All Surahs

Surah 7

الأعراف

Al-Araf

7. ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)

206 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

الٓمّٓصٓ ۟ۚ

அலிஃப், லாம், மீம், ஸாத்.

2

كِتٰبٌ اُنْزِلَ اِلَیْكَ فَلَا یَكُنْ فِیْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟

(நபியே!) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது.

3

اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟

(மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள்! மேலும், அவனை விடுத்து வேறு பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள்! ஆனால் நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுரைகளை ஏற்கின்றீர்கள்.

4

وَكَمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا فَجَآءَهَا بَاْسُنَا بَیَاتًا اَوْ هُمْ قَآىِٕلُوْنَ ۟

எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். இரவு நேரத்தில் அல்லது நண்பகலில் அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தபோது திடீரென்று நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியது.

5

فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَآءَهُمْ بَاْسُنَاۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟

அவ்வாறு நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியபோது அவர்களால் எதையும் கூற இயலவில்லை; “உண்மையிலேயே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத்தான் இருந்தோம்” என்று கூக்குரலிட்டதைத் தவிர!

6

فَلَنَسْـَٔلَنَّ الَّذِیْنَ اُرْسِلَ اِلَیْهِمْ وَلَنَسْـَٔلَنَّ الْمُرْسَلِیْنَ ۟ۙ

எனவே, எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ, அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும் (தூதுத்துவக் கடமையை அவர்கள் எதுவரை நிறைவேற்றினார்கள்; மக்களிடமிருந்து என்ன பதில் கிடைத்தது என்பது பற்றி) நிச்சயம் விசாரிப்போம்.

7

فَلَنَقُصَّنَّ عَلَیْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَآىِٕبِیْنَ ۟

பிறகு (நடந்த நிகழ்ச்சிகள்) அனைத்தையும் நாம் முழு அறிவுடன் அம்மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். நாம் எங்கும் மறைந்து போய்விடவில்லை.

8

وَالْوَزْنُ یَوْمَىِٕذِ لْحَقُّ ۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟

மேலும் அந்நாளில் சத்தியம் மட்டுமே கனமுடையதாயிருக்கும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

9

وَمَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَظْلِمُوْنَ ۟

மேலும், எவர்களுடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்குமோ அவர்கள்தாம் தங்களைத் தாங்களே இழப்பிற்குள்ளாக்கிக் கொண்டவர்கள். காரணம், அவர்கள் நம்முடைய வசனங்களுடன் அக்கிரமமாக நடந்து கொண்டிருந்தார்கள்!

10

وَلَقَدْ مَكَّنّٰكُمْ فِی الْاَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟۠

நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

11

وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ ۖۗ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ لَمْ یَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟

நாம் உங்களைப் படைத்து, பிறகு உங்களுக்கு உருவம் கொடுத்தோம். பின்னர் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். (இக்கட்டளைக்கேற்ப) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸைத் தவிர! அவன் சிரம் பணிவோரில் ஒருவனாய் இருக்கவில்லை.

12

قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ۚ خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟

“சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான்.

13

قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا یَكُوْنُ لَكَ اَنْ تَتَكَبَّرَ فِیْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِیْنَ ۟

அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.”

14

قَالَ اَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟

(இப்லீஸ் இவ்வாறு) வேண்டினான்: “இவர்கள் அனைவரும் திரும்ப எழுப்பப்படும் நாள் வரையிலும் எனக்கு அவகாசம் அளிப்பாயாக!”

15

قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟

அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான்.

16

قَالَ فَبِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِیْمَ ۟ۙ

அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன்.

17

ثُمَّ لَاٰتِیَنَّهُمْ مِّنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَیْمَانِهِمْ وَعَنْ شَمَآىِٕلِهِمْ ؕ وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِیْنَ ۟

பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும், அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய்.”

18

قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ؕ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِیْنَ ۟

அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இழிந்தவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறிவிடு! (உன்னையும்) அவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றுகின்றவர்கள் அனைவரையும் நரகில் போட்டு நிரப்புவேன்.

19

وَیٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَیْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟

மேலும், ஆதமே! நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் தங்கியிருங்கள்! நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பியதைப் புசியுங்கள்! ஆனால் இம்மரத்தின் அருகில் நெருங்காதீர்கள்! அவ்வாறு நெருங்கினால், நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் சேர்ந்து விடுவீர்கள்.”

20

فَوَسْوَسَ لَهُمَا الشَّیْطٰنُ لِیُبْدِیَ لَهُمَا مَا وٗرِیَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰىكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ اِلَّاۤ اَنْ تَكُوْنَا مَلَكَیْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِیْنَ ۟

ஆனால் அவ்விருவரை விட்டும் பரஸ்பரம் மறைந்திருந்த அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்; மேலும், இவ்வாறு கூறினான்: “உங்கள் இறைவன் இம்மரத்தின் அருகே செல்லக் கூடாது என்று உங்கள் இருவரையும் தடுத்ததற்கான காரணம், நீங்கள் இருவரும் வானவர்கள் ஆகிவிடக்கூடாது; அல்லது உங்களுக்கு நிரந்தர வாழ்வு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்!”

21

وَقَاسَمَهُمَاۤ اِنِّیْ لَكُمَا لَمِنَ النّٰصِحِیْنَ ۟ۙ

மேலும், அவன் அவர்களிடம் சத்தியம் செய்து கூறினான்: “நான் உங்கள் இருவருக்கும் உண்மையான நலம் நாடுபவனாவேன்.”

22

فَدَلّٰىهُمَا بِغُرُوْرٍ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؕ وَنَادٰىهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَاۤ اِنَّ الشَّیْطٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِیْنٌ ۟

இவ்வாறு அவ்விருவரையும் ஏமாற்றி படிப்படியாக தன்வசப்படுத்தினான். கடைசியில் அவர்கள் அம்மரத்தி(ன் கனியி)னைச் சுவைத்ததும் அவர்களின் வெட்கத்தலங்கள் பரஸ்பரம் அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டன. பிறகு, அவர்கள் தங்கள் உடல்களை சுவனத்தின் இலைகளால் மூடிக்கொள்ளலாயினர். (அப்போது) அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இம் மரத்(தின் அருகில் செல்வ)தைவிட்டு உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா? மேலும், ஷைத்தான் உங்களின் வெளிப்படையான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?”

23

قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟

அதற்கு அவர்களிருவரும் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்துகொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.”

24

قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟

அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் இறங்கிவிடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். மேலும், ஒரு குறிப் பிட்ட காலம் வரை பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கைச் சாதனங்களும் உள்ளன.”

25

قَالَ فِیْهَا تَحْیَوْنَ وَفِیْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ ۟۠

(மேலும்) கூறினான்: “நீங்கள் அங்கேயே வாழ்ந்து அங்கேயே மரணமடைவீர்கள்; பின்னர், அங்கிருந்தே நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள்.”

26

یٰبَنِیْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَیْكُمْ لِبَاسًا یُّوَارِیْ سَوْاٰتِكُمْ وَرِیْشًا ؕ وَلِبَاسُ التَّقْوٰی ۙ ذٰلِكَ خَیْرٌ ؕ ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟

ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம். ஆயினும் இறையச்சம் (தக்வா) எனும் ஆடையே மிகச் சிறந்த ஆடையாகும். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். இதன் மூலம் மக்கள் நல்லுணர்வு பெறக் கூடும்.

27

یٰبَنِیْۤ اٰدَمَ لَا یَفْتِنَنَّكُمُ الشَّیْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَیْكُمْ مِّنَ الْجَنَّةِ یَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوْاٰتِهِمَا ؕ اِنَّهٗ یَرٰىكُمْ هُوَ وَقَبِیْلُهٗ مِنْ حَیْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ ۟

ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.

28

وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَیْهَاۤ اٰبَآءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَا ؕ قُلْ اِنَّ اللّٰهَ لَا یَاْمُرُ بِالْفَحْشَآءِ ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

அவர்கள், ஏதேனும் மானக்கேடான செயலைச் செய்தால், “இப்படித்தான் எங்கள் மூதாதையர் வாழக் கண்டோம்” என்றும் “இவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்தான் எங்களுக்குக் கட்டளையிட்டான்” என்றும் கூறுகிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளையிடுவதில்லை. எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதானா என்பதை) நீங்கள் அறியமாட்டீர்களோ அந்த விஷயங்களையா அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்கள்?”

29

قُلْ اَمَرَ رَبِّیْ بِالْقِسْطِ ۫ وَاَقِیْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ۬ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَ ۟ؕ

(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “என் அதிபதி நீதியைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ளான்; மேலும் (இதுவும் அவனது கட்டளைதான்:) ஒவ்வொரு வழிபாட்டிலும் நீங்கள் முன்னோக்கும் திசைகளைச் சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், தீனை (நெறியை) அவனுக்கே உரித்தாக்கியவண்ணம் அவனை அழையுங்கள்! அவன் உங்களை இப்பொழுது எவ்வாறு படைத்திருக்கின்றானோ அவ்வாறே நீங்கள் மீண்டும் படைக்கப் படுவீர்கள்.

30

فَرِیْقًا هَدٰی وَفَرِیْقًا حَقَّ عَلَیْهِمُ الضَّلٰلَةُ ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟

ஒரு கூட்டத்தாரை அவன் நேர்வழிப்படுத்தி விட்டான்; மேலும், மற்றொரு கூட்டத்தார் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை உதவியாளர்களாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக தாம் நேர்வழியில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.”

31

یٰبَنِیْۤ اٰدَمَ خُذُوْا زِیْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟۠

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.

32

قُلْ مَنْ حَرَّمَ زِیْنَةَ اللّٰهِ الَّتِیْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزْقِ ؕ قُلْ هِیَ لِلَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا خَالِصَةً یَّوْمَ الْقِیٰمَةِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟

(நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள அலங்காரத்தையும் மேலும், அவன் வழங்கியுள்ள தூய்மையான உண்பொருள்களையும் தடைசெய்தது யார்?” நீர் கூறும்: “இறைநம்பிக்கையாளர்களுக்கு இப்பொருள்கள் அனைத்தும் உலக வாழ்க்கையில் கிடைக்கும். மறுமைநாளில் அவர்களுக்கே அவை உரியனவாயிருக்கும்.” இவ்வாறு நாம் நம்முடைய வசனங்களை அறிவுடைய சமூகத்தாருக்குத் தெளிவாக விவரிக்கின்றோம்.

33

قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّیَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْاِثْمَ وَالْبَغْیَ بِغَیْرِ الْحَقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

(நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “என்னுடைய இறைவன் தடை செய்திருப்பவை இவற்றையெல்லாம்தாம்: மானக்கேடானவற்றைச் செய்தல் அவை வெளிப்படையாக இருந்தாலும் சரி; மறைவாக இருந்தாலும் சரி! பாவம் புரிதல், நேர்மைக்கு மாறாக வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுதல், மேலும் எவற்றைக் குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அல்லாஹ்வுடன் இணை வைத்தல், மேலும், எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதான் என்பதை) நீங்கள் அறியவில்லையோ அவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லல்!”

