All Surahs

Surah 12

يوسف

Yusuf

12. ஸூரத்து யூஸுஃப்

111 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟۫

அலிஃப் லாம் றா. இவை (தனது கருத்தைத்) தெளிவாக விவரிக்கும் வேதத்தின் வசனங்களாகும்.

2

اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟

இதனை (அரபிகளாகிய) நீங்கள் நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு குர்ஆனாக அரபிமொழியில் திண்ணமாக நாம் இறக்கிவைத்துள்ளோம்.

3

نَحْنُ نَقُصُّ عَلَیْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ هٰذَا الْقُرْاٰنَ ۖۗ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِیْنَ ۟

(நபியே!) நாம் இந்தக் குர்ஆனை உமக்கு வஹி மூலம் அருளி, சம்பவங்களையும் உண்மை நிலைகளையும் மிக அழகிய முறையில் உமக்கு எடுத்துரைக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் (இவற்றைப் பற்றி) எதுவும் அறியாதிருந்தீர்.

4

اِذْ قَالَ یُوْسُفُ لِاَبِیْهِ یٰۤاَبَتِ اِنِّیْ رَاَیْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَیْتُهُمْ لِیْ سٰجِدِیْنَ ۟

இதனை நினைவுகூர்வீராக: யூஸுஃப் தன் தந்தையிடம், “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் சந்திரனையும் நான் கனவில் கண்டேன்; அக்கனவில் அவை என் முன் தாழ்ந்து பணிந்து கொண்டிருப்பதாகவும் கண்டேன்!” என்று கூறினார்.

5

قَالَ یٰبُنَیَّ لَا تَقْصُصْ رُءْیَاكَ عَلٰۤی اِخْوَتِكَ فَیَكِیْدُوْا لَكَ كَیْدًا ؕ اِنَّ الشَّیْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِیْنٌ ۟

அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறிவிடாதே! அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு எதிராக சதி செய்ய முற்படுவார்கள். திண்ணமாக, ஷைத்தான் மனிதனின் வெளிப்படையான பகைவனாவான்.

6

وَكَذٰلِكَ یَجْتَبِیْكَ رَبُّكَ وَیُعَلِّمُكَ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ وَیُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَعَلٰۤی اٰلِ یَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤی اَبَوَیْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠

மேலும், இ(க்கனவில் நீ கண்ட)து போன்றே நடைபெறும். உன் அதிபதி உன்னைத் (தனது பணிக்காக) தேர்ந்தெடுப்பான். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்துகொள்ளும் முறையை உனக்குக் கற்றுத் தருவான். இதற்கு முன்னர் உன் மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உன் மீதும், யஃகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவு செய்வான். திண்ணமாக, உன் இறைவன் நன்கறிந்தவனும், நுண்ணறிவாளனும் ஆவான்.”

7

لَقَدْ كَانَ فِیْ یُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰیٰتٌ لِّلسَّآىِٕلِیْنَ ۟

யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாறு பற்றிக் கேட்பவர்களுக்கு அதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன.

8

اِذْ قَالُوْا لَیُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰۤی اَبِیْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ؕ اِنَّ اَبَانَا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنِ ۟ۚۖ

(இந்த வரலாறு இப்படித் தொடங்குகின்றது:) அவருடைய சகோதரர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம்மைவிட நம் தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாய் இருக்கின்றனர். ஆயினும், நாம்தாமே அதிக எண்ணிக்கையுள்ள ஒரு குழுவாக இருக்கின்றோம். திண்ணமாக, நம் தந்தை பெருந் தவறில் இருக்கின்றார்.

9

قْتُلُوْا یُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا یَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِیْكُمْ وَتَكُوْنُوْا مِنْ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِیْنَ ۟

எனவே, யூஸுஃபைக் கொன்று விடுங்கள்; அல்லது அவரை எங்காவது கொண்டுபோய் வீசி விடுங்கள்! இவ்வாறு செய்தால்தான் உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கம் மட்டும் திரும்பும். மேலும், இதன் பின்னர் நீங்கள் நல்ல மனிதர்களாகிவிடுவீர்கள்.”

10

قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا یُوْسُفَ وَاَلْقُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ یَلْتَقِطْهُ بَعْضُ السَّیَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟

அவர்களில் ஒருவர் கூறினார்: “யூஸுஃபைக் கொன்றுவிடாதீர்கள்! நீங்கள் ஏதேனும் செய்துதான் ஆகவேண்டும் என்று இருந்தால், அவரை ஆழமானதொரு கிணற்றில் போட்டுவிடுங்கள்! அவ்வழியே வந்து போகும் பயணிகளில் எவரேனும் அவரை வெளியே எடுத்துக் கொண்டு போகக்கூடும்.”

11

قَالُوْا یٰۤاَبَانَا مَا لَكَ لَا تَاْمَنَّا عَلٰی یُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ ۟

(இந்தத் திட்டத்தின்படித் தம் தந்தையிடம் சென்று) அவர்கள் கேட்டார்கள்: “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கும் நிலையில், அவர் விஷயத்தில் நீங்கள் எங்களை நம்பாமலிருக்கக் காரணம் என்ன?

12

اَرْسِلْهُ مَعَنَا غَدًا یَّرْتَعْ وَیَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟

நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள்; அவர் உண்டு மகிழ்ந்து விளையாடட்டும்! அவரைப் பாதுகாத்திட நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.

13

قَالَ اِنِّیْ لَیَحْزُنُنِیْۤ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ یَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ۟

தந்தை கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது. மேலும், நீங்கள் அவர் விஷயத்தில் கவனக் குறைவாக இருக்கும்போது அவரை ஓநாய் அடித்துத் தின்றுவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”

14

قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوْنَ ۟

அதற்கு அவர்கள், “நாங்கள் ஒரு குழுவாக இருக்கும்போது அவரை ஓநாய் தின்று விடுமானால், திண்ணமாக, நாங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் அல்லவா ஆகி விடுவோம்!” என்று பதில் கூறினார்கள்.

15

فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ یَّجْعَلُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ ۚ وَاَوْحَیْنَاۤ اِلَیْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

(இவ்வாறு வற்புறுத்தி) அவரை அழைத்துச் சென்று, ஓர் ஆழமான கிணற்றில் போட்டுவிட வேண்டுமென அவர்கள் முடிவு செய்தார்கள். அப்போது நாம் யூஸுஃபுக்கு அறிவித்தோம்: “ஒரு காலம் வரும்; அப்போது அவர்கள் தங்களுடைய இந்தச் செயல்களின் விளைவுகளை அறியாதிருக்கும் நிலையில் நீர் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பீர்!”

16

وَجَآءُوْۤ اَبَاهُمْ عِشَآءً یَّبْكُوْنَ ۟ؕ

அந்தி சாயும் நேரத்தில் அழுது புலம்பிக் கொண்டு தங்கள் தந்தையிடம் அவர்கள் வந்து கூறினார்கள்:

17

قَالُوْا یٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا یُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِیْنَ ۟

“எங்கள் தந்தையே! நாங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தோம். யூஸுஃபை எங்கள் பொருட்களின் அருகில் விட்டிருந்தோம். திடீரென்று ஓநாய் வந்து அவரைத் தின்றுவிட்டது; (இப்போது) நாங்கள் உண்மை சொல்பவர்களாய் இருந்தாலும் எங்களை நீங்கள் நம்பமாட்டீர்கள்.”

