All Surahs

Surah 13

الرعد

Ar-Rad

13. ஸூரத்துர் ரஃது (இடி)

43 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

الٓمّٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ ؕ وَالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟

அலிஃப், லாம், மீம், றா. இவை இறைமறையின் வசனங்களாகும். மேலும், எது உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கிறதோ அது சத்தியமேயாகும். ஆயினும் (உமது சமுதாயத்தில்) பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளாதிருக்கிறார்கள்.

2

اَللّٰهُ الَّذِیْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ یُدَبِّرُ الْاَمْرَ یُفَصِّلُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ۟

உங்கள் பார்வைக்குப் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்; பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான். இந்த முழு அமைப்பிலுள்ள ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். அல்லாஹ்தான் இவ்வனைத்துக் காரியங்களையும் நிர்வகித்து வருகிறான். அவன் சான்றுகளை மிகத் தெளிவாக விளக்குகின்றான்; உங்கள் இறைவனைச் சந்திக்க இருப்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும் என்பதற்காக!

3

وَهُوَ الَّذِیْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ وَاَنْهٰرًا ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیْهَا زَوْجَیْنِ اثْنَیْنِ یُغْشِی الَّیْلَ النَّهَارَ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

அவன்தான் இந்த பூமியை விரித்து, அதில் மலைகளை நாட்டி ஆறுகளை ஓடச் செய்துள்ளான். மேலும், ஒவ்வொரு கனி வகை(தாவரங்)களின் ஜோடிகளையும் அதில் அவனே படைத்து உள்ளான். அவனே இரவை பகலின் மீது போர்த்துகிறான்! சிந்திக்கும் மக்களுக்கு இவை அனைத்திலும் பல சான்றுகள் உள்ளன.

4

وَفِی الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِیْلٌ صِنْوَانٌ وَّغَیْرُ صِنْوَانٍ یُّسْقٰی بِمَآءٍ وَّاحِدٍ ۫ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰی بَعْضٍ فِی الْاُكُلِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

மேலும், (பாருங்கள்:) அருகருகே அமைந்துள்ள (தனித்தனித் தன்மைகள் கொண்ட) பல பகுதிகள் பூமியில் உள்ளன; திராட்சைத் தோட்டங்களும் உள்ளன; வயல்களும் இருக்கின்றன; பேரீச்சை மரங்களும் இருக்கின்றன. அவற்றில் சில ஒற்றையாகவும் வேறு சில இரட்டையாகவும் முளைக்கின்றன. அனைத்திற்கும் ஒரே விதமான நீரே புகட்டப்படுகின்றது. ஆயினும் அவற்றில் சிலவற்றைச் சுவை மிகுந்ததாகவும் சிலவற்றை சுவை குறைந்ததாகவும் ஆக்குகின்றோம். திண்ணமாக, இவை அனைத்திலும் சிந்தித்துணரும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.

5

وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ ۚ وَاُولٰٓىِٕكَ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ ۚ وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

நீர் ஆச்சரியப்பட வேண்டுமாயின் மக்களின் இந்தக் கூற்றைக் குறித்துதான் ஆச்சரியப்பட வேண்டும்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும் புதிதாகப் படைக்கப்படுவோமா?” இவர்கள் தம் இறைவனை நிராகரித்தவர்கள் ஆவர். இவர்களின் கழுத்துகளில் விலங்குகள் மாட்டப்பட்டுள்ளன. மேலும், இவர்கள் நரகவாசிகள் ஆவர். அதில் இவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!

6

وَیَسْتَعْجِلُوْنَكَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُ ؕ وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلٰی ظُلْمِهِمْ ۚ وَاِنَّ رَبَّكَ لَشَدِیْدُ الْعِقَابِ ۟

நன்மை வருவதற்கு முன் தீமையை விரைவாகக் கொண்டு வருமாறு இவர்கள் உம்மை வற்புறுத்துகின்றனர். ஆனாலும், இவர்களுக்கு முன்னர் (இதேபோன்ற போக்கினை மேற்கொண்டவர்மீது இறைவேதனை இறங்கியதற்கான) படிப்பினைமிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றனவே! மக்கள் அக்கிரமம் இழைத்தும்கூட உம் இறைவன் அவர்களை மன்னிப்பவனாக இருக்கின்றான் என்பதும் உண்மைதான்; மேலும், உம் இறைவன் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதும் உண்மைதான்.