34

وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟

ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணை இருக்கிறது. அவரவரின் தவணை பூர்த்தியாகிவிட்டால் ஒரு வினாடிகூட அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.

35

یٰبَنِیْۤ اٰدَمَ اِمَّا یَاْتِیَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَقُصُّوْنَ عَلَیْكُمْ اٰیٰتِیْ ۙ فَمَنِ اتَّقٰی وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

(மேலும் முதல் மனிதரைப் படைத்தபோதே அல்லாஹ் இதைத் தெளிவாக்கி விட்டான்; அதாவது) ஆதத்தின் மக்களே...! (நினைவில் வையுங்கள்:) உங்களிலிருந்தே என்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கின்ற தூதர்கள் உங்களிடம் வந்தால், அப்போது எவர்கள் மாறு செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றார்களோ, மேலும் தங்களுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.

36

وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

ஆனால் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிட்டு அவற்றை ஏற்காமல் ஆணவம் கொண்டார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அவர்கள் என்றென்றும் அதில் வீழ்ந்து கிடப்பார்கள்.

37

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اُولٰٓىِٕكَ یَنَالُهُمْ نَصِیْبُهُمْ مِّنَ الْكِتٰبِ ؕ حَتّٰۤی اِذَا جَآءَتْهُمْ رُسُلُنَا یَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَیْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِیْنَ ۟

எவன் அல்லாஹ்வின் பெயரில் பொய்களைப் புனைந்துரைக்கின்றானோ அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எனினும், அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட பங்கு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதியில் நாம் அனுப்பிய வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைக் கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்களிடம் கேட்பார்கள்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்த தெய்வங்களை அழைத்து வந்தீர்களோ அந்த தெய்வங்கள் (இப்போது) எங்கே?” அதற்கு அவர்கள் “அவை அனைத்தும் எங்களை விட்டுக் காணாமல் போய்விட்டன” என்று கூறுவார்கள். பிறகு “நாங்கள் உண்மையிலேயே சத்தியத்தை நிராகரிப்பவர்களாய் இருந்தோம்” என்று தங்களுக்கு எதிராகத் தாங்களே சாட்சி கூறுவார்கள்.

38

قَالَ ادْخُلُوْا فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِی النَّارِ ؕ كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ؕ حَتّٰۤی اِذَا ادَّارَكُوْا فِیْهَا جَمِیْعًا ۙ قَالَتْ اُخْرٰىهُمْ لِاُوْلٰىهُمْ رَبَّنَا هٰۤؤُلَآءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ؕ۬ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰكِنْ لَّا تَعْلَمُوْنَ ۟

அல்லாஹ் கூறுவான்: “உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களுடன் நீங்களும் நரகத்திற்குச் செல்லுங்கள்!” ஒவ்வொரு கூட்டத்தாரும், (நரகத்தினுள்) நுழையும்போது தமக்கு முன்சென்ற கூட்டத்தாரைச் சபித்தவாறே செல்வார்கள். இறுதியில் எல்லோரும் அங்கு ஒன்று கூடும்போது அவர்களில் பிந்தைய கூட்டத்தார் முந்தைய கூட்டத்தாரைப் பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தார்கள்! எனவே, இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!” என்று கூறுவார்கள். (அதற்கு மறுமொழியாக) அல்லாஹ் கூறுவான்: “ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. ஆயினும், நீங்கள் அறிவதில்லை.”

39

وَقَالَتْ اُوْلٰىهُمْ لِاُخْرٰىهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟۠

மேலும், அவர்களில் முந்தைய கூட்டத்தார் பிந்தைய கூட்டத்தாரைப் பார்த்து “(நாங்கள் குற்றவாளிகள் என்றால்) எங்களைவிட நீங்கள் சிறந்தவர்களா என்ன? எனவே (இப்பொழுது) நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.

40

اِنَّ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا یَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰی یَلِجَ الْجَمَلُ فِیْ سَمِّ الْخِیَاطِ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُجْرِمِیْنَ ۟

(உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்:) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக்கூறி அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப்படமாட்டா! அவர்கள் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்று இயலாத ஒன்றாகும். மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலிதான் கிடைக்கும்.

41

لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟

அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், அவர்கள் போர்த்திக்கொள்ள நெருப்புப் போர்வைகளுமே கிடைக்கும். இவ்வாறே அக்கிரமக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்!

42

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ ؗ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

(இதற்கு மாறாக) எவர்கள் (நம்முடைய திருவசனங்கள் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ இது விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சக்திக்கு ஏற்பவே நாம் பொறுப்பினைச் சுமத்துகின்றோம் அவர்கள் சுவனவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.

43

وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ ۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ هَدٰىنَا لِهٰذَا ۫ وَمَا كُنَّا لِنَهْتَدِیَ لَوْلَاۤ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ؕ وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!”

44

وَنَادٰۤی اَصْحٰبُ الْجَنَّةِ اَصْحٰبَ النَّارِ اَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ؕ قَالُوْا نَعَمْ ۚ فَاَذَّنَ مُؤَذِّنٌ بَیْنَهُمْ اَنْ لَّعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ

பிறகு சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவையே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவைதாம் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அதற்கவர்கள், “ஆம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் ஒருவர் அறிவிப்பார்: அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக!

45

الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَ ۟ۘ

அவர்கள் (எத்தகையவர்களெனில்) அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தார்கள்; மேலும் அதனைக் கோணலாக்க விரும்பினார்கள்; மேலும் மறுமையை மறுத்தார்கள்.

46

وَبَیْنَهُمَا حِجَابٌ ۚ وَعَلَی الْاَعْرَافِ رِجَالٌ یَّعْرِفُوْنَ كُلًّا بِسِیْمٰىهُمْ ۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ سَلٰمٌ عَلَیْكُمْ ۫ لَمْ یَدْخُلُوْهَا وَهُمْ یَطْمَعُوْنَ ۟

மேலும், அவ்விரு பிரிவினருக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பு இருக்கும். அதன் உச்சிகளில் மனிதர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் (இப்பிரிவினர்) ஒவ்வொருவரையும் அவரவரின் முகக்கூறுகள் மூலம் அறிந்து கொள்வார்கள். மேலும், அவர்கள் சுவனவாசிகளை அழைத்துக் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்!” இவர்கள் இன்னும் சுவனம் புகவில்லை; ஆயினும் (அதனை அடைவதற்கு) ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.

47

وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَآءَ اَصْحٰبِ النَّارِ ۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟۠

மேலும், இவர்களின் பார்வைகள் நரக வாசிகளின் பக்கம் திரும்பும்போது கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இவ்வக்கிரமக்காரர்களோடு எங்களைச் சேர்த்துவிடாதே!”

48

وَنَادٰۤی اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا یَّعْرِفُوْنَهُمْ بِسِیْمٰىهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰی عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ ۟

பிறகு, உச்சிகளில் இருக்கும் இவர்கள் (நரகில் வீழ்ந்து கிடக்கும்) பெரும் பெரும் மனிதர்கள் சிலரை அவர்களுடைய முகக்கூறுகள் மூலம் அறிந்து அவர்களை அழைத்துக் கூறுவார்கள்: “(பார்த்தீர்களா!) உங்களுடைய கூட்டத்தினரும் நீங்கள் பெரிதாகக் கருதி வந்த சாதனங்களும் (இன்று) உங்களுக்கு எப்பலனையும் அளிக்கவில்லை.”

49

اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمْتُمْ لَا یَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍ ؕ اُدْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَیْكُمْ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟

மேலும், அல்லாஹ் இவர்களுக்கு எந்த அருளையும் வழங்கிடமாட்டான் என்று யாரைப் பற்றி நீங்கள் சத்தியம் செய்து கூறினீர்களோ, அவர்கள்தானே இந்த சொர்க்கவாசிகள்! (இன்று அவர்களை நோக்கியே கூறப்படும்:) “நுழைந்து விடுங்கள் சொர்க்கத்தில்! உங்களுக்கு யாதொரு அச்சமுமில்லை; நீங்கள் துயரப்படவும் மாட்டீர்கள்.”

50

وَنَادٰۤی اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ اَفِیْضُوْا عَلَیْنَا مِنَ الْمَآءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ؕ قَالُوْۤا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَی الْكٰفِرِیْنَ ۟ۙ

மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.”

51

الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ فَالْیَوْمَ نَنْسٰىهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ یَوْمِهِمْ هٰذَا ۙ وَمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟

அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது! (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்!”

52

وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰی عِلْمٍ هُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟

திண்ணமாக, நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். அது எத்தகையதென்றால், அறிவின் அடிப்படையில் நாம் அதில் (அனைத்தையும்) விவரித்திருக்கின்றோம். (மேலும் அது) இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும் ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.

53

هَلْ یَنْظُرُوْنَ اِلَّا تَاْوِیْلَهٗ ؕ یَوْمَ یَاْتِیْ تَاْوِیْلُهٗ یَقُوْلُ الَّذِیْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ۚ فَهَلْ لَّنَا مِنْ شُفَعَآءَ فَیَشْفَعُوْا لَنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠

இப்பொழுது சிலர் இவ்வேதம் எச்சரிக்கின்ற இறுதி முடிவைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கின்றார்களா? அந்த இறுதி முடிவு வந்துவிடும் நாளில், முன்பு அதனை அலட்சியம் செய்தவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: “உண்மையில் எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்! (இப்பொழுது) எங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு பரிந்துரையாளர் எவரும் எங்களுக்குக் கிடைப்பார்களா? அல்லது நாங்கள் முன்பு செய்து கொண்டிருந்ததைப் போல் அல்லாமல் வேறு செயல்களைச் செய்திட நாங்கள் திரும்ப அனுப்பப்படுவோமா?” அவர்கள் தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். மேலும், அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்தவை எல்லாம் இன்று அவர்களை விட்டுக் காணாமல் போய்விட்டன.

54

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۫ یُغْشِی الَّیْلَ النَّهَارَ یَطْلُبُهٗ حَثِیْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۭ بِاَمْرِهٖ ؕ اَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟

திண்ணமாக, அல்லாஹ்தான் உங்களுடைய அதிபதி; அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன! அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்.

55

اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْیَةً ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟ۚ

உங்கள் அதிபதியிடம் பணிந்தும், மெதுவாகவும் நீங்கள் இறைஞ்சுங்கள்! திண்ணமாக, அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.

56

وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا ؕ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِیْبٌ مِّنَ الْمُحْسِنِیْنَ ۟

மேலும், பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது.

57

وَهُوَ الَّذِیْ یُرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ حَتّٰۤی اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّیِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰی لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟

மேலும், அவனே தன்னுடைய அருள்மாரிக்கு முன்னர் நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான். பிறகு அவை (மழை நிறைந்த) கனமான மேகத்தைச் சுமந்து கொள்கின்றன. பின்னர் அவற்றை இறந்து போன பூமியின் பக்கமாக நாம் ஓட்டிச் செல்கின்றோம். பிறகு அங்கு மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் (இறந்து போயிருந்த அந்த பூமியிலிருந்தே) விதவிதமான கனிவகைகளை வெளிக் கொணர்கின்றோம். (பாருங்கள்!) இவ்வாறே இறந்தவர்களை (மீண்டும் உயிர்பெறச் செய்து) நாம் வெளிப்படுத்துகின்றோம். இவற்றின் மூலம் நீங்கள் படிப்பினை பெற்றிடக்கூடும்.