18

وَجَآءُوْ عَلٰی قَمِیْصِهٖ بِدَمٍ كَذِبٍ ؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ فَصَبْرٌ جَمِیْلٌ ؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟

மேலும், அவர்கள் யூஸுஃபின் சட்டையில் போலி இரத்தத்தைத் தேய்த்துக் கொண்டு வந்திருந்தார்கள். இதனைக் கேட்ட அவர்களுடைய தந்தை கூறினார்: “அவ்வாறில்லை, உங்கள் மனம் ஒரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கிவிட்டது. சரி, மிக அழகிய முறையில் நான் பொறுமையை மேற்கொள்வேன். நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்.”

19

وَجَآءَتْ سَیَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰی دَلْوَهٗ ؕ قَالَ یٰبُشْرٰی هٰذَا غُلٰمٌ ؕ وَاَسَرُّوْهُ بِضَاعَةً ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَعْمَلُوْنَ ۟

(அங்கு) பயணக் கூட்டமொன்று வந்தது. அவர்கள் தங்களுக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்தவரை அனுப்பி வைத்தார்கள். அவர் (கிணற்றினுள்) தம்முடைய வாளியை விட்டதும் யூஸுஃபைக் கண்டார். உடனே, “இதோ ஒரு நற்செய்தி! இங்கு ஒரு சிறுவன் இருக்கின்றான்!” என்று (உரக்கக்) கூறினார். அவர்கள் அச்சிறுவனை வணிகப் பொருளாகக் கருதி மறைத்துக் கொண்டனர். ஆயினும், அவர்கள் செய்து வந்தவற்றை அல்லாஹ் நன்கறிந்திருந்தான்.

20

وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ ۚ وَكَانُوْا فِیْهِ مِنَ الزَّاهِدِیْنَ ۟۠

இறுதியாக அவர்கள் அவரை மிக அற்ப விலைக்கு ஒரு சில வெள்ளி நாணயங்களுக்கு விற்று விட்டார்கள்! அவருக்கு விலை நிர்ணயிப்பதில் அவர்கள் அதிகம் எதிர்பார்க்காதவர்களாய் இருந்தார்கள்.

21

وَقَالَ الَّذِی اشْتَرٰىهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِیْ مَثْوٰىهُ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا ؕ وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ؗ وَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ؕ وَاللّٰهُ غَالِبٌ عَلٰۤی اَمْرِهٖ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟

அவரை விலை கொடுத்து வாங்கிய எகிப்தியர் தன் மனைவியிடம் கூறினார்: “இவரைக் கண்ணியமான முறையில் கவனித்துக்கொள்; இவர் நமக்குப் பயன்படலாம் அல்லது இவரை நாம் மகனாக ஆக்கிக் கொள்ளலாம்.” இவ்வாறு, அந்த பூமியில் காலூன்றுவதற்கான சூழ்நிலையை யூஸுஃபுக்கு நாம் ஏற்படுத்தினோம். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையை நாம் அவருக்குக் கற்றுக் கொடுப்பதற்கும் தக்க ஏற்பாடு செய்தோம். அல்லாஹ் தன் பணிகளை நிறைவேற்றியே தீருவான்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

22

وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗۤ اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

அவர் முழுமையான வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்குத் தீர்மானிக்கும் ஆற்றலையும் ஞானத்தையும் வழங்கினோம். இவ்வாறே நாம் நல்லவர்களுக்குக் கூலி வழங்குகின்றோம்.

23

وَرَاوَدَتْهُ الَّتِیْ هُوَ فِیْ بَیْتِهَا عَنْ نَّفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَیْتَ لَكَ ؕ قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیْۤ اَحْسَنَ مَثْوَایَ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் அவரை அடைய வலை விரித்தாள்! (ஒரு நாள்) வாயில்களை எல்லாம் அடைத்துத் தாழிட்டு விட்டு “வாரும்!” என்று அழைத்தாள். அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்! திண்ணமாக என் ரப் அதிபதி எனக்கு நல்ல கண்ணியத்தை வழங்கியுள்ளான். (அப்படியிருக்க இத்தகைய இழிசெயலை நான் செய்வேனா? இத்தகைய) அக்கிரமக்காரர்கள் ஒருபோதும் வெற்றி அடைவதில்லை!”

24

وَلَقَدْ هَمَّتْ بِهٖ ۚ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ ؕ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوْٓءَ وَالْفَحْشَآءَ ؕ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِیْنَ ۟

அவள் அவரை அடைய முனைந்து விட்டாள். தன் அதிபதியின் தெளிவான சான்றினை உணராதிருந்தால் அவரும் அவளை அடைய முனைந்திருப்பார்! தீமையையும் மானக்கேடானவற்றையும் அவரை விட்டு விலக்கிவிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தோம். உண்மையிலேயே அவர் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களுள் ஒருவராவார்.

25

وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِیْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَیَا سَیِّدَهَا لَدَا الْبَابِ ؕ قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْٓءًا اِلَّاۤ اَنْ یُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِیْمٌ ۟

இறுதியில் யூஸுஃபும், அவளும் (முன்னும் பின்னுமாக) வாயிலை நோக்கி ஓடினார்கள். அவள் பின்புறத்திலிருந்து அவருடைய சட்டையை (இழுத்து)க் கிழித்தாள்! அவ்வேளை வாயிலில், அவளுடைய கணவர் நிற்பதை இருவரும் கண்டார்கள். (அவரைப் பார்த்ததும்) அவள் கூறலானாள்: “உம்முடைய மனைவியிடம் தீய நோக்கத்துடன் நடந்துகொள்ள முயன்றவனுக்குத் தண்டனை என்ன? சிறையில் அடைப்பதையோ, கடும் வேதனையில் ஆழ்த்துவதையோ தவிர வேறு என்னதான் தண்டனை இருக்க முடியும்?”

26

قَالَ هِیَ رَاوَدَتْنِیْ عَنْ نَّفْسِیْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا ۚ اِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِیْنَ ۟

அதற்கு யூஸுஃப், “இவள்தான் தவறான வழிக்கு என்னை அழைத்தாள்!” என்று கூறினார். அவளுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் (சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு) சாட்சியம் கூறினார்: “யூஸுஃபுடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் சொல்வதுதான் உண்மை; அவர் பொய்யராவார்!

27

وَاِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

அவருடைய சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் கூறுவது பொய்; அவர் கூறுவது உண்மையாகும்!”

28

فَلَمَّا رَاٰ قَمِیْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَیْدِكُنَّ ؕ اِنَّ كَیْدَكُنَّ عَظِیْمٌ ۟

அவளுடைய கணவர், யூஸுஃபுடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோது கூறினார்: “திண்ணமாக, இது பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சிதான். உண்மை யாதெனில், உங்கள் சூழ்ச்சி மிகவும் அபாயகரமானதாகும்.

29

یُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ وَاسْتَغْفِرِیْ لِذَنْۢبِكِ ۖۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕیْنَ ۟۠

யூஸுஃபே! இதனைப் பொருட்படுத்தாதீர்!” பிறகு (தன் மனைவியை நோக்கி), “உனது குற்றத்திற்காக நீ மன்னிப்புத் தேடிக்கொள்! ஏனெனில் நீதான் உண்மையில் தவறிழைத்திருக்கின்றாய்!”