7

وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ۟۠

(உமது அழைப்பை) ஏற்க மறுத்துவிட்டவர்கள், “இம்மனிதர் மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்று ஏன் இறக்கி வைக்கப்படவில்லை?” என்று கேட்கின்றார்கள். ஆனால், நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர். மேலும், ஒவ்வொரு சமூகத்துக்கும் வழி காட்டும் ஒருவர் இருக்கின்றார்.

8

اَللّٰهُ یَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُ وَمَا تَغِیْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ؕ وَكُلُّ شَیْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ ۟

ஒவ்வொரு கர்ப்பிணியின் கருப்பையில் உள்ளதையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். மேலும், கருப்பைகளில் ஏற்படுகின்ற குறைவையும் கூடுதலையும் அவன் அறிகின்றான். அவன் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை நிர்ணயித்துள்ளான்.

9

عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْكَبِیْرُ الْمُتَعَالِ ۟

மறைவான, மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அவன் அறியக் கூடியவனாகவும், மிக உயர்ந்தவனாகவும், (எல்லா நிலையிலும்) மேலானவனாகவும் இருக்கின்றான்.

10

سَوَآءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِالَّیْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ ۟

உங்களில் ஒருவர் மெதுவாகப் பேசினாலும் சரி, உரத்துப் பேசினாலும் சரி, மற்றும் இரவின் இருளில் ஒளிந்திருந்தாலும் சரி, பகலின் ஒளியில் நடந்து கொண்டிருந்தாலும் சரி இவை அனைத்தும் (அல்லாஹ்வைப் பொறுத்துச்) சமமானதே!

11

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ یَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُغَیِّرُ مَا بِقَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْٓءًا فَلَا مَرَدَّ لَهٗ ۚ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ ۟

ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு முன்பும், பின்பும் கண்காணிப்பாளர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆணையின்படி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர்.

12

هُوَ الَّذِیْ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ ۟ۚ

பளீரெனத் தோன்றும் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகின்றான். அதனைக் கண்டு உங்களுக்கு அச்சமும், ஆர்வமும் ஏற்படுகின்றன. மேலும், அவன்தான் (நீர் நிறைந்த) கனமான மேகத்தை எழுப்புகின்றான்.

13

وَیُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰٓىِٕكَةُ مِنْ خِیْفَتِهٖ ۚ وَیُرْسِلُ الصَّوَاعِقَ فَیُصِیْبُ بِهَا مَنْ یَّشَآءُ وَهُمْ یُجَادِلُوْنَ فِی اللّٰهِ ۚ وَهُوَ شَدِیْدُ الْمِحَالِ ۟ؕ

இடி முழக்கம் அவனைப் புகழ்வதோடு அவன் தூய்மையையும் பறைசாற்றுகின்றது. வானவர்களும் அவனுடைய பேரச்சத்தால் நடுங்கிய வண்ணம் அவனைப் புகழ்கின்றார்கள். மேலும், இடிகளை அவன் அனுப்புகின்றான்; தான் நாடுகின்றவர்கள் மீது அவர்கள், அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் (சில சமயம்) அவற்றை விழச் செய்கின்றான். உண்மையில் அவனுடைய சூழ்ச்சி மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

14

لَهٗ دَعْوَةُ الْحَقِّ ؕ وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَجِیْبُوْنَ لَهُمْ بِشَیْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّیْهِ اِلَی الْمَآءِ لِیَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهٖ ؕ وَمَا دُعَآءُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟

அவனை அழைப்பதுதான் சரியானதாகும். அவனைத் தவிர இவர்கள் அழைக்கக் கூடிய வேறு கடவுள்களால் இவர்களின் அழைப்புக்கு எவ்வித பதிலும் அளிக்க முடியாது. அவர்களை அழைப்பது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் தண்ணீரை நோக்கித் தன் இரு கைகளை நீட்டி, “தண்ணீரே, எனது வாயினுள் வந்து விடு!” என்று கோருவதைப் போன்று உள்ளது. உண்மையில் தண்ணீர் வாயினுள் தானாகவே செல்லக் கூடியதாய் இல்லை. இவ்வாறே இறைமறுப்பாளர்களின் இறைஞ்சுதல் இலக்கின்றி எறியப்படும் அம்பாகும்.