58

وَالْبَلَدُ الطَّیِّبُ یَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ۚ وَالَّذِیْ خَبُثَ لَا یَخْرُجُ اِلَّا نَكِدًا ؕ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّشْكُرُوْنَ ۟۠

நல்லபூமி தன்னுடைய இறைவனின் கட்டளைப் படி (நல்ல) விளைச்சலைத் தருகின்றது. ஆனால் கெட்ட பூமியோ மோசமான விளைச்சலைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்துவதில்லை. இவ்வாறே நாம், நன்றி செலுத்துகின்ற மக்களுக்கு நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் விவரித்துக் கூறுகின்றோம்.

59

لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟

திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தவரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. மகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”

60

قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

அதற்கு அவருடைய சமுதாயத் தலைவர்கள் பதில் கூறினார்கள்: “நீர் வெளிப்படையான வழிகேட்டில் மூழ்கியிருப்பதையே நாங்கள் காண்கின்றோம்.”

61

قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ ضَلٰلَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟

அதற்கு நூஹ் சொன்னார்: “என்னுடைய சமுதாயத்தவரே! நான் எந்த வழிகேட்டிலும் மூழ்கியிருக்கவில்லை. நான் அகிலத்தாருடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன்.

62

اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنْصَحُ لَكُمْ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். உங்களுக்கு நலம் நாடுபவனாகவும் இருக்கின்றேன். மேலும், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் அறிகின்றேன்.

63

اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ وَلِتَتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟

உங்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், தவறான நடத்தையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உங்கள் மீது இரக்கம் காட்டப்படுவதற்காகவும் உங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனுடைய அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா?”

64

فَكَذَّبُوْهُ فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ فِی الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِیْنَ ۟۠

ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யரென்று கூறிவிட்டார்கள். இறுதியில், நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் ஒரு கப்பலில் (ஏற்றி) காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களை நாம் மூழ்கடித்தோம். திண்ணமாக, அவர்கள் கண்மூடித்தனமாக வாழும் மக்களாக இருந்தார்கள்.

65

وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ ۟

மேலும், ‘ஆத்’ கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை எனவே, நீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டீர்களா?”

66

قَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ سَفَاهَةٍ وَّاِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكٰذِبِیْنَ ۟

(அவருடைய இக்கூற்றை) ஏற்க மறுத்த அவரது சமுதாயத் தலைவர்கள், “திண்ணமாக, நீர் அறியாமையில் உழல்வதை நாங்கள் காண்கின்றோம். மேலும், நீர் பொய்யராக இருப்பீரோ என்றும் நாங்கள் ஐயங்கொள்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.

67

قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ سَفَاهَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟

அதற்கு அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! நான் அறியாமையில் உழன்று கொண்டிருக்கவில்லை. மாறாக, நான் அகிலங்களுடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன்.

68

اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنَا لَكُمْ نَاصِحٌ اَمِیْنٌ ۟

நான் என் அதிபதியின் தூதுச்செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். மேலும், நான் உங்களின் நம்பிக்கைக்குரிய நலம்விரும்பியாக இருக்கின்றேன்.

69

اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِی الْخَلْقِ بَصْۜطَةً ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

உங்களை எச்சரிக்கை செய்வதற்காக உங்களுடைய சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனின் அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா? உங்களுடைய இறைவன் நூஹுடைய கூட்டத்தாருக்குப் பின் உங்களை (பூமியில்) வாரிசுகளாக்கினான். உங்களுக்கு நல்ல உடல் வலிமையையும், கம்பீரத்தையும் வழங்கியிருந்தான். இவற்றை நீங்கள் மறந்து விடாதீர்கள்! எனவே அல்லாஹ்வின் வியக்கத்தக்க ஆற்றல்களை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்!”

70

قَالُوْۤا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; எங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்தவற்றையெல்லாம் நாங்கள் விட்டுவிட வேண்டும் என்ப(தைச் சொல்வ)தற்காகவா நீர் எங்களிடம் வந்துள்ளீர்? நீர் உண்மையானவராயின் எந்த வேதனையைக் குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!”

71

قَالَ قَدْ وَقَعَ عَلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌ ؕ اَتُجَادِلُوْنَنِیْ فِیْۤ اَسْمَآءٍ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟

அதற்கு அவர் கூறினார்: “உங்கள் இறைவனின் வேதனையும் சினமும் உங்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஏற்படுத்திக்கொண்ட பெயர்களைக் குறித்தா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள்? அல்லாஹ் அவற்றிற்கு எந்த ஆதாரமும் இறக்கி வைக்கவில்லை! எனவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.”

72

فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِیْنَ ۟۠

இறுதியில் நமது அருளைக்கொண்டு ஹூதையும் அவருடைய தோழர்களையும் நாம் காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, மேலும், நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் நாம் வேருடன் களைந்தோம்.

73

وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

மேலும், ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளது. எனவே, அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்வீர்களாயின் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.

74

وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِی الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُیُوْتًا ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟

மேலும், நினைத்துப் பாருங்கள்; ஆத் சமுதாயத்திற்குப் பின் அல்லாஹ் உங்களை வாரிசுகளாக்கினான். மேலும், இப்பூமியில் சிறப்பான வசதிகளையும் உங்களுக்கு வழங்கினான். இப்போது அதன் சமவெளிகளில் நீங்கள் பிரம்மாண்டமான மாளிகைகளை எழுப்புகின்றீர்கள்; மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். எனவே, அல்லாஹ்வின் (வல்ல மைக்குச் சான்றான) அருட்கொடைகளை நினைவு கூருங்கள்! மேலும், பூமியில் குழப்பம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்!”

75

قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ۟

அவருடைய சமுதாயத்தவரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள், இறைநம்பிக்கை கொண்டிருந்த பலவீனமான மக்களை நோக்கி வினவினார்கள்: “உண்மையில் ஸாலிஹ் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எச்செய்தியுடன் அவர் அனுப்பப்பட்டுள்ளாரோ அதனை நாங்கள் திண்ணமாக ஏற்றுக் கொள்கின்றோம்.”

76

قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِیْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟

அதற்கு அந்த ஆணவக்காரர்கள், “எதனை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்களோ, அதனை நாங்கள் மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.

77

فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا یٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِیْنَ ۟

பிறகு அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள்; தம்முடைய இறைவனின் ஆணையை ஆணவத்துடன் மீறினார்கள். மேலும், (ஸாலிஹிடம்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையில் இறைத்தூதர்களில் நீரும் ஒருவர்தாம் என்றால், எந்த வேதனை குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!”

78

فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟

இறுதியில் திடுக்குறச் செய்யும் ஒரு நிலநடுக்கம் அவர்களைத் தாக்கியது. உடனே, அவர்கள் தம்முடைய இல்லங்களில் முகங்குப்புற விழுந்து இறந்து கிடந்தார்கள்!

79

فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِیْنَ ۟

பிறகு, ஸாலிஹ் “என் சமூகத்தாரே! நான் என்னுடைய இறைவனின் தூதுச் செய்தியை உங்களிடம் எடுத்துரைத்து விட்டேன். மேலும், நான் உங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தேன். ஆயினும் (நான் என்ன செய்ய முடியும்?) உங்களுக்கு நலன் நாடியவர்களை நீங்கள் நேசிக்கவில்லையே!” என்று கூறியவாறு அவர்களின் ஊரை விட்டு வெளியேறினார்.

80

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟

பிறகு, லூத்தை நாம் தூதராக அனுப்பினோம். அவர் தம்முடைய சமுதாயத்தாரை நோக்கி இவ்வாறு கூறியதை நினைத்துப் பாருங்கள்: “இந்த மானக்கேடான செயலைச் செய்கின்ற (அளவுக்கு நீங்கள் வெட்கமற்ற) வர்களாகி விட்டீர்களா? உங்களுக்கு முன்னர் அகிலத்தாரில் எவருமே இதனைச் செய்ததில்லை.

81

اِنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟

பெண்களை விடுத்து ஆண்களிடம் உங்களுடைய இச்சையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றீர்கள். உண்மை யாதெனில், நீங்கள் முற்றிலும் வரம்பு மீறிய கூட்டத்தார் ஆவீர்கள்.”

82

وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟

அதற்கு அக் கூட்டத்தார் இதைத்தான் பதிலாய்க் கூறினார்கள்: “இவர்களை உங்களுடைய ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் போல் நடக்கின்றார்கள்.”

83

فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ۖؗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟

இறுதியில் லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் (வேதனையை அனுபவிக்க) பின்தங்கி விட்டவர்களில் ஒருத்தி யாக இருந்தாள்.

84

وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ؕ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟۠

பிறகு அக்கூட்டத்தார்கள் மீது நாம் பொழிந்தோம் (கல்) மழையை! பிறகு பாருங்கள், அக்குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று?

85

وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ

மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரரான ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துள்ளது. எனவே, அளவையை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள்; மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள்; பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள்! உண்மையிலேயே நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது.

86

وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَاذْكُرُوْۤا اِذْ كُنْتُمْ قَلِیْلًا فَكَثَّرَكُمْ ۪ وَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟

மேலும் (வாழ்வின்) ஒவ்வொரு பாதையிலும் (கொள்ளைக்காரர்கள் போல) மக்களைப் பயமுறுத்துபவர்களாகவும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பவர்களாகவும் இருக்காதீர்கள்; மேலும், நேரான வழியைக் கோணலாக்க முயலாதீர்கள்! நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பிறகு அல்லாஹ் உங்களைப் பல்கிப்பெருகச் செய்தான். இன்னும் (கண்திறந்து) பாருங்கள்; (உலகில்) குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை!

87

وَاِنْ كَانَ طَآىِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِیْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآىِٕفَةٌ لَّمْ یُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰی یَحْكُمَ اللّٰهُ بَیْنَنَا ۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟

நான் என்னென்ன அறிவுரைகளுடன் அனுப்பப்பட்டுள்ளேனோ அவற்றின் மீது உங்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டும், மற்றொரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாமலும் இருந்தீர்களானால், அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையுடன் (காத்துக் கொண்டு) இருங்கள்! அவனே தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவன்.”

88

قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ یٰشُعَیْبُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْیَتِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كٰرِهِیْنَ ۟۫

அவருடைய சமுதாயத்தாரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே! உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நாங்கள் நிச்சயமாக எங்களுடைய ஊரை விட்டு வெளியேற்ற வேண்டிவரும். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்ப வேண்டியிருக்கும்.” அதற்கு ஷுஐப் பதில் தந்தார்: “நாங்கள் விரும்பாதவர்களாய் இருந்தாலுமா (எங்களைவற்புறுத்தி உங்கள் மார்க்கத்திற்குத் திருப்பி விடுவீர்கள்)?