30

وَقَالَ نِسْوَةٌ فِی الْمَدِیْنَةِ امْرَاَتُ الْعَزِیْزِ تُرَاوِدُ فَتٰىهَا عَنْ نَّفْسِهٖ ۚ قَدْ شَغَفَهَا حُبًّا ؕ اِنَّا لَنَرٰىهَا فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

நகரத்திலுள்ள பெண்கள், தமக்கிடையே பேசிக் கொள்ளலாயினர்: “அஜீஸுடைய மனைவி தன்(னிடம் அடிமையாய் உள்ள) இளைஞரிடம் தகாத முறையில் நடந்திட முயன்றிருக்கின்றாள். அவர் மீதுள்ள காதல் அவளை நிதானமிழக்கச் செய்து விட்டது! உண்மையில் ஒரு வெளிப்படையான தவறை அவள் செய்து கொண்டிருக்கிறாள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.”

31

فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَیْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّیْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَیْهِنَّ ۚ فَلَمَّا رَاَیْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَیْدِیَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِیْمٌ ۟

இவ்வாறு அப்பெண்கள் இழிவாகப் பேசிக் கொள்வதை அவள் கேள்விப்பட்டபோது, அவர்களுக்கு அழைப்பு அனுப் பினாள். அவர்களுக்காக சாய்விருக்கைகளைக் கொண்ட மண்டபத்தைத் தயாராக்கினாள். மேலும் (விருந்துண்ணும்போது) அப்பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். (அவர்கள் பழத்தை அறுத்துத் தின்னும் சந்தர்ப்பத்தில், யூஸுஃபை நோக்கி) அவர்களின் முன்னே செல்லும் என சாடை காட்டினாள். அப்பெண்கள் அவரைப் பார்த்ததும் பிரமித்துப் போய் தம் கைகளை அறுத்துக் கொண்டார்கள். “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் மிகத் தூய்மையானவன்) இவர் ஒரு மனிதரே அல்லர்; இவர் சிறப்புக்குரிய ஒரு வானவரே ஆவார்!” என்று (தங்களையும் மறந்து) கூறினர்.

32

قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِیْ لُمْتُنَّنِیْ فِیْهِ ؕ وَلَقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ فَاسْتَعْصَمَ ؕ وَلَىِٕنْ لَّمْ یَفْعَلْ مَاۤ اٰمُرُهٗ لَیُسْجَنَنَّ وَلَیَكُوْنًا مِّنَ الصّٰغِرِیْنَ ۟

மன்னரின் மனைவி கூறினாள்: “(பார்த்தீர்களா!) எவர் விஷயத்தில் என்னை நீங்கள் பழித்தீர்களோ அவர் இவர்தான்; சந்தேகமில்லாமல், நான்தான் இவரை என் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினேன். ஆனால் இவர் தப்பிவிட்டார்; நான் சொல்வதை இவர் கேட்டு நடக்காவிட்டால் திண்ணமாக சிறையிலடைக்கப்பட்டு, சிறுமைக்குள்ளாவார்!”

33

قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَیَّ مِمَّا یَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ ۚ وَاِلَّا تَصْرِفْ عَنِّیْ كَیْدَهُنَّ اَصْبُ اِلَیْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِیْنَ ۟

யூஸுஃப் கூறினார்: “என் இறைவனே! எந்தச் செயலைச் செய்ய வேண்டுமென என்னை இவர்கள் அழைக்கின்றார்களோ அந்தச் செயலைவிட சிறையே எனக்கு மிகவும் உவப்பானது! மேலும், அவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து என்னை நீ காப்பாற்றாவிட்டால், நான் அவர்களுடைய வலையில் சிக்கியிருப்பேன். மேலும், அறியாதவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேன்”

34

فَاسْتَجَابَ لَهٗ رَبُّهٗ فَصَرَفَ عَنْهُ كَیْدَهُنَّ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

அவருடைய இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, அப்பெண்களின் சூழ்ச்சிகளிலிருந்து அவரைக் காப்பாற்றினான். திண்ணமாக, அவனே அனைத்தையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

35

ثُمَّ بَدَا لَهُمْ مِّنْ بَعْدِ مَا رَاَوُا الْاٰیٰتِ لَیَسْجُنُنَّهٗ حَتّٰی حِیْنٍ ۟۠

பிறகு, (யூஸுஃபுடைய ஒழுக்கத் தூய்மைக்கும், தம் பெண்கள்தாம் தவறிழைத்தவர்கள் என்பதற்கும்) தெளிவான சான்றுகளை அவர்கள் கண்ட பின்பும், சிறிதுகாலம் அவரைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குத் தோன்றியது.

36

وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَیٰنِ ؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَعْصِرُ خَمْرًا ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِیْ خُبْزًا تَاْكُلُ الطَّیْرُ مِنْهُ ؕ نَبِّئْنَا بِتَاْوِیْلِهٖ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟

அவருடன், இரு இளைஞர்களும் சிறை புகுந்தார்கள். (ஒருநாள்) அவ்விருவரில் ஒருவர், “நான் திராட்சைச் சாறு பிழிந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டேன்” என்று கூறினார். மற்றொருவர் கூறினார்: “நான் என் தலை மீது ரொட்டிகளைச் சுமந்திருப்பதாகவும் அவற்றைப் பறவைகள் தின்று கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.” (அவ்விருவரும் யூஸுஃபிடம் கூறினர்:) “நீர் இதன் விளக்கத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உம்மை ஒரு நல்ல மனிதராக நாங்கள் காண்கிறோம்.”

37

قَالَ لَا یَاْتِیْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖۤ اِلَّا نَبَّاْتُكُمَا بِتَاْوِیْلِهٖ قَبْلَ اَنْ یَّاْتِیَكُمَا ؕ ذٰلِكُمَا مِمَّا عَلَّمَنِیْ رَبِّیْ ؕ اِنِّیْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟

அதற்கு அவர் கூறினார்: “இங்கு உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்பே இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்து விடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமலும், மறுமையை ஏற்காமலும் வாழ்கின்ற சமூகத்தாரின் வழிமுறையைத் திண்ணமாக நான் விட்டுவிட்டேன்.

38

وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِیْۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَیْءٍ ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَیْنَا وَعَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟

என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக் மற்றும் யஃகூப் ஆகியோரின் வழிமுறையைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுடன் எதனையும் இணையாக்குவது எங்களுடைய பணி அல்ல. உண்மையிலேயே, (அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் நாம் அடிமைகளல்லர் எனும்) இந்நிலை, நம்மீதும் மனித குலம் அனைத்தின் மீதும் அல்லாஹ் பொழிந்துள்ள ஓர் அருட்பேறாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதற்கு நன்றி செலுத்துவதில்லை.

39

یٰصَاحِبَیِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُّتَفَرِّقُوْنَ خَیْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟ؕ

என்னுடைய சிறைத் தோழர்களே! (நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!) பல்வேறுபட்ட கடவுளர்கள் சிறந்தவர்களா? அல்லது யாவற்றையும் அடக்கியாளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா?

40

مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اَسْمَآءً سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ اَمَرَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟

அவனை விடுத்து எவற்றுக்கு நீங்கள் அடிபணிந்து வருகின்றீர்களோ அவை யாவும் நீங்களும், உங்கள் மூதாதையர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களே(தவிர வேறொன்றுமில்லை)! அவற்றை வணங்குவதற்கு எத்தகைய ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கி வைக்கவில்லை. ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியக் கூடாதென்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறியாகும்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாதிருக்கின்றனர்.