15

وَلِلّٰهِ یَسْجُدُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்கே தலைசாய்க்கின்றன. மேலும், அனைத்துப் பொருட்களின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் அவன் முன்னிலையில் பணிந்து கொண்டிருக்கின்றன.

16

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قُلِ اللّٰهُ ؕ قُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ لَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّا ؕ قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬ اَمْ هَلْ تَسْتَوِی الظُّلُمٰتُ وَالنُّوْرُ ۚ۬ اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَیْهِمْ ؕ قُلِ اللّٰهُ خَالِقُ كُلِّ شَیْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ۟

வானங்கள் மற்றும், பூமியின் அதிபதி யார் என்று அவர்களிடம் கேளும். “அல்லாஹ்” என்று (அதற்கு நீரே பதில்) கூறும். “உண்மை இவ்வாறிருக்க, அவனை விடுத்து, தமக்கே நன்மையும், தீமையும் அளிக்க சக்தியற்ற கடவுள்களையா நீங்கள் உங்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டீர்கள்?” என்று அவர்களிடம் கேளும். “பார்வையற்றவனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருளும் ஒளியும் சமமாகுமா?” என்றும் கேளும். இல்லையெனில், அல்லாஹ்வுக்கு இணையாக இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட கடவுள்களும் அவன் படைத்திருப்பதைப் போல் (எதனையும்) படைத்திருந்து, அதன் காரணமாக இது யாருடைய படைப்போ என்று இவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதோ? நீர் கூறும்: “ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அல்லாஹ்வே! அவன் தனித்தவனும் அனைத்தையும் அடக்கியாள்பவனுமாவான்!”

17

اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِیَةٌ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّیْلُ زَبَدًا رَّابِیًا ؕ وَمِمَّا یُوْقِدُوْنَ عَلَیْهِ فِی النَّارِ ابْتِغَآءَ حِلْیَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْحَقَّ وَالْبَاطِلَ ؕ۬ فَاَمَّا الزَّبَدُ فَیَذْهَبُ جُفَآءً ۚ وَاَمَّا مَا یَنْفَعُ النَّاسَ فَیَمْكُثُ فِی الْاَرْضِ ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ ۟ؕ

அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். ஒவ்வொரு நதியும் ஓடையும் தம் கொள்ளளவிற்கு ஏற்ப நீரால் நிரம்பி ஓடியது. பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் மேற்பாகத்தில் பொங்கும் நுரையைச் சுமந்து செல்கிறது. நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்காக மக்கள் உலோகங்களை நெருப்பில் உருக்கும்போதும் இதே போன்ற நுரை ஏற்படுகிறது. அல்லாஹ் இவற்றையே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமையாகக் கூறுகின்றான். (பலன் தராத) நுரை ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றது; எது மக்களுக்குப் பலன் அளிக்கின்றதோ அது பூமியில் தங்கிவிடுகின்றது! இவ்வாறு அல்லாஹ் உவமானங்கள் மூலம் தன் செய்திகளை விளக்குகின்றான்.

18

لِلَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰی ؔؕ وَالَّذِیْنَ لَمْ یَسْتَجِیْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ سُوْٓءُ الْحِسَابِ ۙ۬ وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمِهَادُ ۟۠

எவர்கள் தம் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு மிகச் சிறந்த நன்மைகள் இருக்கின்றன. எவர்கள் அந்த அழைப்பை ஏற்கவில்லையோ, அவர்கள் உலகத்திலுள்ள அனைத்துச் செல்வத்திற்கும் உரிமையாளர்களாய் இருந்தாலும், மேலும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கை அவர்கள் பெற்றிருந்தாலும் (அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக) அவை முழுவதையும் ஈடாகத் தந்துவிடத் தயாராகி விடுவார்கள்! அத்தகையவர்களிடம் கடுமையான முறையில் கணக்கு வாங்கப்படும். மேலும், அவர்கள் தங்குமிடம் நரகமாகும். அது மிகவும் கொடிய இருப்பிடமாகும்.

19

اَفَمَنْ یَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ اَعْمٰی ؕ اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟ۙ

உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்றுக்கொள்பவராய் இருக்கின்றனர்.

20

الَّذِیْنَ یُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا یَنْقُضُوْنَ الْمِیْثَاقَ ۟ۙ

அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறை வேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள்.

21

وَالَّذِیْنَ یَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیَخْشَوْنَ رَبَّهُمْ وَیَخَافُوْنَ سُوْٓءَ الْحِسَابِ ۟ؕ

மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்.