89

قَدِ افْتَرَیْنَا عَلَی اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِیْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَا ؕ وَمَا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّعُوْدَ فِیْهَاۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ؕ رَبَّنَا افْتَحْ بَیْنَنَا وَبَیْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَیْرُ الْفٰتِحِیْنَ ۟

உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் அதன் பக்கமே நாங்கள் திரும்பினால், நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்களாய் ஆவோம்! மேலும், நாங்கள் அம்மார்க்கத்திற்குத் திரும்பி வருவது எங்களைப் பொறுத்து (எவ்விதத்திலும்) சாத்தியமானதன்று; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி! எங்கள் இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் முழுமையாகச் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவனே! எங்களுக்கும், எங்களின் சமுதாயத்தாருக்குமிடையில் சரியாகத் தீர்ப்பளிப்பாயாக! நீயே சிறப்பாகத் தீர்ப்பு வழங்குபவனாய் இருக்கிறாய்.”

90

وَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَیْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟

(அவர் கூறியதை) ஏற்க மறுத்துவிட்ட அவருடைய சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (தமக்கிடையே) கூறிக் கொண்டார்கள்: “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக அழிந்து போவீர்கள்.”

91

فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟

ஆனால் (நடந்தது என்னவெனில்) திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தார்கள்.

92

الَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ۛۚ اَلَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِیْنَ ۟

(ஆம்!) ஷுஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள் அவ்வில்லங்களில் வசிக்காதவர்கள் போன்று அடியோடு அழிந்து போய் விட்டார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள்தாம் இறுதியில் இழப்புக்குரியவர்களானார்கள்.

93

فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ ۚ فَكَیْفَ اٰسٰی عَلٰی قَوْمٍ كٰفِرِیْنَ ۟۠

மேலும், ஷுஐப், “என்னுடைய சமுதாயத்தாரே! நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். மேலும், உங்களுக்கு நலன் நாடும் பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். ஆனால் சத்தியத்தை மறுக்கின்ற சமுதாயத்தவர்மீது நான் எவ்வாறு அனுதாபம் கொள்வேன்?” என்று கூறியபடி (அவ்வூரைவிட்டு) வெளியேறிவிட்டார்.

94

وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّبِیٍّ اِلَّاۤ اَخَذْنَاۤ اَهْلَهَا بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ یَضَّرَّعُوْنَ ۟

நாம் நபியை அனுப்பி வைத்த எந்த ஊர் மக்களையும் அவர்கள் பணிந்து நடந்திட வேண்டும் என்பதற்காக, (முதலில்) கடுமையான துன்ப துயரங்களைக் கொண்டு சோதிக்காமல் இருக்கவில்லை.

95

ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّیِّئَةِ الْحَسَنَةَ حَتّٰی عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

பிறகு அவர்களின் துன்பத்தை இன்பமாய் மாற்றினோம். எந்த அளவுக்கு எனில் அவர்கள் இன்ப நலத்தில் நன்கு திளைத்து, “எங்களின் முன்னோர்களுக்குங்கூட துன்பமும் இன்பமும் ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தன” என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் எதிர்பாராத நிலையில், திடீரென்று அவர்களைப் பிடித்தோம்.

96

وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

ஆனால், அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுள்ள நடத்தையை மேற் கொண்டிருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்க(ளின் வாயில்)கள் அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம். ஆனால், அவர்கள் சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தார்கள். எனவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீய செயல்களின் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம்.

97

اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا بَیَاتًا وَّهُمْ نَآىِٕمُوْنَ ۟ؕ

இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களைத் திடீரென தாக்காது என்று இவ்வூர்களில் வாழும் மக்கள் அச்சமற்று இருக்கிறார்களா?

98

اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا ضُحًی وَّهُمْ یَلْعَبُوْنَ ۟

அல்லது பகலில் அவர்கள் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே நம்முடைய வேதனை அவர்களைத் தாக்காது என்று இவர்கள் நிம்மதியுடன் இருக்கின்றார்களா?

99

اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ فَلَا یَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ۟۠

என்ன, இம்மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருக்கின்றார்களா? உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருப்பார்கள்.

100

اَوَلَمْ یَهْدِ لِلَّذِیْنَ یَرِثُوْنَ الْاَرْضَ مِنْ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟

முன்பு வாழ்ந்து சென்ற புவிவாழ் மக்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசாக வந்துள்ள இவர்களுக்கு இந்த உண்மை படிப்பினை தரவில்லையா? (அது யாதெனில்), நாம் நாடினால், இவர்களின் பாவங்கள் காரணமாக இவர்களைத் தண்டித்திட முடியும் என்பது! (ஆனால் இவர்கள் இத்தகைய படிப்பினை மிக்க பேருண்மைகளில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.) மேலும், இவர்களுடைய உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம். எனவே, இவர்கள் (எதனையும்) செவியேற்பதில்லை.

101

تِلْكَ الْقُرٰی نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآىِٕهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی قُلُوْبِ الْكٰفِرِیْنَ ۟

அவ்வூர்களின் வரலாறுகளை உமக்கு நாம் கூறுகின்றோம். (அவை உமக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன.) அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அம்மக்கள் முன்னர் எதனைப் பொய்யெனக் கூறிவிட்டிருந்தார்களோ அதனைப் பிறகு அவர்கள் ஏற்பவர்களாயில்லை. (பாருங்கள்) இவ்வாறே சத்தியத்தை மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகின்றான்!

102

وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍ ۚ وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِیْنَ ۟

அவர்களில் பெரும்பாலோரிடம் வாக்குறுதி பேணும் பண்பினை நாம் காணவில்லை. மாறாக அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே நாம் காண்கிறோம்.

103

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَظَلَمُوْا بِهَا ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟

பின்னர், (மேற்கூறப்பட்ட) அந்தச் சமூகங்கள் சென்ற பிறகு மூஸாவை, நம்முடைய சான்றுகளோடு ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத்தின் தலைவர்களிடமும் நாம் அனுப்பினோம். ஆயினும், அவர்களும் நம்முடைய சான்றுகளுக்கு அநீதி இழைத்தார்கள். எனவே, பாருங்கள் (இவ்வாறு) குழப்பம் செய்து திரிந்த அவர்களின் கதி என்னவாயிற்று என்பதை!

104

وَقَالَ مُوْسٰی یٰفِرْعَوْنُ اِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

மூஸா கூறினார்: “ஃபிர்அவ்னே! நான் அகிலமனைத்தின் அதிபதியிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன்.

105

حَقِیْقٌ عَلٰۤی اَنْ لَّاۤ اَقُوْلَ عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ قَدْ جِئْتُكُمْ بِبَیِّنَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاَرْسِلْ مَعِیَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ

அல்லாஹ்வின் பெயரால் சத்தியத்தைத் தவிர வேறெதனையும் சொல்லமாட்டேன். இதுவே என்னுடைய பொறுப்பாகும். நான் உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். எனவே, நீ இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை என்னுடன் அனுப்பி வைத்துவிடு!”

106

قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰیَةٍ فَاْتِ بِهَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

அதற்கு ஃபிர்அவ்ன், “நீர் தெளிவான சான்று ஏதேனும் கொண்டு வந்திருப்பீராயின் நீர் (உம்முடைய வாதத்தில்) உண்மையானவரானால் அதனைக் காட்டும் பார்க்கலாம்!” என்று கூறினான்.

107

فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ

அப்போது மூஸா தம்முடைய கைத்தடியை எறிந்தார். உடனே அது உயிருள்ள பெரியதொரு பாம்பாக மாறியது.

108

وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠

பிறகு அவர் தமது (கட்கத்திலிருந்து) கையை வெளியே எடுத்தார். பார்ப்பவர் முன்னிலையில் அது வெண்மையாய்ப் பளிச்சிட்டது.

109

قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ

(இதனைக் கண்ணுற்ற) ஃபிர்அவ்னுடைய சமுதாயத் தலைவர்கள், “உண்மையிலேயே இவர் ஒரு திறமை மிக்க மந்திரவாதிதான்.

110

یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ ۚ فَمَاذَا تَاْمُرُوْنَ ۟

உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்றிவிட இவர் நினைக்கிறார். இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்” என்று தமக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

111

قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَاَرْسِلْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ

பிறகு அவர்கள் எல்லாரும் (ஃபிர்அவ்னுக்கு) ஆலோசனை கூறினார்கள்: “இவரையும் இவருடைய சகோதரரையும் சற்று நிறுத்தி வையுங்கள்! எல்லா ஊர்களுக்கும் ஆட்களை அனுப்புங்கள்

112

یَاْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟

தேர்ச்சி பெற்ற மந்திரவாதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி உங்களிடம் அழைத்து வருவதற்காக (ஆட்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்புங்கள்).

113

وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟

அவ்வாறே மந்திரவாதிகள் அனைவரும் ஃபிர்அவ்னிடம் வந்தார்கள். “நாங்கள் வெற்றி பெற்றால் அதற்கான வெகுமதி எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் அல்லவா?” என்று கேட்டார்கள்.

114

قَالَ نَعَمْ وَاِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟

அதற்கு ஃபிர்அவ்ன், “ஆம்! மேலும், திண்ணமாக நீங்கள் அரசவையில் நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்று பதிலுரைத்தான்.

115

قَالُوْا یٰمُوْسٰۤی اِمَّاۤ اَنْ تُلْقِیَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِیْنَ ۟

பிறகு அவர்கள் மூஸாவிடம் கேட்டார்கள்: “நீர் எறிகிறீரா அல்லது நாங்கள் எறியட்டுமா?”

116

قَالَ اَلْقُوْا ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْیُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِیْمٍ ۟

அதற்கு மூஸா, “நீங்களே எறியுங்கள்!” என்று கூறினார். அவர்கள் (தம்முடைய மந்திர சாதனங்களை) எறிந்தபோது (அவற்றின் மூலம்) மக்களின் கண்களை மயக்கி அவர்களைப் பீதிகொள்ளச் செய்தார்கள்; இவ்வாறு மாபெரும் சூனியத்தைச் செய்து காட்டினார்கள்.

117

وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَلْقِ عَصَاكَ ۚ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚ

“நீர் உமது கைத்தடியைப் போடும்!” என்று நாம் மூஸாவுக்கு அறிவித்தோம். அவர் அதனைக் கீழே போட்டதும் அது அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் (நொடிப் பொழுதில்) விழுங்கி விட்டது!

118

فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ

இவ்வாறு சத்தியம், சத்தியம்தான் என்று உறுதியாயிற்று. அவர்கள் செய்தவை யாவும் வீணாகி விட்டன.

119

فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِیْنَ ۟ۚ

(ஃபிர்அவ்னும்) அவனுடைய நண்பர்களும் (வெற்றிவாகை சூடுவதற்குப் பதிலாக) இழிவை அடைந்தார்கள். அங்கே (போட்டி அரங்கில்) முறியடிக்கப்பட்டார்கள்.