41

یٰصَاحِبَیِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَیَسْقِیْ رَبَّهٗ خَمْرًا ۚ وَاَمَّا الْاٰخَرُ فَیُصْلَبُ فَتَاْكُلُ الطَّیْرُ مِنْ رَّاْسِهٖ ؕ قُضِیَ الْاَمْرُ الَّذِیْ فِیْهِ تَسْتَفْتِیٰنِ ۟ؕ

என்னுடைய சிறைத் தோழர்களே! (உங்கள் கனவுகளுக்கான விளக்கம் இதுதான்:) உங்களில் ஒருவர் தம் எஜமான(னாகிய எகிப்து அரச)னுக்கு மது புகட்டுவார். மற்றொருவர் கழுவிலேற்றப்படுவார்; பறவைகள் அவருடைய தலையைக் கொத்தித் தின்னும்! நீங்கள் எந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டீர்களோ அந்த விஷயம் தீர்மானிக்கப்பட்டு விட்டது.”

42

وَقَالَ لِلَّذِیْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِیْ عِنْدَ رَبِّكَ ؗ فَاَنْسٰىهُ الشَّیْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِی السِّجْنِ بِضْعَ سِنِیْنَ ۟ؕ۠

பிறகு, அவ்விருவரில் எவரைக் குறித்து திண்ணமாக அவர் விடுதலையாகி விடுவார் என்று யூஸுஃப் கருதினாரோ அவரிடம் “உன்னுடைய எஜமான(னாகிய எகிப்தின் அரச)னிடம் என்னைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்” என்றார். ஆனால், தன் எஜமானனிடம் (யூஸுஃபை) நினைவுபடுத்தவிடாமல் அவரை ஷைத்தான் மறதியிலாழ்த்தி விட்டான். யூஸுஃப் மேலும் சில ஆண்டுகள் சிறையிலே கிடந்தார்.

43

وَقَالَ الْمَلِكُ اِنِّیْۤ اَرٰی سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ؕ یٰۤاَیُّهَا الْمَلَاُ اَفْتُوْنِیْ فِیْ رُءْیَایَ اِنْ كُنْتُمْ لِلرُّءْیَا تَعْبُرُوْنَ ۟

(ஒருநாள்) அரசன் கூறினான்: “நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருக்கின்றன; மேலும் பசுமையான ஏழு தானியக் கதிர்களையும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன். எனவே, அவையோரே! கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாயிருந்தால் எனது கனவுக்குரிய விளக்கத்தைக் கூறுங்கள்!”

44

قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ ۚ وَمَا نَحْنُ بِتَاْوِیْلِ الْاَحْلَامِ بِعٰلِمِیْنَ ۟

அதற்கு அவர்கள், “இவை குழப்பமான கனவுகளாகும். இவை போன்ற கனவுகளுக்கான விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்லர்” என்றனர்.

45

وَقَالَ الَّذِیْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَبِّئُكُمْ بِتَاْوِیْلِهٖ فَاَرْسِلُوْنِ ۟

அவ்விரு கைதிகளில் விடுதலையடைந்தவர், வெகு காலத்திற்குப் பிறகு (யூஸுஃப் பற்றி) நினைவு வந்தபோது கூறினார்: “நான் இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னை(ச்சிறையில் உள்ள யூஸுஃபிடம்) அனுப்புங்கள்!”

46

یُوْسُفُ اَیُّهَا الصِّدِّیْقُ اَفْتِنَا فِیْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ۙ لَّعَلِّیْۤ اَرْجِعُ اِلَی النَّاسِ لَعَلَّهُمْ یَعْلَمُوْنَ ۟

(அவர் அங்கு சென்று கூறினார்:) “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருப்பதாகவும், மேலும் பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து போன ஏழு கதிர்களையும் கனவில் கண்டால் அதன் விளக்கம் என்ன என்பதை எங்களுக்குக் கூறுவீராக! நான் இம்மக்களிடம் திரும்பச் செல்ல வேண்டும்; அவர்கள் அறிந்து கொள்ளக்கூடும்!”

47

قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِیْنَ دَاَبًا ۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِیْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِیْلًا مِّمَّا تَاْكُلُوْنَ ۟

யூஸுஃப் கூறினார்: “ஏழாண்டுகள் வரை தொடர்ந்து நீங்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பீர்கள். (அந்த ஏழாண்டுகளில்) நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் ஒரு சிறு பாகத்தைத் தவிர, மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்!

48

ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ یَّاْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِیْلًا مِّمَّا تُحْصِنُوْنَ ۟

அதன் பின்னர் மிகக் கடினமான ஏழாண்டுகள் வரும். அப்போது அந்நேரத்திற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டு விடும்! அவற்றிலிருந்து நீங்கள் தனியே பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர!

49

ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِیْهِ یُغَاثُ النَّاسُ وَفِیْهِ یَعْصِرُوْنَ ۟۠

பின்னர் மீண்டும் ஓர் ஆண்டு வரும். அப்பொழுது அருள் மாரி பொழியப்பட்டு மக்களின் துயரங்கள் களையப்படும். அன்று அவர்கள் பழரசங்கள் பிழிவார்கள் (செழிப்பாக வாழ்வார்கள்)!”

50

وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖ ۚ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰی رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِیْ قَطَّعْنَ اَیْدِیَهُنَّ ؕ اِنَّ رَبِّیْ بِكَیْدِهِنَّ عَلِیْمٌ ۟

அரசர், “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்றார். (அரசரின்) தூதுவர் வந்தபோது, யூஸுஃப் அவரிடம் கூறினார்: “நீர் உம் எஜமானனிடம் திரும்பிச் சென்று, ‘தம் கைகளை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று?’ என்று கேட்டுவாரும். திண்ணமாக, என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை நன்கு அறிந்தவனாவான்.”

51

قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ یُوْسُفَ عَنْ نَّفْسِهٖ ؕ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَیْهِ مِنْ سُوْٓءٍ ؕ قَالَتِ امْرَاَتُ الْعَزِیْزِ الْـٰٔنَ حَصْحَصَ الْحَقُّ ؗ اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟

பிறகு அரசன் அப்பெண்களிடம் வினவினான்: “நீங்கள் யூஸுஃபை உங்கள் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?” அதற்கு அப்பெண்கள், “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்!) நாங்கள் அவரிடம் எத்தகைய தீய அம்சத்தையும் காணவில்லை” என ஒருமித்த குரலில் கூறினர். அஜீஸின் மனைவி கூறினாள்: “இப்பொழுது உண்மை வெளிப்பட்டுவிட்டது. நானே அவரை என் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சி செய்தேன். திண்ணமாக, அவர் முற்றிலும் வாய்மையுடையவரே!”

52

ذٰلِكَ لِیَعْلَمَ اَنِّیْ لَمْ اَخُنْهُ بِالْغَیْبِ وَاَنَّ اللّٰهَ لَا یَهْدِیْ كَیْدَ الْخَآىِٕنِیْنَ ۟

(யூஸுஃப் கூறினார்): “இதில் எனது நோக்கம் என்ன வெனில், திரை மறைவில் அஜீஸுக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்யவில்லை என்பதையும், நம்பிக்கைத் துரோகம் செய்வோரின் சூழ்ச்சிகளை அல்லாஹ் ஒருபோதும் வெற்றியடையச் செய்வதில்லை என்பதையும் அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

53

وَمَاۤ اُبَرِّئُ نَفْسِیْ ۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّیْ ؕ اِنَّ رَبِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

மேலும், நான் என்னைத் தூய்மையானவன் எனக் கூறிக் கொள்ளவில்லை. ஏனெனில், திண்ணமாக மனித மனம், தீயவற்றை அதிகமாக தூண்டிவிடக்கூடியதாகும்; ஆனால் எவருக்கு இறைவன் கருணை புரிந்தானோ அவருடைய மனத்தைத் தவிர! திண்ணமாக, என் இறைவன் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெரும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.”