22

وَالَّذِیْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً وَّیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ اُولٰٓىِٕكَ لَهُمْ عُقْبَی الدَّارِ ۟ۙ

மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது.

23

جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ وَالْمَلٰٓىِٕكَةُ یَدْخُلُوْنَ عَلَیْهِمْ مِّنْ كُلِّ بَابٍ ۟ۚ

அதாவது, நிலையான சுவனங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அவற்றில் அவர்கள் நுழைவார்கள். (அவர்களுடன்) அவர்களின் மூதாதையர், மனைவியர், மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் ஆகியோரில் எவர்கள் நன்னடத்தை கொண்டவர்களோ அவர்களும் நுழைவார்கள். வானவர்கள் எல்லாப் புறங்களிலிருந்தும் அவர்களை வரவேற்க வருவார்கள்.

24

سَلٰمٌ عَلَیْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَی الدَّارِ ۟ؕ

மேலும், அவர்களிடம் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; (உலகில்) நீங்கள் பொறுமையுடன் வாழ்ந்து வந்த காரணத்தால் இன்று இதற்குத் தகுதி பெற்றிருக்கிறீர்கள்.” மறுமையின் இல்லம் எத்துணை அருமையானது!

25

وَالَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ۙ اُولٰٓىِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟

ஆனால் அல்லாஹ்வின் உடன்படிக்கைகளை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை முறித்து விடுகின்றவர்களும், மேலும் எந்த உறவுமுறைகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கின்றானோ அந்த உறவுமுறைகளைத் துண்டித்து விடுகின்றவர்களும், மேலும் உலகில் குழப்பம் செய்கின்றவர்களும் சாபத்திற்கு உரியவர்களாவர். மேலும், அவர்களுக்கு மறுமையில் கொடிய தங்குமிடமே கிடைக்கும்!

26

اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ وَفَرِحُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ ۟۠

அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு தாராளமாக உணவு வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும் இவர்கள் உலக வாழ்க்கையில் மூழ்கி, அதைக் கொண்டே பெரிதும் மனநிறைவு அடைகின்றார்கள். ஆனால் மறுமைக்கு எதிரில் இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை!

27

وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ قُلْ اِنَّ اللّٰهَ یُضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ اَنَابَ ۟ۖۚ

(முஹம்மதின் தூதுத்துவத்தை) நிராகரித்தவர்கள், “இவருக்கு, இவருடைய இறைவனிட மிருந்து ஏதேனும் ஒரு சான்று ஏன் இறக்கியருளப்படவில்லை?” என்று கேட்கிறார்கள். நீர் சொல்லும்: “தான் நாடுபவர்களை அல்லாஹ் வழி கேட்டில் ஆழ்த்துகின்றான். மேலும், தன் பக்கம் திரும்புகிறவர்களுக்குத் தன்னை நோக்கி வருவதற்கான வழியை அவன் காட்டுகின்றான்.”

28

اَلَّذِیْنَ اٰمَنُوْا وَتَطْمَىِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ ۟ؕ

இவர்கள்தாம் (இந்த நபியின் அழைப்பை) ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன!

29

اَلَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰی لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ ۟

பிறகு, எவர்கள் (சத்திய அழைப்பை) ஏற்றுக்கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மகிழ்வும் நல்ல முடிவும் இருக்கின்றன.

30

كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِیْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّتَتْلُوَاۡ عَلَیْهِمُ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَهُمْ یَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ ؕ قُلْ هُوَ رَبِّیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ مَتَابِ ۟

(நபியே!) இவ்வாறே உம்மை நாம் ஒரு சமூக மக்களுக்கு நபியாக அனுப்பியிருக்கின்றோம்; அவர்களுக்கு முன்னால் பல சமுதாயங்கள் வாழ்ந்து மறைந்து விட்டிருக்கின்றன. உம்மை எதற்காக அனுப்பியிருக்கிறோம் எனில், கருணை மிக்க இறைவனை அவர்கள் மறுப்பவர்களாய் இருக்கும் நிலையில், உமக்கு வஹி மூலம் நாம் அறிவித்த செய்தியை அவர்களுக்கு நீர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! (இவர்களிடம்) நீர் கூறுவீராக: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனையே முற்றிலும் நான் சார்ந்திருக்கின்றேன். அவனே என்னுடைய புகலிடம் ஆவான்.”