120

وَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۚۖ

மேலும், அந்த மந்திரவாதிகளின் நிலை என்னவாயிற்று எனில், ஏதோ ஓர் உள்ளுணர்வு அவர்களை ஸஜ்தாவில் வீழ்த்தியது;

121

قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அகிலங்களின் அதிபதியை!

122

رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟

மூஸா மற்றும் ஹாரூனின் அதிபதியை!”

123

قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِی الْمَدِیْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَاۤ اَهْلَهَا ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟

ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பே நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? திண்ணமாக, இந்தத் தலைநகரில் நீங்கள் மேற் கொண்ட சூழ்ச்சியாகும் இது; இங்குள்ள ஆட்சியாளர்களை இங்கிருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டுமென்பதற்காக! விரைவில் (இதன் விளைவை) நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

124

لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟

திண்ணமாக, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் ஏற்றிவிடுவேன்.”

125

قَالُوْۤا اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ

அவர்கள் பதில் கூறினார்கள்: “(எவ்வாறாயினும்) நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்.

126

وَمَا تَنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰیٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِیْنَ ۟۠

எங்கள் இறைவனுடைய சான்றுகள் எங்களிடம் வந்துவிட்டன; அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம் எனும் காரணத்திற்காகத்தான் நீ எங்களை பழிவாங்க நாடுகிறாய்! எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறு மையை அருள்வாயாக! மேலும், உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையிலேயே எங்களை மரணிக்கச் செய்வாயாக!”

127

وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰی وَقَوْمَهٗ لِیُفْسِدُوْا فِی الْاَرْضِ وَیَذَرَكَ وَاٰلِهَتَكَ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْیٖ نِسَآءَهُمْ ۚ وَاِنَّا فَوْقَهُمْ قٰهِرُوْنَ ۟

ஃபிர்அவ்னின் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (ஃபிர்அவ்னிடம்) கேட்டார்கள்: “பூமியில் குழப்பம் விளைவிப்பதற்காகவும் உமக்கும் உம்முடைய கடவுள்களுக்கும் பணிந்து வாழ்வதைக் கைவிட்டு விடுவதற்குமா மூஸாவையும் அவருடைய சமூகத்தாரையும் நீர் விட்டு வைக்கின்றீர்?” அதற்கு ஃபிர்அவ்ன் பதிலளித்தான்: “நாம் அவர்களுடைய ஆண்மக்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பெண்மக்களை (மட்டும்) உயிர் வாழ விடுவோம். திண்ணமாக, அவர்கள் மீது நம்முடைய ஆதிக்கம் வலுவாக இருக்கிறது.”

128

قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اسْتَعِیْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ۫ یُوْرِثُهَا مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟

மூஸா, தம் மக்களை நோக்கிக் கூறினார்: “அல்லாஹ்விடம் உதவி கோருங்கள்; மேலும், பொறுமையை மேற்கொள்ளுங்கள்! திண்ணமாக, இந்த பூமி அல்லாஹ்வுக்கு உரியது. தன் அடிமைகளில் தான் நாடுவோரை அதற்கு அவன் உரிமையாக்குகிறான். இன்னும் அவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்பவர்களுக்கே இறுதி வெற்றி இருக்கிறது.”

129

قَالُوْۤا اُوْذِیْنَا مِنْ قَبْلِ اَنْ تَاْتِیَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا ؕ قَالَ عَسٰی رَبُّكُمْ اَنْ یُّهْلِكَ عَدُوَّكُمْ وَیَسْتَخْلِفَكُمْ فِی الْاَرْضِ فَیَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟۠

அதற்கு மூஸாவின் சமுதாயத்தார் கூறினார்கள்: “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டோம். இப்போது, எங்களிடம் நீர் வந்த பின்பும் (துன்புறுத்தப்பட்டு வருகின்றோம்).” அதற்கு மூஸா பதிலுரைத்தார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்துவிட்டு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது.”

130

وَلَقَدْ اَخَذْنَاۤ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِیْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பல ஆண்டுகளாய் நீடித்த பஞ்சத்தினாலும், விளைபொருள் குறைவினாலும் சோதித்தோம்; அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும் என்பதற்காக!

131

فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّطَّیَّرُوْا بِمُوْسٰی وَمَنْ مَّعَهٗ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

ஆனால் (அவர்களின் நிலை எவ்வாறிருந்ததெனில்) அவர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டால், “நாங்கள் இதற்கு உரியவர்கள்தாம்!” என்று கூறுவார்கள்; அவர்களுக்கு கெட்டகாலம் ஏற்பட்டு விட்டாலோ மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாய்க் கருதுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: உண்மையில் அவர்களுடைய அபசகுனம் அல்லாஹ்விடமே இருக்கிறது. ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாயிருந்தார்கள்.

132

وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰیَةٍ لِّتَسْحَرَنَا بِهَا ۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟

அவர்கள் (மூஸாவிடம்) கூறினார்கள்: “நீர் எங்களைக் கவர்ந்திழுப்பதற்காக எந்தச் சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தாலும், நாங்கள் நீர் கூறுவதை ஏற்றுக்கொள்பவர்களாய் இல்லை.”

133

فَاَرْسَلْنَا عَلَیْهِمُ الطُّوْفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰیٰتٍ مُّفَصَّلٰتٍ ۫ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟

இறுதியில் நாம் அவர்கள் மீது புயல் மழையை அனுப்பினோம்; மேலும், வெட்டுக்கிளியை ஏவினோம்; பேன்களைப் பரப்பினோம்; தவளைகளைப் பெருகச் செய்தோம்; இரத்தத்தைப் பொழியச் செய்தோம். இந்தச் சான்றுகள் அனைத்தையும் தனித்தனியே காண்பித்தோம். ஆயினும், அவர்கள் ஆணவம் கொண்டு நடந்தனர்; கொடூர குற்றவாளிகளாகவும் இருந்தனர்.

134

وَلَمَّا وَقَعَ عَلَیْهِمُ الرِّجْزُ قَالُوْا یٰمُوْسَی ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ لَىِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ

(எப்பொழுதேனும்) அவர்களுக்குத் துன்பம் நேர்ந்தால், அவர்கள் கூறுவார்கள்: “மூஸாவே! உம்முடைய இறைவனிடம் உமக்கு அவன் அளித்துள்ள அந்தஸ்தைக் கொண்டு எங்களுக்காக நீர் பிரார்த்தனை புரியும்; எங்களை விட்டு இத்துன்பத்தை நீர் நீக்கச் செய்தால், திண்ணமாக, நாங்கள் உம் கூற்றை ஏற்றுக்கொள்வோம்; இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் உம்முடன் அனுப்பி வைப்போம்.”

135

فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰۤی اَجَلٍ هُمْ بٰلِغُوْهُ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟

ஆயினும், எந்த நிலையிலும் அவர்கள் அடையவிருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களை விட்டு வேதனையை நாம் நீக்கிவிட்டாலோ உடனே அவர்கள் (தம் வாக்குறுதியை) முறித்துவிடுகின்றார்கள்.

136

فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِی الْیَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟

ஆகையால் அவர்களை நாம் பழிவாங்கினோம்; மேலும், கடலிலே அவர்களை மூழ்கடித்தோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள்; மேலும், அவற்றைக் குறித்து அலட்சியமாகவும் இருந்தார்கள்.

137

وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِیْنَ كَانُوْا یُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰی عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬ بِمَا صَبَرُوْا ؕ وَدَمَّرْنَا مَا كَانَ یَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا یَعْرِشُوْنَ ۟

பிறகு (இவர்களுக்குப் பதிலாக) பலவீனமாக்கப்பட்டிருந்த மக்களை, நம்மால் அருள்வளமாக்கப்பட்ட பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும் மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசுகளாக்கினோம். (இவ்வாறாக) உம் இறைவனின் சிறப்பான வாக்குறுதி இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஏனென்றால், அவர்கள் பொறுமையை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், ஃபிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தாரும் உருவாக்கியிருந்தவற்றையும், உயர்த்திக் கட்டியிருந்தவற்றையும் நாம் பாழாக்கி விட்டோம்.

138

وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتَوْا عَلٰی قَوْمٍ یَّعْكُفُوْنَ عَلٰۤی اَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوْا یٰمُوْسَی اجْعَلْ لَّنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟

நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்க வைத்தோம். பின்னர் (அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தபோது) தம் சிலைகள் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது. (உடனே) அவர்கள் “மூஸாவே! இம்மக்களுக்கு கடவுள்கள் இருப் பதுபோல் எங்களுக்கும் ஒரு கடவுளை உருவாக்கித் தாரும்!” என்று கூறலானார்கள். அதற்கு மூஸா கூறினார்: “திண்ணமாக, நீங்கள் அறிவில்லாமல் பேசும் கூட்டத்தினராய் இருக்கின்றீர்கள்.

139

اِنَّ هٰۤؤُلَآءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِیْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழிமுறை நிச்சயம் அழிந்து போகக்கூடியதாகும். இவர்கள் செய்து கொண்டிருப்பவை (முற்றிலும்) வீணானவையாகும்.”

140

قَالَ اَغَیْرَ اللّٰهِ اَبْغِیْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟

மேலும், மூஸா கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர வேறொரு கடவுளையா நான் உங்களுக்காகத் தேடுவேன்? உண்மையில் அவனே உங்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மை ஆக்கியுள்ளான்.”

141

وَاِذْ اَنْجَیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ ۚ یُقَتِّلُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠

மேலும் (அல்லாஹ் கூறுகின்றான்:) “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனை அளித்துக் கொண்டிருந்தார்கள்; உங்களுடைய ஆண்மக்களைக் கொலை செய்து, உங்களுடைய பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்திருந்தார்கள். மேலும், இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.”

142

وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟

நாம் மூஸாவுக்கு முப்பது இரவுகளை (நாட்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். பிறகு அவற்றோடு பத்து இரவுகளை அதிகப்படுத்தினோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூஸா (சினாய் மலைக்குச் சென்றபோது) தம் சகோதரர் ஹாரூனிடம், “நான் சென்ற பிறகு நீர் என்னுடைய கூட்டத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, சீராகச் செயல் புரிந்து வருவீராக! மேலும், குழப்பம் விளைவிப்போரின் நடைமுறையினை மேற்கொள்ளாதீர்!” என்று கூறினார்.

143

وَلَمَّا جَآءَ مُوْسٰی لِمِیْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِیْۤ اَنْظُرْ اِلَیْكَ ؕ قَالَ لَنْ تَرٰىنِیْ وَلٰكِنِ انْظُرْ اِلَی الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِیْ ۚ فَلَمَّا تَجَلّٰی رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰی صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَیْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِیْنَ ۟

நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூஸா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது அவர் வேண்டினார்: “என் இறைவா! எனக்கு உன்னைப் பார்க்கும் வலிமையை வழங்குவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” அதற்கு இறைவன் கூறினான்: “என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும்.” அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது பொடிப் பொடியாகிவிட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது கூறினார்: “நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீளுகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன்.”