54

وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِیْ ۚ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْیَوْمَ لَدَیْنَا مَكِیْنٌ اَمِیْنٌ ۟

அரசர் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கே உரியவராய் வைத்துக் கொள்கின்றேன்” என்றார். யூஸுஃப் அவரிடம் உரையாடினார். அப்போது அரசர் கூறினார்: “இப்போது நீர் திண்ணமாக நம்மிடம் மதிப்பிற்குரியவராகவும் முழுநம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.”

55

قَالَ اجْعَلْنِیْ عَلٰی خَزَآىِٕنِ الْاَرْضِ ۚ اِنِّیْ حَفِیْظٌ عَلِیْمٌ ۟

அதற்கு யூஸுஃப் “நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.

56

وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ۚ یَتَبَوَّاُ مِنْهَا حَیْثُ یَشَآءُ ؕ نُصِیْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ وَلَا نُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟

மேலும், இவ்வாறு நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார். நாம் விரும்புகின்றவர்கள் மீது நமது கருணையைப் பொழிகின்றோம். நல்லவர்களின் கூலியை நாம் வீணாக்கிட மாட்டோம்.

57

وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠

மேலும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறப்புடையதாகும்.

58

وَجَآءَ اِخْوَةُ یُوْسُفَ فَدَخَلُوْا عَلَیْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟

பிறகு யூஸுஃபின் சகோதரர்கள் எகிப்துக்கு வந்து அவருடைய அவைக்குச் சென்றார்கள். அப்போது அவர் அவர்களை அறிந்து கொண்டார். ஆனால் அவர்கள் அவரை அறியவில்லை.

59

وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِیْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِیْكُمْ ۚ اَلَا تَرَوْنَ اَنِّیْۤ اُوْفِی الْكَیْلَ وَاَنَا خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟

யூஸுஃப், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்துவிட்டு (அவர்கள் புறப்படும் நேரத்தில்) கூறினார்: “உங்கள் தந்தைவழிச் சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் எவ்வளவு நிறைவாக அளந்து தருகின்றேன்; எப்படிச் சிறந்த முறையில் விருந்துபசாரம் செய்பவனாக இருக்கின்றேன் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?

60

فَاِنْ لَّمْ تَاْتُوْنِیْ بِهٖ فَلَا كَیْلَ لَكُمْ عِنْدِیْ وَلَا تَقْرَبُوْنِ ۟

நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிடில், இனி என்னிடத்திலிருந்து உங்களுக்கு எந்த தானியமும் கிடைக்காது. ஏன், என் அருகிலும்கூட நீங்கள் வரக்கூடாது.”

61

قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفٰعِلُوْنَ ۟

அதற்கு அவர்கள், “அவரை எங்களுடன் அனுப்புவதற்காக அவருடைய தந்தையின் சம்மதத்தைப் பெற முயல்வோம். கண்டிப்பாக நாங்கள் இதனைச் செய்வோம்” என்று கூறினார்கள்.

62

وَقَالَ لِفِتْیٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِیْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ یَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمْ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟

யூஸுஃப், தம் பணியாட்களிடம் “தானியத்துக்காக அவர்கள் கொடுத்த சரக்குகளை அவர்களுடைய பொதிகளிலேயே (மறைத்து) வைத்து விடுங்கள்!” என்று கூறினார். அவர்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றதும் (மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்ட) பொருட்களை அறிந்து கொள்ளக்கூடும். (மேலும், இந்தப் பேருதவிக்கு நன்றியுள்ளவர்களாகக் கூடும்) மேலும், அவர்கள் திரும்பி வரவும் கூடும் (எனும் நம்பிக்கையில் யூஸுஃப் இவ்வாறு செய்தார்.)

63

فَلَمَّا رَجَعُوْۤا اِلٰۤی اَبِیْهِمْ قَالُوْا یٰۤاَبَانَا مُنِعَ مِنَّا الْكَیْلُ فَاَرْسِلْ مَعَنَاۤ اَخَانَا نَكْتَلْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟

அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வரும்போது, “எங்கள் தந்தையே! (இனிமேல்) நமக்குத் தானியம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுடன் எங்கள் சகோதரரையும் அனுப்பி வையுங்கள், நாங்கள் தானியம் வாங்கி வருகின்றோம். மேலும், அவரைப் பாதுகாக்க நாங்கள் பொறுப்பேற்கிறோம்” என்று கூறினார்கள்.

64

قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَیْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰۤی اَخِیْهِ مِنْ قَبْلُ ؕ فَاللّٰهُ خَیْرٌ حٰفِظًا ۪ وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟

அதற்கு யஃகூப், “இதற்கு முன் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் உங்களை நான் நம்பியது போன்று இவர் விஷயத்தில் இப்பொழுது உங்களை நான் நம்புவேனா? அல்லாஹ்தான் மிகச் சிறந்த பாதுகாவலன்; அவன் கருணையாளர்களிலேயே மிகவும் கருணையாளன்” என்று பதில் கூறினார்.

65

وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَیْهِمْ ؕ قَالُوْا یٰۤاَبَانَا مَا نَبْغِیْ ؕ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَیْنَا ۚ وَنَمِیْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَیْلَ بَعِیْرٍ ؕ ذٰلِكَ كَیْلٌ یَّسِیْرٌ ۟

பின்னர் அவர்கள் தம் பொதிகளை அவிழ்த்தபோது அவர்களின் சரக்குகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு “எங்கள் தந்தையே! இனி நமக்கு என்ன வேண்டும்? இதோ (பாருங்கள்!) நம்முடைய சரக்குகள் நம்மிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன. (நாங்கள் சென்று) நமது குடும்பத்துக்கு வேண்டிய உணவுப் பொருட்களை வாங்கி வருவோம்; மேலும், எங்கள் சகோதரரைப் பாதுகாத்துக் கொள்வோம்; மேலும், ஓர் ஒட்டகச் சுமையளவு தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம். இந்த அளவு அதிக தானியம் எளிதில் கிடைத்துவிடும்” என்று கூறினார்கள்.

66

قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰی تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَتَاْتُنَّنِیْ بِهٖۤ اِلَّاۤ اَنْ یُّحَاطَ بِكُمْ ۚ فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟

அதற்குத் தந்தை கூறினார்: “நீங்கள் கண்டிப்பாக அவரை என்னிடம் (திரும்ப) அழைத்து வந்து விடுவீர்கள் என்று அல்லாஹ்வின் பெயரால் எனக்கு உறுதிமொழி தராதவரை ஒருபோதும் அவரை நான் உங்களுடன் அனுப்ப மாட்டேன்; ஆனால் ஏதேனும் ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர!” அவர்கள் அவ்வாறு அவரிடம் உறுதிமொழி அளித்தபோது, அவர் கூறினார்: “நாம் இவ்வாறு பேசிக் கொள்வதை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கின்றான்!”

67

وَقَالَ یٰبَنِیَّ لَا تَدْخُلُوْا مِنْ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍ ؕ وَمَاۤ اُغْنِیْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ عَلَیْهِ تَوَكَّلْتُ ۚ وَعَلَیْهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟

பிறகு யஃகூப் கூறினார்: “என்னுடைய மக்களே! (எகிப்தின் தலைநகரினுள்) நீங்கள் எல்லோரும் ஒரே வாயில் வழியாக நுழையாதீர்கள்! மாறாக பல்வேறு வாயில்கள் வழியாக நுழையுங்கள். ஆயினும், அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்து உங்களை என்னால் சிறிதும் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே அன்றி வேறெவருக்கும் இல்லை. நான் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். சார்ந்திருப்பவர்கள் அனைவரும் முழுமையாக அவனைச் சார்ந்திருக்கட்டும்!”

