All Surahs

Surah 63

المنافقون

Al-Munafiqun

63. ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)

11 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ۘ وَاللّٰهُ یَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ وَاللّٰهُ یَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِیْنَ لَكٰذِبُوْنَ ۟ۚ

(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: “திண்ணமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்.” திண்ணமாக நீர் அவனுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான்.

2

اِتَّخَذُوْۤا اَیْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

இவர்கள் தங்களுடைய ‘சத்தியங்களை’க் கேடயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விதமாக அல்லாஹ்வின் வழியிலிருந்து தாங்களும் விலகி, பிறமக்களையும் அதில் (செல்லவிடாமல்) தடுக்கின்றார்கள். இவர்கள் செய்து கொண்டிருப்பவை எத்துணை மோசமான செயல்!

3

ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَفْقَهُوْنَ ۟

இவை அனைத்திற்கும் காரணம், இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் நிராகரித்துவிட்டதுதான். இதனால் அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை.

4

وَاِذَا رَاَیْتَهُمْ تُعْجِبُكَ اَجْسَامُهُمْ ؕ وَاِنْ یَّقُوْلُوْا تَسْمَعْ لِقَوْلِهِمْ ؕ كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ؕ یَحْسَبُوْنَ كُلَّ صَیْحَةٍ عَلَیْهِمْ ؕ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ ؕ قٰتَلَهُمُ اللّٰهُ ؗ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟

நீர் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடலமைப்பு உமக்குக் கம்பீரமாகத் தெரியும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்துவிடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த ஓசையையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள்தாம் கடும் பகைவர்களாவர். இவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இரும். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்?

5

وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا یَسْتَغْفِرْ لَكُمْ رَسُوْلُ اللّٰهِ لَوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَیْتَهُمْ یَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ ۟

“வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொள்கின்றார்கள். மேலும், இவர்கள் பெரும் ஆணவத்தால் வராமல் நின்றுவிடுவதை நீர் காண்பீர்.

6

سَوَآءٌ عَلَیْهِمْ اَسْتَغْفَرْتَ لَهُمْ اَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ ؕ لَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟

(நபியே!) நீர் இவர்களுக்குப் பாவமன்னிப்புக்காக இறைஞ்சினாலும், இறைஞ்சாவிட்டாலும் இவர்களைப் பொறுத்து சமம்தான். அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். பாவிகளான மக்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை!

7

هُمُ الَّذِیْنَ یَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا عَلٰی مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ حَتّٰی یَنْفَضُّوْا ؕ وَلِلّٰهِ خَزَآىِٕنُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلٰكِنَّ الْمُنٰفِقِیْنَ لَا یَفْقَهُوْنَ ۟

இவர்கள்தான் இவ்வாறு சொல்கிறார்கள்; “இறைத்தூதரின் தோழர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால் அவர்கள் சிதறிப் போகட்டும்!” உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை.

8

یَقُوْلُوْنَ لَىِٕنْ رَّجَعْنَاۤ اِلَی الْمَدِیْنَةِ لَیُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ؕ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِیْنَ وَلٰكِنَّ الْمُنٰفِقِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟۠

மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் எவர் கண்ணியமிக்கவரோ அவர் கேவலமானவரை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்.” ஆயினும், கண்ணியமானது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறிவதில்லை.

9

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். எவர்கள் அவ்வாறு செய்கிறார்களோ, அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.

10

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ اَحَدَكُمُ الْمَوْتُ فَیَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِیْۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟

நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!”

11

وَلَنْ یُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠

ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை. மேலும், நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருக்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.

PreviousAl-JumuahNextAt-Taghabun

0:00–:––