144

قَالَ یٰمُوْسٰۤی اِنِّی اصْطَفَیْتُكَ عَلَی النَّاسِ بِرِسٰلٰتِیْ وَبِكَلَامِیْ ۖؗ فَخُذْ مَاۤ اٰتَیْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟

அதற்கு அல்லாஹ், “மூஸாவே! என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விட (முன்னுரிமை வழங்கி) உம்மை நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். எனவே, நான் உமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொள்வீராக! மேலும், நன்றி செலுத்து வோராய்த் திகழ்வீராக!” என்று கூறினான்.

145

وَكَتَبْنَا لَهٗ فِی الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَیْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِیْلًا لِّكُلِّ شَیْءٍ ۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّاْمُرْ قَوْمَكَ یَاْخُذُوْا بِاَحْسَنِهَا ؕ سَاُورِیْكُمْ دَارَ الْفٰسِقِیْنَ ۟

இதன் பின்னர், நாம் மூஸாவுக்கு (வாழ்க்கைத் துறை) ஒவ்வொன்றுக்கும் வேண்டிய அறிவுரையையும், ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தையும் பலகைகளில் எழுதிக் கொடுத்தோம். மேலும், (நாம் அவருக்குக் கூறினோம்:) “இந்த அறிவுரைகளை நீர் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், இவற்றிலுள்ள சிறந்த கருத்துகளைப் பின்பற்றும்படி உம்முடைய சமுதாயத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக! அதிவிரைவில் பாவம் புரிவோர்க்குரிய இருப்பிடத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.

146

سَاَصْرِفُ عَنْ اٰیٰتِیَ الَّذِیْنَ یَتَكَبَّرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ۚ وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الرُّشْدِ لَا یَتَّخِذُوْهُ سَبِیْلًا ۚ وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الْغَیِّ یَتَّخِذُوْهُ سَبِیْلًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟

பூமியில் நியாயமின்றிப் பெருமை கொள்பவர்(களின் பார்வை)களை என்னுடைய சான்றுகளை விட்டு நான் திருப்பி விடுவேன். அவர்கள் எந்தச் சான்றுகளைக் கண்டாலும் (ஒருபோதும்) அவற்றின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும், நேர்வழியினை(த் தம் கண்ணெதிரே) அவர்கள் கண்டாலும்கூட அதனை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், வழிகேடான பாதையைக் காண்பார்களானால், அதனை மேற்கொள்ள முனைந்து விடுகின்றார்கள். அதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள். மேலும், அவற்றை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

147

وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَلِقَآءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْ ؕ هَلْ یُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠

எனவே எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் எனக் கூறினார்களோ, மேலும் மறுமைநாளைச் சந்திக்க இருப்பதையும் மறுத்தார்களோ அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தாங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்குரிய கூலியைத் தவிர வேறு எதனை இவர்கள் பெறமுடியும்?”

148

وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰی مِنْ بَعْدِهٖ مِنْ حُلِیِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ ؕ اَلَمْ یَرَوْا اَنَّهٗ لَا یُكَلِّمُهُمْ وَلَا یَهْدِیْهِمْ سَبِیْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِیْنَ ۟

மூஸா (சினாய் மலைக்குச்) சென்ற பிறகு அவருடைய சமூகத்தார் தங்களுடைய ஆபரணங்களை உருக்கி, கன்றுக்குட்டியின் வடிவத்தை உருவாக்கி(வணங்கி)னார்கள். அதற்கு மாட்டின் சப்தம் இருந்தது. அது அவர்களிடம் பேசுவதுமில்லை; (எந்த விவகாரங்களிலும்) அவர்களுக்கு வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? ஆயினும், அதனை அவர்கள் தெய்வமாக்கிக் கொண்டார்கள். மேலும், அவர்கள் பெரும் அக்கிரமக்காரர்களாகிவிட்டார்கள்.

149

وَلَمَّا سُقِطَ فِیْۤ اَیْدِیْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْا ۙ قَالُوْا لَىِٕنْ لَّمْ یَرْحَمْنَا رَبُّنَا وَیَغْفِرْ لَنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟

பிறகு அவர்கள் உருவாக்கியவை அனைத்தும் தகர்ந்துவிட்டன; மேலும், உண்மையிலேயே வழிதவறிவிட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்போது அவர்கள் கூறலானார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கருணை புரிந்து, எங்களுக்கு மன்னிப்பு வழங்கியிராவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குள்ளாகியிருப்போம்!”

150

وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟

மூஸா தம் சமுதாயத்தாரிடம் கோபமும் வேதனையும் கொண்டவராகத் திரும்பினார். வந்தவுடனேயே அவர் கூறினார்: “நான் சென்ற பிறகு என்னுடைய பிரதிநிதிகளாய் இருந்து நீங்கள் செய்த செயல் எத்துணைக் கெட்டது! உங்கள் இறைவனின் கட்டளையை எதிர்பார்த்துப் பொறுமையாய் இருந்திடக் கூடாதா?” மேலும் பலகைகளைப் போட்டுவிட்டார்; மேலும் தம் சகோதரரின் (ஹாரூனின்) தலை(முடி)யைப் பிடித்து இழுத்தார். ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே! இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர்! மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்!”

151

قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَلِاَخِیْ وَاَدْخِلْنَا فِیْ رَحْمَتِكَ ۖؗ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟۠

(அப்போது) மூஸா, “என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக! நீ அனைவரையும்விட அதிகம் கருணை புரிபவனாவாய்” என்று இறைஞ்சினார்.

152

اِنَّ الَّذِیْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَیَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّةٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُفْتَرِیْنَ ۟

(அதற்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது:) “எவர்கள் கன்றுக்குட்டியைத் தெய்வமாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் நிச்சயம் தம் இறைவனின் சினத்திற்கு ஆளாகியே தீருவார்கள். மேலும், உலக வாழ்விலும் இழிவுக்குரியவர்களாகி விடுவார்கள். பொய் புனைந்துரைப்பவர்களுக்கு நாம் இவ்வாறே தண்டனை அளிக்கின்றோம்.

153

وَالَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِهَا وَاٰمَنُوْۤا ؗ اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟

மேலும், எவர்கள் தீவினைகள் புரிகின்றார்களோ, பின்னர் அவற்றிலிருந்து விலகி மன்னிப்புக்கோரி இறைநம்பிக்கையும் கொண்டார்களேயானால், அதன் பிறகு திண்ணமாக உம் இறைவன் அவர்களை அதிகம் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கின்றான்.”

154

وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَی الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖۚ وَفِیْ نُسْخَتِهَا هُدًی وَّرَحْمَةٌ لِّلَّذِیْنَ هُمْ لِرَبِّهِمْ یَرْهَبُوْنَ ۟

மேலும், மூஸாவுக்குக் கோபம் தணிந்தபோது அப்பலகைகளை அவர் எடுத்துக் கொண்டார். மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ அவர்களுக்கு அவற்றில் எழுதப்பட்டிருந்த அறிவுரைகளில் வழிகாட்டலும் அருளும் இருந்தன.

155

وَاخْتَارَ مُوْسٰی قَوْمَهٗ سَبْعِیْنَ رَجُلًا لِّمِیْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِیَّایَ ؕ اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِیَ اِلَّا فِتْنَتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِیْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ ۟

மேலும், மூஸா தம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களில் எழுபது பேரை நாம் குறிப்பிட்ட நேரத்தி(ல் தம்முடன் வருவத)ற்காகத் தேர்ந்தெடுத்தார். கடும் பூகம்பம் அவர்களைத் தாக்கியபோது மூஸா இறைஞ்சினார்: “என் இறைவனே! நீ நாடியிருந்தால் அவர்களையும் என்னையும் முன்பே அழித்துவிட்டிருக்க முடியும்! எங்களில் சில அறிவிலிகள் செய்த தவறுகளுக்காக எங்கள் அனைவரையும் அழிக்கப்போகின்றாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை; இதன் மூலம் நீ நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறாய்; இன்னும் நீ நாடுகின்றவர்களுக்கு நேர்வழியைக் காண்பிக்கின்றாய். எங்கள் பாதுகாவலன் நீயே! எனவே எங்களை மன்னித்து, மேலும் எங்கள் மீது கருணை புரிவாயாக! நீ எல்லோரையும் விட அதிகம் மன்னிப்பவனாய் இருக்கின்றாய்.”

156

وَاكْتُبْ لَنَا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَیْكَ ؕ قَالَ عَذَابِیْۤ اُصِیْبُ بِهٖ مَنْ اَشَآءُ ۚ وَرَحْمَتِیْ وَسِعَتْ كُلَّ شَیْءٍ ؕ فَسَاَكْتُبُهَا لِلَّذِیْنَ یَتَّقُوْنَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِیْنَ هُمْ بِاٰیٰتِنَا یُؤْمِنُوْنَ ۟ۚ

இன்னும், “எங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நன்மையை எழுதிவைப்பாயாக! திண்ணமாக, நாங்கள் உன் பக்கம் திரும்பி விட்டோம்.” அதற்கு இறைவன், “நான் நாடுகின்றவர்களுக்கு தண்டனை அளிப்பேன். ஆயினும், என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றது. எனவே, எவர்கள் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ மேலும், ஜகாத்தையும் அளிக்கின்றார்களோ மேலும், என்னுடைய வசனங்களையும் நம்புகின்றார்களோ அவர்களுக்கு நான் அந்த அருளை உரித்தாக்குவேன்” என்று பதிலுரைத்தான்.

157

اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ ؗ یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ وَیَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ اُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠

(எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்.

158

قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ جَمِیْعَا لَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ۪ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِیِّ الْاُمِّیِّ الَّذِیْ یُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟

(முஹம்மதே!) நீர் கூறும்: “மனிதர்களே! திண்ணமாக, வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகிய அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவர்பாலும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட ‘உம்மீ’ நபி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகின்றார். மேலும், அவரைப் பின்பற்றுங்கள்! அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும்.”

159

وَمِنْ قَوْمِ مُوْسٰۤی اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟

சத்தியத்தின் அடிப்படையில் வழிகாட்டி, அதற்கு ஏற்பவே நீதி செலுத்தக்கூடிய ஒரு பிரிவினர் மூஸாவுடைய சமுதாயத்தாரில் இருந்தனர்.

160

وَقَطَّعْنٰهُمُ اثْنَتَیْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اِذِ اسْتَسْقٰىهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ وَظَلَّلْنَا عَلَیْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

மேலும், நாம் அச்சமூகத்தை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனிப் பெரும் சமுதாயங்களாக அமைத்தோம். மேலும், மூஸாவிடம் அவருடைய சமுதாயத்தார்கள் தண்ணீர் வேண்டியபோது, ‘இன்ன பாறையை உமது கைத்தடியைக் கொண்டு அடியும்!’ என்று அவருக்கு அறிவித்தோம். அப்பாறையிலிருந்து உடனே பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கின. ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் தண்ணீர் பருகும் இடத்தை நன்கு அறிந்து கொண்டார்கள். மேலும், நாம் அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மேலும், அவர்களுக்கு மன்னுவும், ஸல்வாவும், இறக்கிவைத்தோம். “நாம் உங்களுக்கு அளித்த தூய்மையான பொருள்களைப் புசியுங்கள்!” (என்று கூறினோம்). ஆனால் அவர்கள் (இதன் பின்னரும் தீயசெயல்களை மேற்கொண்டதனால்) நமக்கு அநீதி இழைத்திடவில்லை; மாறாக தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்தனர்.