68

وَلَمَّا دَخَلُوْا مِنْ حَیْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕ مَا كَانَ یُغْنِیْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ اِلَّا حَاجَةً فِیْ نَفْسِ یَعْقُوْبَ قَضٰىهَا ؕ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠

ஆனால் (நடந்தது இது தான்:) அவர்கள் தம் தந்தை கட்டளையிட்டபடி நகரினுள் (பல்வேறு வாயில்கள் வழியாக) நுழைந்தபோது அவர்களின் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக எவ்விதப் பலனையும் அவர்களுக்கு அளித்திடவில்லை. ஆனால் யஃகூபின் மனத்திற்குள் ஒரு சஞ்சலம் இருந்தது. அதனை நீக்குவதற்கு அவராக ஒரு முயற்சி செய்து கொண்டார். மேலும், அவருக்கு நாம் கற்றுத் தந்தவற்றைக் கொண்டு அவர் அறிவுடையவராகவே திகழ்ந்தார். ஆனால், மக்களில் பெரும்பாலோர் (இந்த விஷயத்தின் எதார்த்தத்தை) அறிந்து கொள்வதில்லை.

69

وَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَخَاهُ قَالَ اِنِّیْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

அவர்கள் யூஸுஃபின் அவைக்கு வந்தபோது அவர் தம் சகோதரரை மட்டுமே தம்மருகே அமர்த்திக் கொண்டார். பிறகு, “நான்தான் (காணாமல் போன) உன்னுடைய சகோதரன்; எனவே, இவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக நீ வருந்தாதே!” என்று கூறினார்.

70

فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَایَةَ فِیْ رَحْلِ اَخِیْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَیَّتُهَا الْعِیْرُ اِنَّكُمْ لَسٰرِقُوْنَ ۟

யூஸுஃப் (தம் சகோதரர்களாகிய) அவர்களுக்கு வேண்டிய பொருள்களை வழங்கிட ஏற்பாடு செய்தபின் தம் சகோதரரின் பொதியுனுள் தமது கோப்பையை வைத்துவிட்டார். பிறகு அறிவிப்பாளர் ஒருவர், “பயணக்கூட்டத்தினரே! நீங்களெல்லோரும் திருடர்கள்!” என உரக்கக் கூவினார்.

71

قَالُوْا وَاَقْبَلُوْا عَلَیْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ ۟

அதற்கு அவர்கள் அவரை நோக்கித் திரும்பி வந்து, “உங்களுடைய எந்தப் பொருள் காணாமல் போய்விட்டது?” என்று வினவினார்கள்.

72

قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَآءَ بِهٖ حِمْلُ بَعِیْرٍ وَّاَنَا بِهٖ زَعِیْمٌ ۟

அதற்கு (அரசு ஊழியர்களாகிய) அவர்கள், “அரசரின் அளவுக் கோப்பையைக் காணவில்லை” என்று கூறினார்கள். மேலும் (அந்த ஊழியர்களின் தலைவர் கூறினார்:) “யார் அதனைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை அளவு வெகுமதி உண்டு; அதனை வாங்கித்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.”

73

قَالُوْا تَاللّٰهِ لَقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِنُفْسِدَ فِی الْاَرْضِ وَمَا كُنَّا سٰرِقِیْنَ ۟

அச்சகோதரர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை என்பதையும், நாங்கள் திருடர்கள் அல்லர் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.”

74

قَالُوْا فَمَا جَزَآؤُهٗۤ اِنْ كُنْتُمْ كٰذِبِیْنَ ۟

அதற்கு அவர்கள், “சரி, நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபணமானால் திருடியவருக்குரிய தண்டனை என்ன?” என்று வினவினார்கள.

75

قَالُوْا جَزَآؤُهٗ مَنْ وُّجِدَ فِیْ رَحْلِهٖ فَهُوَ جَزَآؤُهٗ ؕ كَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟

அதற்கவர்கள் “அவருக்குரிய தண்டனை...? எவருடைய மூட்டையில் அந்தப் பொருள் காணப்படுகின்றதோ அவரைப் பிடித்து வைத்துக்கொள்வதே அவருக்குரிய தண்டனையாகும். இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு இம்முறையில்தான் நாங்கள் தண்டனை வழங்குவோம்” என்று மறுமொழி கூறினார்கள்.

76

فَبَدَاَ بِاَوْعِیَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِیْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِیْهِ ؕ كَذٰلِكَ كِدْنَا لِیُوْسُفَ ؕ مَا كَانَ لِیَاْخُذَ اَخَاهُ فِیْ دِیْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ وَفَوْقَ كُلِّ ذِیْ عِلْمٍ عَلِیْمٌ ۟

(அப்போது யூஸுஃப்) தம் சகோதரரின் மூட்டையைச் சோதனையிடுவதற்கு முன் அவர்களின் மூட்டைகளைச் சோதனையிடத் தொடங்கினார். பின்னர் தம் சகோதரரின் மூட்டையிலிருந்து காணாமல் போன பொருளைக் கண்டெடுத்தார். இவ்வாறு (நமது உபாயத்தின் மூலம்) யூஸுஃபுக்கு நாம் உதவினோம். மன்னனின் தீனின்படி (அதாவது, எகிப்து நாட்டு அரசுச் சட்டப்படி) தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை; ஆனால் அல்லாஹ் அதனை நாடினாலே தவிர! நாம் நாடுபவர்களின் தகுதிகளை உயர்த்தி விடுகின்றோம். மேலும், அனைத்து அறிவாளிகளுக்கும் மேலாக ஓர் அறிவாளி இருக்கின்றான்.

77

قَالُوْۤا اِنْ یَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ فَاَسَرَّهَا یُوْسُفُ فِیْ نَفْسِهٖ وَلَمْ یُبْدِهَا لَهُمْ ۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ ۟

அச்சகோதரர்கள் கூறலானார்கள்: “இவர் திருடினார் என்றால் ஆச்சரியம் எதுவுமில்லை; ஏனெனில் இதற்கு முன்பு (யூஸுஃப் எனும்) இவருடைய சகோதரரும் திருடியிருக்கின்றார்.” அவர்களின் இந்தப் பேச்சை யூஸுஃப் தம் மனத்திற்குள் வைத்துக் கொண்டார். உண்மை நிலையை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. “நீங்கள் மிகவும் கெட்டவர்கள்; மேலும், (என் முன்னிலையில் என்மீது) நீங்கள் எந்தக் குற்றச்சாட்டை சுமத்துகின்றீர்களோ, அதன் உண்மை நிலையை அல்லாஹ் நன்கறிவான்!” என்று (மெதுவாகக்) கூறினார்.

78

قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَیْخًا كَبِیْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: “அரசாதிபதியே! (அஜீஸே!) இவருடைய தந்தை மிகவும் வயது முதிர்ந்தவராய் இருக்கின்றார். எனவே இவருக்குப் பதிலாக எங்களில் எவரையேனும் நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்! திண்ணமாக, உங்களை மிகவும் நல்லவராக நாங்கள் காண்கிறோம்.”

79

قَالَ مَعَاذَ اللّٰهِ اَنْ نَّاْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّظٰلِمُوْنَ ۟۠

அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! எவரிடத்தில் எங்கள் பொருள் இருப்பதைக் கண்டோமோ, அவரைத் தவிர வேறொருவரை எவ்வாறு நாங்கள் பிடித்து வைத்துக் கொள்ள இயலும்? அவ்வாறு செய்தால் திண்ணமாக நாங்கள் அக்கிரமக்காரர்களாகி விடுவோம்.”