31

وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُیِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰی ؕ بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِیْعًا ؕ اَفَلَمْ یَایْـَٔسِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ لَهَدَی النَّاسَ جَمِیْعًا ؕ وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا تُصِیْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِیْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰی یَاْتِیَ وَعْدُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠

வேறொரு குர்ஆன் (இறக்கியருளப்பட்டு அதன்) மூலம் மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது பூமியை பிளக்கச் செய்தாலும், அல்லது இறந்தவர்களை எழுப்பிப் பேசச் செய்தாலும் என்ன நேர்ந்திடப்போகிறது? (இதுபோன்ற சான்றுகளைக் காண்பிப்பது சிரமமான செயலே அல்ல) உண்மையில் அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. பிறகு என்ன, இறை நம்பிக்கையாளர்கள் (நிராகரிப்பாளர்களின் கோரிக்கையின் பேரில் ஏதேனும் அற்புதம் வெளிப்பட வேண்டும் என்று இன்னும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா?) மேலும், அல்லாஹ் நாடினால் எல்லா மனிதர்களையும் நேர்வழியில் செலுத்தியிருப்பான் என்பதை (அறிந்து) அவர்கள் அந்த ஆசையைக் கைவிட்டிருக்க வேண்டாமா? எவர்கள் இறைவனை நிராகரிக்கும் போக்கை மேற்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்த தீயசெயல்களின் காரணத்தால் ஏதேனும் ஒரு துன்பம் வந்துகொண்டே இருக்கும்; அல்லது அத்துன்பம் அவர்கள் வீட்டின் அருகில் இறங்கிக்கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் வாக்குறுதி (மறுமை) வரும்வரை, இப்படலம் நீடிக்கும். திண்ணமாக, அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்வதே இல்லை.

32

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَیْتُ لِلَّذِیْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ ۫ فَكَیْفَ كَانَ عِقَابِ ۟

உமக்கு முன்னரும் இறைத்தூதர்கள் பலர் நிச்சயமாகப் பரிகாசம் செய்யப்பட்டனர். ஆனால், நான் நிராகரிப்பாளர்களுக்குத் தவணை அளித்தேன். இறுதியில் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். பாருங்கள், என்னுடைய தண்டனை எவ்வளவு கடினமாக இருந்தது!

33

اَفَمَنْ هُوَ قَآىِٕمٌ عَلٰی كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ ؕ قُلْ سَمُّوْهُمْ ؕ اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا یَعْلَمُ فِی الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ؕ بَلْ زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِیْلِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟

பிறகு என்ன! ஒவ்வொரு ஆன்மாவின் சம்பாதனையையும் எந்த இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றானோ அந்த இறைவனுக்கா இவர்கள் (இவ்வளவு துணிச்சலாக) இணை வைக்கின்றார்கள்? (நபியே!) இவர்களிடம் கூறும்: “(உண்மையில் அவை இறைவனால் உருவாக்கப்பட்ட இணைகளாக இருந்தால்) சற்று அவற்றின் பெயர்களைச் சொல்லுங்களேன்!” பூமியில் அல்லாஹ்வுக்குத் தெரியாத (புதிய செய்தி) ஒன்றை அவனுக்கு நீங்கள் சொல்லித் தருகிறீர்களா? அல்லது உதட்டளவில் ஏதேனும் உளறிக் கொண்டிருக்கிறீர்களா? உண்மை என்னவெனில், எவர்கள் சத்திய அழைப்பினை ஏற்க மறுத்தார்களோ அவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார்கள். இனி, அல்லாஹ் யாரை வழிகேட்டில் ஆழ்த்தி விடுகின்றானோ அவருக்கு வழிகாட்டுபவர் எவருமிலர்;

34

لَهُمْ عَذَابٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ ۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟

இத்தகையோருக்கு உலக வாழ்க்கையிலேயே வேதனையுண்டு. மேலும் மறுமையின் வேதனை இதைவிடக் கடுமையானதாகும். அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவருமிலர்.