161

وَاِذْ قِیْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْیَةَ وَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ وَقُوْلُوْا حِطَّةٌ وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِیْٓـٰٔتِكُمْ ؕ سَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟

மேலும், இவ்வாறு அவர்களிடம் கூறப்பட்டதை நீர் நினைவுகூரும்: “நீங்கள் இவ்வூரில் வசியுங்கள்! மேலும் இங்கு (கிடைப்பவற்றை) விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள்; இன்னும் ‘ஹித்ததுன்’ என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்; மேலும், ஊரின் தலைவாயிலில் சிரம்பணிந்தவாறு நுழையுங்கள்! நாம் உங்களுடைய தவறுகளை மன்னிப்போம். சிறந்த முறையில் நற்செயல் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்.”

162

فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَظْلِمُوْنَ ۟۠

ஆயினும், அவர்களில் அக்கிரமக்காரர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். ஆகவே இவ்வாறு அவர்கள் அக்கிரமம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வானத்திலிருந்து வேதனையை அவர்கள்மீது அனுப்பினோம்.

163

وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ ۘ اِذْ یَعْدُوْنَ فِی السَّبْتِ اِذْ تَاْتِیْهِمْ حِیْتَانُهُمْ یَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّیَوْمَ لَا یَسْبِتُوْنَ ۙ لَا تَاْتِیْهِمْ ۛۚ كَذٰلِكَ ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟

கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப் பற்றியும் இவர்களிடம் நீர் கேளும்! அங்கு வாழ்ந்த மக்கள் ஸப்த் சனிக்கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டும்! அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும், சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவ்வாறு அம்மீன்கள் அவர்களிடம் வரமாட்டா. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால், அவர்களை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கியிருந்தோம்.

164

وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَا ۙ للّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰی رَبِّكُمْ وَلَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟

மேலும், இவர்களுக்கு நினைவூட்டும்; அவர்களில் ஒரு குழுவினர் (மற்றொரு குழு வினரிடம்) “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்கவிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்” என்று பதில் கூறினார்கள்.

165

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَیْنَا الَّذِیْنَ یَنْهَوْنَ عَنِ السُّوْٓءِ وَاَخَذْنَا الَّذِیْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَىِٕیْسٍ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟

இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்.

166

فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِىِٕیْنَ ۟

பிறகு அவர்கள் எந்தச் செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கப்பட்டார்களோ அவற்றையே அவர்கள் ஆணவத்துடன் செய்து கொண்டிருந்தபோது “நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்!” என்று நாம் கூறினோம்.

167

وَاِذْ تَاَذَّنَ رَبُّكَ لَیَبْعَثَنَّ عَلَیْهِمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ یَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِ ؕ اِنَّ رَبَّكَ لَسَرِیْعُ الْعِقَابِ ۖۚ وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟

மேலும், அவர்களுக்கு மோசமான வேதனையைக் கொடுக்கக்கூடியவர்களையே மறுமைநாள் வரை நாம் அவர்கள் மீது ஏவிக் கொண்டிருப்போம் என உம் இறைவன் அறிவித்ததை நீர் நினைவுகூருவீராக! திண்ணமாக, உம்முடைய இறைவன் தண்டனை வழங்குவதில் மிக விரைவானவன் ஆவான். மேலும், திண்ணமாக அவன் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.

168

وَقَطَّعْنٰهُمْ فِی الْاَرْضِ اُمَمًا ۚ مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰلِكَ ؗ وَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّیِّاٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟

நாம் இப்பூமியில் அவர்களைப் பல சமூகங்களாகப் பிரித்து பிளவுபடச் செய்தோம். அவர்களில் சிலர் நல்லவர்களாய் இருந்தனர். வேறு சிலர் அப்படி இருக்கவில்லை. மேலும் இன்ப துன்ப நிலைகளுக்கு ஆளாக்கி, அவர்களைச் சோதித்துக் கொண்டிருந்தோம்; அவர்கள் (நல்வழியின் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக!

169

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ یَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰی وَیَقُوْلُوْنَ سَیُغْفَرُ لَنَا ۚ وَاِنْ یَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ یَاْخُذُوْهُ ؕ اَلَمْ یُؤْخَذْ عَلَیْهِمْ مِّیْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا یَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ وَدَرَسُوْا مَا فِیْهِ ؕ وَالدَّارُ الْاٰخِرَةُ خَیْرٌ لِّلَّذِیْنَ یَتَّقُوْنَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟

ஆனால் அந்த முந்தைய சந்ததிகளுக்குப் பிறகு தீயோர் அவர்களின் பிரதிநிதிகளாய் வந்தார்கள். அவர்கள் இறைமறையின் வாரிசுகளாய் இருந்தபோதிலும் இந்த அற்ப உலகின் ஆதாயங்களைப் பெறுகின்றார்கள். “நாங்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவோம்” என்றும் கூறுகின்றார்கள். பிறகும் அதுபோன்ற ஆதாயங்கள் அவர்களிடம் வரும்போது அவற்றையும் பாய்ந்து பெறுகின்றார்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாது என்று வேதத்தில் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்பட வில்லையா? மேலும், வேதத்தில் என்ன (எழுதப்பட்டு) உள்ளது என்பதை அவர்கள் படித்திருக்கிறார்களே! இறையச்சமுடையோருக்கு மறுமை இல்லமே சிறந்ததாகும். இதனைக்கூட நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா?

170

وَالَّذِیْنَ یُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ الْمُصْلِحِیْنَ ۟

யார் யார் வேதத்தை முறையாகக் கடைப்பிடித்து தொழுகையையும் நிலைநிறுத்துகின்றார்களோ, அத்தகைய நல்லொழுக்கமுடையோருக்கான கூலியைத் திண்ணமாக நாம் வீணாக்கமாட்டோம்.

171

وَاِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْۤا اَنَّهٗ وَاقِعٌ بِهِمْ ۚ خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟۠

மேலும், இதையும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக; நாம் மலையைப் பெயர்த்து அதனை அவர்களுக்கு மேல் குடையைப் போன்று நிழலிடச் செய்தோம். அது தங்கள் மீது விழுந்துவிடுமோ என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். (அப்போது நாம் அவர்களிடம் கூறினோம்:) “நாம் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! மேலும், அதில் உள்ளவற்றை நினைவில் வையுங்கள்! (அதனால்) நீங்கள் தவறான நடத்தையிலிருந்து தவிர்ந்து கொள்ளக்கூடும்.”

172

وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰۤی اَنْفُسِهِمْ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰی ۛۚ شَهِدْنَا ۛۚ اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَ ۟ۙ

மேலும், (நபியே! இதனையும் இம்மக்களுக்கு) நினைவூட்டுவீராக! உம் இறைவன் ஆதம் உடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய வழித்தோன்றல்களை வெளிப்படுத்தி அவர்களையே அவர்களுக்குச் சாட்சியாக்கி, “நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டான். “ஆம், நிச்சயமாக நீதான் எங்கள் இறைவன்; இதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கின்றோம்” என்று அவர்கள் கூறினார்கள். எதற்காக நாம் இவ்வாறு செய்தோமெனில், மறுமைநாளில், “நாங்கள் இதனைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாயிருந்தோம்” என்று நீங்கள் கூறிவிடக் கூடாது;

173

اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّیَّةً مِّنْ بَعْدِهِمْ ۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ ۟

அல்லது முன்னர் எங்கள் மூதாதையர்களே இறைவனுக்கு இணை கற்பிக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னர் வந்த வழித்தோன்றல்கள்தாம்! எனவே தவறான மக்கள் செய்த செயலுக்காக எங்களை நீ தண்டிக்கப் போகின்றாயா என்றும் நீங்கள் கூறக்கூடாது என்பதற்காகத்தான்!

174

وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ وَلَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟

மேலும், இவ்வாறு நாம் சான்றுகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றோம்; (நல்வழியின் பக்கம்) அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக!

175

وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ الَّذِیْۤ اٰتَیْنٰهُ اٰیٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّیْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِیْنَ ۟

மேலும், (நபியே!) ஒரு மனிதனின் நிலையை நீர் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவன் எத்தகையவன் என்றால், நாம் அவனுக்கு நம்முடைய வசனங்களின் அறிவை வழங்கியிருந்தும் அவன், அவற்றைப் பின்பற்றாமல் நழுவி ஓடினான். இறுதியில், ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். இவ்வாறாக, அந்த மனிதன் வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.

176

وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰكِنَّهٗۤ اَخْلَدَ اِلَی الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰىهُ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِ ۚ اِنْ تَحْمِلْ عَلَیْهِ یَلْهَثْ اَوْ تَتْرُكْهُ یَلْهَثْ ؕ ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟

நாம் நாடியிருந்தால், அவ்வசனங்களின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான்; மேலும், தன்னுடைய மன இச்சைகளையே பின்பற்றலானான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும்! அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்; துரத்தாமல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்! நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்ற மக்களுக்கு இதுவே உதாரணமாகும். இச்சம்பவங்களை நீர் இவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராக! அதன் மூலம் இவர்கள் சிந்தித்து உணரக்கூடும்!

177

سَآءَ مَثَلَا لْقَوْمُ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا یَظْلِمُوْنَ ۟

நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறி, தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தாரின் உவமை எத்துணைக் கெட்டது!

178

مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِیْ ۚ وَمَنْ یُّضْلِلْ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟

அல்லாஹ் எவருக்கு நேர்வழியை அருளுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாருக்கு அல்லாஹ் தன் வழிகாட்டுதலை வழங்கவில்லையோ அத்தகையவர்களே பேரிழப்புக்கு ஆளானவர்கள்!

179

وَلَقَدْ ذَرَاْنَا لِجَهَنَّمَ كَثِیْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖؗ لَهُمْ قُلُوْبٌ لَّا یَفْقَهُوْنَ بِهَا ؗ وَلَهُمْ اَعْیُنٌ لَّا یُبْصِرُوْنَ بِهَا ؗ وَلَهُمْ اٰذَانٌ لَّا یَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰٓىِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ۟

மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.

180

وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰی فَادْعُوْهُ بِهَا ۪ وَذَرُوا الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اَسْمَآىِٕهٖ ؕ سَیُجْزَوْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

அல்லாஹ் அழகிய பெயர்களுக்கு உரித்தானவன்; எனவே, அந்த அழகிய பெயர்களைக் கொண்டே அவனை அழையுங்கள்! மேலும், அவனுக்குப் பெயர்கள் வைப்பதில் வழிபிறழ்ந்து செல்பவர்களை விட்டுவிடுங்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றின் கூலியை அவர்கள் பெற்றே தீருவார்கள்.

181

وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟۠

நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்; அவர்கள் முற்றிலும் சத்தியத்திற்கேற்பவே வழிகாட்டுகிறார்கள்.மேலும், சத்தியத்திற்கேற்பவே நீதிவழங்குகிறார்கள்.