80

فَلَمَّا اسْتَیْـَٔسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِیًّا ؕ قَالَ كَبِیْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَیْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِیْ یُوْسُفَ ۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰی یَاْذَنَ لِیْۤ اَبِیْۤ اَوْ یَحْكُمَ اللّٰهُ لِیْ ۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟

யூஸுஃபிடம் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, அவர்கள் எல்லோரும் தனியாகச் சென்று தங்களுக்கிடையே ஆலோசனை செய்தார்கள். அவர்களில் மூத்தவர் கூறினார்: “உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் வாக்குறுதி வாங்கியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியாதா? இதற்கு முன்னர் யூஸுஃபின் விவகாரத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, என் தந்தை எனக்கு அனுமதி தரும் வரையில் அல்லது அல்லாஹ் என் விஷயத்தில் ஏதாவது தீர்ப்பு வழங்கும் வரையில் நான் இங்கிருந்து வரவே மாட்டேன்! அவன் தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவனாவான்.

81

اِرْجِعُوْۤا اِلٰۤی اَبِیْكُمْ فَقُوْلُوْا یٰۤاَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَ ۚ وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَیْبِ حٰفِظِیْنَ ۟

நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று கூறுங்கள்: எங்கள் தந்தையே! திண்ணமாக உங்கள் மகன் திருடிவிட்டார். அவர் திருடியதை நாங்கள் பார்க்கவில்லை; ஆனால் எங்களுக்குத் தெரியவந்ததைச் சொல்கின்றோம். மேலும், மறைவில் நடைபெற்ற விஷயங்களை எங்களால் கண்காணிக்க இயலவில்லை.

82

وَسْـَٔلِ الْقَرْیَةَ الَّتِیْ كُنَّا فِیْهَا وَالْعِیْرَ الَّتِیْۤ اَقْبَلْنَا فِیْهَا ؕ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟

நாங்கள் தங்கியிருந்த ஊர் மக்களிடமும் (கேட்டுப் பாருங்கள்!) எந்தப் பயணக் கூட்டத்துடன் நாங்கள் வந்தோமோ அந்தப் பயணக் கூட்டத்திட மும் விசாரித்துப் பாருங்கள்; திண்ணமாக நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம்!”

83

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ فَصَبْرٌ جَمِیْلٌ ؕ عَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَنِیْ بِهِمْ جَمِیْعًا ؕ اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟

(இதைக் கேட்ட) தந்தை கூறினார்: “உண்மை என்ன வெனில், உங்கள் மனம் இன்னொரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கி விட்டது. இப்போது நான் அழகிய பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் கொண்டு வந்து சேர்த்திடக் கூடும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், அனைத்துச் செயல்களையும் நுண்ணறிவோடு மேற்கொள்பவனும் ஆவான்!”

84

وَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰۤاَسَفٰی عَلٰی یُوْسُفَ وَابْیَضَّتْ عَیْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِیْمٌ ۟

பிறகு அவர், அவர்களை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு, “ஐயகோ, யூஸுஃபே!” என்று புலம்பலானார். கவலையால் அவருடைய கண்கள் வெளுத்துப் போயிருந்தன. இந்தக் கடும் துன்பத்தை அவர் மனத்திற்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தார்.

85

قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ یُوْسُفَ حَتّٰی تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهٰلِكِیْنَ ۟

அதற்கு அவருடைய புதல்வர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃப் பற்றி கவலைப்பட்டு அந்தக் கவலையிலேயே உருகிப் போய்விடும் அளவுக்கு அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவரை நினைத்துக்கொண்டே இருக்கிறீர்களே!” என்று கூறினர்.

86

قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّیْ وَحُزْنِیْۤ اِلَی اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

அதற்கு அவர் கூறினார்: “என்னுடைய துக்கத்தையும் துயரத்தையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நான் பெற்றிருக்கும் அறிவை நீங்கள் பெற்றிருக்கவில்லை.

87

یٰبَنِیَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ یُّوْسُفَ وَاَخِیْهِ وَلَا تَایْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ ؕ اِنَّهٗ لَا یَایْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ ۟

என் பிள்ளைகளே! நீங்கள் சென்று யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரைப் பற்றித் தீர விசாரியுங்கள்; அல்லாஹ்வின் கருணையைக் குறித்து நிராசை அடையாதீர்கள்! நிராகரிக்கும் மக்கள்தாம் அவனுடைய கருணையைக் குறித்து நிராசை அடைகின்றார்கள்.

88

فَلَمَّا دَخَلُوْا عَلَیْهِ قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَیْلَ وَتَصَدَّقْ عَلَیْنَا ؕ اِنَّ اللّٰهَ یَجْزِی الْمُتَصَدِّقِیْنَ ۟

அவர்கள் (எகிப்து சென்று) யூஸுஃபின் அவைக்கு வந்தபோது கூறினார்கள்: “அரசாதிபதியே! எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் கடுந்துன்பம் பீடித்துள்ளது. மேலும், நாங்கள் அற்பமான சில பொருள்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; (அவற்றுக்குப் பதிலாக) நீங்கள் எங்களுக்கு நிறைவாக தானியம் வழங்கி எங்களுக்கு நன்மை செய்யுங்கள்! இவ்வாறு நன்மை செய்வோருக்குத் திண்ணமாக அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.”

89

قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِیُوْسُفَ وَاَخِیْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ ۟

(இதைக் கேட்டதும் பொறுக்க முடியாமல்) யூஸுஃப் கூறினார்: “நீங்கள் அறிவற்றவர்களாய் இருந்தபோது, யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது நீங்கள் அறிந்த விஷயம்தானே!”

90

قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ یُوْسُفُ ؕ قَالَ اَنَا یُوْسُفُ وَهٰذَاۤ اَخِیْ ؗ قَدْ مَنَّ اللّٰهُ عَلَیْنَا ؕ اِنَّهٗ مَنْ یَّتَّقِ وَیَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟

உடனே அவர்கள், “நீர்தானா யூஸுஃப்?” என்று (ஆச்சரியத்துடன் கேட்டனர்.) அதற்கவர், “(ஆம்!) நான்தான் யூஸுஃப். இவர் என் சகோதரர்! அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்துள்ளான். திண்ணமாக, எவர்கள் இறையச்சம் கொண்டு, நிலைகுலையாது இருக்கின்றார்களோ அத்தகைய நல்லவர்களின் கூலியை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விடுவதில்லை!” என்று கூறினார்.

91

قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَیْنَا وَاِنْ كُنَّا لَخٰطِـِٕیْنَ ۟

அதற்கவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உண்மையில் அல்லாஹ் எங்களைவிட உமக்குச் சிறப்பை வழங்கியுள்ளான். மேலும், திண்ணமாக நாங்கள் தவறிழைத்தவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.

92

قَالَ لَا تَثْرِیْبَ عَلَیْكُمُ الْیَوْمَ ؕ یَغْفِرُ اللّٰهُ لَكُمْ ؗ وَهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟

அதற்கு அவர் கூறினார்: “இன்று உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னிப்பான். அவன் எல்லோரையும்விட அதிகம் கருணை புரிபவனாவான்.

93

اِذْهَبُوْا بِقَمِیْصِیْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰی وَجْهِ اَبِیْ یَاْتِ بَصِیْرًا ۚ وَاْتُوْنِیْ بِاَهْلِكُمْ اَجْمَعِیْنَ ۟۠

எனது இந்த அங்கியைக் கொண்டு சென்று என் தந்தையின் முகத்தில் படச் செய்யுங்கள்; அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிடும். மேலும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!”

