாவது) நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிவானாகில், உங்களிட மிருந்து வாங்கப்பட்டதை விடவும் சிறப்பானதை அவன் உங்களுக்கு வழங்குவான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.”

71

وَاِنْ یُّرِیْدُوْا خِیَانَتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟

ஆயினும், அவர்கள் உமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய நினைத்தால் - இதற்கு முன் அவர்கள் அல்லாஹ்வுக்கே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் உம்மைக் கொண்டு அவர்களைக் கைது செய்ய வைத்தான் அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

72

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالَّذِیْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰٓىِٕكَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَلَمْ یُهَاجِرُوْا مَا لَكُمْ مِّنْ وَّلَایَتِهِمْ مِّنْ شَیْءٍ حَتّٰی یُهَاجِرُوْا ۚ وَاِنِ اسْتَنْصَرُوْكُمْ فِی الدِّیْنِ فَعَلَیْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰی قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் ஹிஜ்ரத் செய்து (நாட்டைத் துறந்து சென்று) அல்லாஹ்வின் வழியில் தங்களின் உயிர்களாலும் உடைமைகளாலும் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு) தஞ்சம் அளித்து உதவியும் புரிந்தார்களோ அவர்களும் உண்மையில் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்பும் (தாருல் இஸ்லாமிற்கு) ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்களுடைய எந்த விஷயத்திற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்லர்; அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில்! ஆயினும் மார்க்க விவகாரங்களில் உங்களிடம் அவர்கள் உதவிகோரினால் அவர்களுக்கு உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும். ஆனால், (இந்த உதவிகூட) உங்களோடு உடன்படிக்கை செய்துள்ள கூட்டத்தாருக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

73

وَالَّذِیْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِی الْاَرْضِ وَفَسَادٌ كَبِیْرٌ ۟ؕ

சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருப்போர் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். எனவே, நீங்கள் இவ்வாறு செய்யாவிடில் பூமியில் குழப்பமும் பெரும் சீர்குலைவும் ஏற்பட்டுவிடும்.

74

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالَّذِیْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟

மேலும், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, மேலும் ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் வழியில் போராடினார்களோ அவர்களும், எவர்கள் தஞ்சம் அளித்து உதவி புரிந்தார்களோ அவர்களும்தாம் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்குப் பாவமன்னிப்பு இருக்கிறது. மேலும் நற்பேறுகளும் இருக்கின்றன.

75

وَالَّذِیْنَ اٰمَنُوْا مِنْ بَعْدُ وَهَاجَرُوْا وَجٰهَدُوْا مَعَكُمْ فَاُولٰٓىِٕكَ مِنْكُمْ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰی بِبَعْضٍ فِیْ كِتٰبِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠

மேலும் அவர்களுக்குப் பின்னர் எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து, மேலும் உங்களுடன் சேர்ந்து போராடினார்களோ, அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்தாம். ஆயினும், அல்லாஹ்வின் வேதப்படி, இரத்தபந்தமுடையவர்கள்தாம் ஒருவர் மற்றொருவருக்கு உதவுவதில் அதிக உரிமையுடையவர்களாவர். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

PreviousAl-ArafNextAt-Tawbah

0:00–:––