182

وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۚۖ

நம்முடைய வசனங்களைப் பொய்யென்றுரைத்தவர்களை, அவர்கள் அறியாத வகையில் படிப்படியாக அழிவின் பக்கம் நாம் கொண்டு செல்வோம்.

183

وَاُمْلِیْ لَهُمْ ۫ؕ اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟

மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது.

184

اَوَلَمْ یَتَفَكَّرُوْا ٚ مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟

இவர்கள் (எப்போதேனும்) சிந்தித்திருக்கின்றார்களா? இவர்களுடைய தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை. அவர் (தீய விளைவு ஏற்படும் முன்னர் அதைப் பற்றி) தெளிவான முறையில் எச்சரிக்கை செய்பவரேயாவார்.

185

اَوَلَمْ یَنْظُرُوْا فِیْ مَلَكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۙ وَّاَنْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْ ۚ فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟

வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சியமைப்பைக் குறித்து இவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ் படைத்திருக்கும் எந்தப் பொருளையேனும் இவர்கள் கண் திறந்து பார்க்கவில்லையா? இன்னும் தங்கள் வாழ்க்கைத் தவணை முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைக்கூட இவர்கள் சிந்திக்கவில்லையா? ஆக, (தூதரின்) இந்த எச்சரிக்கைக்குப் பின் வேறு எந்த அறிவுரையின் மீதுதான் இவர்கள் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்?

186

مَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِیَ لَهٗ ؕ وَیَذَرُهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟

அல்லாஹ் எவரை வழிதவறச் செய்கின்றானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் எவருமிலர். மேலும், அல்லாஹ் இவர்களை தங்களுடைய ஆணவப் போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு விட்டுவிடுகின்றான்.

187

یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّیْ ۚ لَا یُجَلِّیْهَا لِوَقْتِهَاۤ اِلَّا هُوَ ؔؕۘ ثَقُلَتْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ لَا تَاْتِیْكُمْ اِلَّا بَغْتَةً ؕ یَسْـَٔلُوْنَكَ كَاَنَّكَ حَفِیٌّ عَنْهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟

இறுதித் தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றி அது எப்போது வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமேயுள்ளது. அவனே அதற்குரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக் கடுமையான நேரமாயிருக்கும். அது திடீரென்றுதான் உங்களை வந்தடையும்.” அதைப் பற்றி நீர் ஆராய்ந்து கொண்டிருப்பவரைப் போல உம்மைக் கருதி உம்மிடம் வினவுகின்றார்கள். நீர் கூறும்: “அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.” ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறியாதிருக்கிறார்கள்.

188

قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ نَفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَیْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَیْرِ ۛۖۚ وَمَا مَسَّنِیَ السُّوْٓءُ ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ وَّبَشِیْرٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠

(நபியே, அவர்களிடம்) நீர் கூறும்: “நான் எனக்கு எவ்வித நன்மையையும், இழப்பையும் ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றிலேன். அல்லாஹ் எதை நாடுகின்றானோ அதுவே நிகழ்கிறது. மறைவானவற்றை நான் அறிபவனாக இருந்திருந்தால் எனக்கு நானே நிறைய ஆதாயங்களைப் பெற்றிருப்பேன். மேலும், எந்தத் தீங்கும் என்னை அணுகியிருக்காது. என்னை நம்புகின்ற மக்களுக்கு நான் எச்சரிக்கை செய்பவனும், நற்செய்தி அறிவிப்பவனுமாகவே இருக்கின்றேன்.”

189

هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِیَسْكُنَ اِلَیْهَا ۚ فَلَمَّا تَغَشّٰىهَا حَمَلَتْ حَمْلًا خَفِیْفًا فَمَرَّتْ بِهٖ ۚ فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَىِٕنْ اٰتَیْتَنَا صَالِحًا لَّنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟

அல்லாஹ்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும், அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக! பிறகு ஆண், பெண்ணோடு கூடியபோது அவள் இலேசான கர்ப்பம் தரித்தாள். அதனை அவள் சுமந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். பின்னர், அது கனமானபோது இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனாகிய அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்: “நீ எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தந்தால், திண்ணமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராயிருப்போம்.”

190

فَلَمَّاۤ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِیْمَاۤ اٰتٰىهُمَا ۚ فَتَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟

ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு நல்லதொரு குழந்தையை வழங்கியபோது அவன் அவர்களுக்கு வழங்கிய கொடையில், அவனோடு மற்றவர்களையும் இணையாக்கினார்கள். அவர்களுடைய இணைவைப்புச் செயல்களிலிருந்து அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன் ஆவான்.

191

اَیُشْرِكُوْنَ مَا لَا یَخْلُقُ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ ۟ؗۖ

(எத்தகைய அறிவிலிகளாக இருக்கின்றார்கள், இவர்கள்!) எப்பொருளையும் படைக்க முடியாதவற்றையா அவனோடு இணை வைக்கின்றார்கள்? அவையே இறைவனால் படைக்கப்பட்டவைதாமே!

192

وَلَا یَسْتَطِیْعُوْنَ لَهُمْ نَصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟

இவர்களுக்கு எவ்வித உதவியும் செய்திட அவற்றால் முடியாது. ஏன் தமக்குத்தாமே உதவி செய்யும் நிலையில்கூட அவை இல்லை.

193

وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَتَّبِعُوْكُمْ ؕ سَوَآءٌ عَلَیْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْتُمْ صَامِتُوْنَ ۟

நேரான வழியில் வருமாறு அவற்றுக்கு நீங்கள் அழைப்பு விடுத்தால், அவை உங்களைப் பின்பற்றி வரமாட்டா! நீங்கள் அவற்றிடம் பிரார்த்திப்பதும் அல்லது நீங்கள் மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்தவரை சமமே!

194

اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْیَسْتَجِیْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

அல்லாஹ்வை விடுத்து எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களைப் போன்ற படைப்பினங்களே! அவற்றிடம் பிரார்த்தனை செய்து பாருங்கள்! அவற்றைப் பற்றி உங்கள் எண்ணங்கள் சரியாக இருந்தால் அவை உங்கள் அழைப்பை ஏற்று பதில் தரட்டுமே!

195

اَلَهُمْ اَرْجُلٌ یَّمْشُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اَیْدٍ یَّبْطِشُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اَعْیُنٌ یُّبْصِرُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ؕ قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِیْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ ۟

அவற்றிற்கு கால்கள் இருக்கின்றனவா, நடப்பதற்கு? கைகள் இருக்கின்றனவா, பிடிப்பதற்கு? கண்கள் இருக்கின்றனவா, பார்ப்பதற்கு? காதுகள் உள்ளனவா, கேட்பதற்கு? (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக்கடவுள்களை அழையுங்கள்! பிறகு நீங்கள் (அனைவரும் ஒன்றுகூடி) எனக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யுங்கள்! எனக்கு அறவே அவகாசம் அளிக்காதீர்கள்!

196

اِنَّ وَلِیِّ  اللّٰهُ الَّذِیْ نَزَّلَ الْكِتٰبَ ۖؗ وَهُوَ یَتَوَلَّی الصّٰلِحِیْنَ ۟

இந்த வேதத்தை இறக்கியருளிய இறைவனே திண்ணமாக, எனக்குப் பாதுகாப்பு அளிப்பவனாவான். மேலும், அவனே நல்லவர்களுக்கு பாதுகாப்பு நல்குகின்றான்.

197

وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟

ஆனால் அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவற்றால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. ஏன், அவற்றால் தமக்குத்தாமேகூட உதவி செய்து கொள்ள முடியாது!

198

وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَسْمَعُوْا ؕ وَتَرٰىهُمْ یَنْظُرُوْنَ اِلَیْكَ وَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟

மேலும், நீங்கள் அவற்றை நேரிய வழியில் வருமாறு அழைத்தால் உங்கள் பேச்சை அவற்றால் கேட்கவும் இயலாது. வெளித்தோற்றத்தில் அவை உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் அவை (எதையும்) பார்ப்பதில்லை”.

199

خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِیْنَ ۟

(நபியே!) மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!

200

وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

எப்பொழுதேனும் ஷைத்தானிடமிருந்து ஊசலாட்டம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

201

اِنَّ الَّذِیْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰٓىِٕفٌ مِّنَ الشَّیْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ ۟ۚ

உண்மையில், எவர்கள் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு ஷைத்தானுடைய தாக்கத்தினால் ஏதேனும் தீய எண்ணம் ஏற்பட்டால் உடனே விழிப்படைந்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு(ச் சரியான செயல்முறை எதுவென்பது) தெளிவாய்ப் புலப்பட்டு விடுகின்றது.

202

وَاِخْوَانُهُمْ یَمُدُّوْنَهُمْ فِی الْغَیِّ ثُمَّ لَا یُقْصِرُوْنَ ۟

ஆனால், அவர்களின் (ஷைத்தான்களின்) சகோதரர்களையோ அவர்களின் வழிதவறிய போக்கிலேயே ஷைத்தான்கள் இழுத்துக்கொண்டு செல்கின்றார்கள். மேலும் அவர்களை வழிகெடுப்பதில் எந்தக் குறையும் வைப்பதில்லை.

203

وَاِذَا لَمْ تَاْتِهِمْ بِاٰیَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَیْتَهَا ؕ قُلْ اِنَّمَاۤ اَتَّبِعُ مَا یُوْحٰۤی اِلَیَّ مِنْ رَّبِّیْ ۚ هٰذَا بَصَآىِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟

மேலும் (நபியே!) ஏதேனும் சான்றினை (முஃஜிஸா அற்புதத்தை) நீர் இவர்களுக்குச் சமர்ப்பிக்கவில்லையாயின் அவர்கள் கேட்கிறார்கள்: “நீர் உமக்காக ஒரு சான்றினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?” (அதற்கு) நீர் கூறும்: “என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது.

204

وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟

மேலும், குர்ஆன் (உங்கள் முன்) ஓதப்படும்போது அதனைக் கவனமாய்க் கேளுங்கள்; மௌனமாகவும் இருங்கள்! உங்கள் மீதும் அருள் பொழியப்படலாம்.”

205

وَاذْكُرْ رَّبَّكَ فِیْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِیْفَةً وَّدُوْنَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِیْنَ ۟

மேலும் (நபியே!) காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! உம் மனத்திற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும்! மேலும் அலட்சியமாய் இருப்போர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்!

206

اِنَّ الَّذِیْنَ عِنْدَ رَبِّكَ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَیُسَبِّحُوْنَهٗ وَلَهٗ یَسْجُدُوْنَ ۟

உம் இறைவனிடத்தில் நெருக்கமாய் இருக்கும் வானவர்கள் அவனை வணங்காமல் புறக்கணித்துத் தற்பெருமை கொள்வதில்லை. மாறாக அவனை அவர்கள் துதிக்கிறார்கள். அவனின் திருமுன்னர் மட்டுமே பணிகின்றார்கள்.

PreviousAl-AnamNextAl-Anfal

0:00–:––