35

مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ اُكُلُهَا دَآىِٕمٌ وَّظِلُّهَا ؕ تِلْكَ عُقْبَی الَّذِیْنَ اتَّقَوْا ۖۗ وَّعُقْبَی الْكٰفِرِیْنَ النَّارُ ۟

இறையச்சம் உடையோருக்காக வாக்களிக்கப்பட்டுள்ள சுவனத்தின் தன்மை என்னவெனில், அதன் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதன் கனிகளும் நிலையானவை. அதன் நிழலும் நிலையானது. இறையச்சமுள்ளோருக்குக் கிடைக்கும் நல்ல முடிவாகும் இது. ஆனால், சத்தியத்தை நிராகரிப்போரின் முடிவோ நரக நெருப்பே ஆகும்!

36

وَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَفْرَحُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمِنَ الْاَحْزَابِ مَنْ یُّنْكِرُ بَعْضَهٗ ؕ قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖ ؕ اِلَیْهِ اَدْعُوْا وَاِلَیْهِ مَاٰبِ ۟

(நபியே!) முன்னர் எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள், உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதத்தின் மூலம் மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால், பல்வேறு கூட்டங்களைச் சார்ந்த சிலர் இவ்வேதத்தில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. (நபியே!) தெளிவாகக் கூறிவிடும்: “அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டுமென்றும், அவனுக்கு யாரையும் இணைவைக்கக்கூடாதென்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே, நான் அவன் பக்கமே அழைக்கின்றேன். மேலும், அவன் பக்கமே நான் திரும்ப வேண்டியுள்ளது.”

37

وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِیًّا ؕ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا وَاقٍ ۟۠

இதே வழிகாட்டலுடன் அரபி மொழியிலான இக்கட்டளையை குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம். இந்த ஞானம் உம்மிடம் வந்த பின்னரும் அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் இணங்கிச் சென்றால், அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு உதவி புரிபவர் யாரும் இரார். மேலும், அவனுடைய பிடியிலிருந்து உம்மைக் காப்பாற்றுபவரும் எவரும் இரார்.

38

وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّیَّةً ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ ۟

உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும், மனைவிமக்களையுடையவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருக்கின்றோம். மேலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி (சுயமாக) ஒரு சான்றைக் கொண்டுவரும் ஆற்றல் எந்தத் தூதருக்கும் இருக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு வேதம் இருக்கிறது.

39

یَمْحُوا اللّٰهُ مَا یَشَآءُ وَیُثْبِتُ ۖۚ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ ۟

தான் நாடுவதை அல்லாஹ் அழித்துவிடுகின்றான்; தான் நாடுவதை நிலைப்படுத்துகின்றான். உம்முல் கிதாப்* அவனிடமே உள்ளது.

40

وَاِنْ مَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ وَعَلَیْنَا الْحِسَابُ ۟

(நபியே!) அவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்ற தீய விளைவுகளில் ஒரு பகுதியை (நீர் உயிர் வாழும்போதே) நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது (அதற்கு முன்பே) உம்மை நாம் எடுத்துக் கொண்டாலும் (எந்நிலையிலும்) தூதை எடுத்துரைப்பது மட்டுமே உமது பணியாகும். கணக்கு வாங்குவது நமது பணியாகும்.

41

اَوَلَمْ یَرَوْا اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ وَاللّٰهُ یَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖ ؕ وَهُوَ سَرِیْعُ الْحِسَابِ ۟

திண்ணமாக, நாம் இந்த பூமியில் வந்துகொண்டிருக்கிறோம் என்பதையும், அதன் சுற்றளவை நாற்புறங்களிலிருந்தும் குறைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் இவர்கள் கவனிக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றான். அவனுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கூடியவர் எவருமிலர். மேலும், அவன் கணக்கு வாங்குவதில் மிக விரைவானவன் ஆவான்.

42

وَقَدْ مَكَرَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِیْعًا ؕ یَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ؕ وَسَیَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَی الدَّارِ ۟

இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் (பெரும் பெரும்) சூழ்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் திட்டவட்டமான சூழ்ச்சி முழுவதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் என்னென்ன சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறிவான். மேலும், இறுதி முடிவு யாருக்கு நல்லவிதமாக அமையும் என்பதை இந்நிராகரிப்பாளர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள்.

43

وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا ؕ قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ ۟۠

“நீர் இறைவனால் அனுப்பப்பட்டவர் அல்லர்” என்று இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். நீர் கூறும்: “எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வின் சாட்சியம் போதுமானது; மேலும், அவனுடைய வேதத்தின் அறிவைப் பெற்றிருப்பவர்களின் சாட்சியம் போதுமானது!”

PreviousYusufNextIbrahim

0:00–:––