94

وَلَمَّا فَصَلَتِ الْعِیْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّیْ لَاَجِدُ رِیْحَ یُوْسُفَ لَوْلَاۤ اَنْ تُفَنِّدُوْنِ ۟

அந்தப் பயணக் கூட்டம் (எகிப்தை விட்டு) புறப்பட்டபோது, அவர்களின் தந்தை (கன்ஆன் என்ற ஊரில்) கூறினார்: “திண்ணமாக நான் யூஸுஃபின் நறுமணத்தை உணர்கின்றேன்; முதுமையில் நான் ஏதோ, அறிவிழந்து போய் பேசுவதாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள்!”

95

قَالُوْا تَاللّٰهِ اِنَّكَ لَفِیْ ضَلٰلِكَ الْقَدِیْمِ ۟

வீட்டிலுள்ளவர்கள் கூறினர்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (இன்னும்) உங்களுடைய பழைய மனக்குழப்பத்திலேயே உழன்று கொண்டிருக்கிறீர்கள்.”

96

فَلَمَّاۤ اَنْ جَآءَ الْبَشِیْرُ اَلْقٰىهُ عَلٰی وَجْهِهٖ فَارْتَدَّ بَصِیْرًا ۚ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ ۙۚ اِنِّیْۤ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

பிறகு நற்செய்தி அறிவிப்பவர் (யஃகூபிடம்) வந்தார்; யூஸுஃபின் அங்கியை அவருடைய முகத்தில் படச்செய்தார். உடனே அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிட்டது! (அப்போது) அவர் கூறினார்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என்று உங்களிடம் நான் முன்பே கூறவில்லையா?”

97

قَالُوْا یٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰطِـِٕیْنَ ۟

பிறகு அவர்கள் எல்லோரும் “எங்கள் தந்தையே! நீங்கள் எங்கள் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள்; உண்மையிலேயே நாங்கள் தவறிழைத்தவர்கள்தாம்!” என்று வேண்டினார்கள்.

98

قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَكُمْ رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟

அதற்கவர், “நான் உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்புக்கோருவேன். திண்ணமாக அவன் மிக்க மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.

99

فَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَبَوَیْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۟ؕ

பிறகு, அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரைத் தம்முடன் அமர்த்திக் கொண்டார். மேலும் (தம் குடும்பத்தார் அனைவரையும் நோக்கி,) “நகரத்தினுள் செல்லுங்கள்! அல்லாஹ் நாடினால் நிம்மதியுடனும் அமைதியுடனும் வாழ்வீர்கள்!” என்றார்.

100

وَرَفَعَ اَبَوَیْهِ عَلَی الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا ۚ وَقَالَ یٰۤاَبَتِ هٰذَا تَاْوِیْلُ رُءْیَایَ مِنْ قَبْلُ ؗ قَدْ جَعَلَهَا رَبِّیْ حَقًّا ؕ وَقَدْ اَحْسَنَ بِیْۤ اِذْ اَخْرَجَنِیْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّیْطٰنُ بَیْنِیْ وَبَیْنَ اِخْوَتِیْ ؕ اِنَّ رَبِّیْ لَطِیْفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟

(நகரத்தில் நுழைந்த பின்னர்) அவர் தம்முடைய தாய் தந்தையரை (தம் அருகிலிருந்த அரியணையின் மீது) அமர வைத்தார். அனைவரும் (தம்மையும் அறியாமல்) அவர் முன் சிரம் பணிந்தார்கள். அப்பொழுது யூஸுஃப் கூறினார்: “என் தந்தையே! நான் முன்னர் கண்ட கனவிற்கு இதுதான் விளக்கமாகும். என் இறைவன் அக்கனவை நனவாக்கிவிட்டான். மேலும் எனக்கு அவன் பேருதவி செய்தான். அதாவது சிறையிலிருந்து எனக்கு விடுதலை அளித்தான். எனக்கும் என்னுடைய சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்திய பின்னரும் உங்களையெல்லாம் பாலைவனச் சிற்றூரில் இருந்து (என்னிடம்) கொண்டுவந்து சேர்த்தான். உண்மை யாதெனில், என் இறைவன் மிக நுட்பமான முறையில் தன் நாட்டங்களை நிறைவேற்றுகின்றான். திண்ணமாக, அவன் நன்கறிந்தோனும் நுண்ணறிவாளனுமாவான்.

101

رَبِّ قَدْ اٰتَیْتَنِیْ مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِیْ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۫ اَنْتَ وَلِیّٖ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ تَوَفَّنِیْ مُسْلِمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟

என் இறைவா! நீ எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையைக் கற்றுத் தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்க சீலர்களுடன் சேர்ப்பாயாக!”

102

ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ۚ وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ اَجْمَعُوْۤا اَمْرَهُمْ وَهُمْ یَمْكُرُوْنَ ۟

(நபியே!) இவ்வரலாறு நீர் அறியாத செய்திகளைச் சேர்ந்ததாகும். அதனை நாம் உமக்கு வஹியின் மூலம் அறிவித்துக் கொண்டிருக்கின்றோம். யூஸுஃபின் சகோதரர்கள் சதித் திட்டம் தீட்டி, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று தங்களுக்குள் முடிவு செய்தபோது நீர் அவர்களிடையே இருக்கவில்லையே!

103

وَمَاۤ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِیْنَ ۟

ஆனால், நீர் எவ்வளவுதான் விரும்பினாலும், மக்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளக்கூடி யவர்களாய் இல்லை.

104

وَمَا تَسْـَٔلُهُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠

உண்மையில் இதற்காக நீர் அவர்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. இந்தக் குர்ஆன், அகிலத்தார் அனைவருக்கும் உரிய ஒரு நல்லுரையே ஆகும்.

105

وَكَاَیِّنْ مِّنْ اٰیَةٍ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ یَمُرُّوْنَ عَلَیْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ ۟

வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. இவர்கள் அவற்றைக் கடந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள். ஆயினும் அவற்றைக் குறித்து சற்றும் கவனம் செலுத்துவதில்லை.

106

وَمَا یُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ ۟

அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆயினும் (அவனோடு மற்றவர்களையும்) இணையாக்குகிறார்கள்.

107

اَفَاَمِنُوْۤا اَنْ تَاْتِیَهُمْ غَاشِیَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَاْتِیَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

அல்லாஹ்வின் வேதனைகளிலிருந்து அவர்களைத் திணற அடிக்கக்கூடிய ஒரு வேதனை அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று இறுதிநாள் அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றார்களா

108

قُلْ هٰذِهٖ سَبِیْلِیْۤ اَدْعُوْۤا اِلَی اللّٰهِ ؔ۫ عَلٰی بَصِیْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِیْ ؕ وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟

நீர் அவர்களிடம் தெளிவாகக் கூறி விடும்: “இதுதான் என்னுடைய வழி; நான் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் முழுத் தெளிவுடன் (எங்கள் பாதை எது என்பதை அறிந்து) இருக்கின்றோம்; மேலும் அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்கு இணை கற்பிப்பவர்களுடன் எனக்கு எத்தகைய தொடர்பும் இல்லை.

109

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰی ؕ اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ وَلَدَارُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اتَّقَوْا ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟

(நபியே!) உமக்கு முன்னர் (பல்வேறு ஊர்களுக்கு) தூதர்களாக நாம் அனுப்பி வைத்திருந்த அனைவரும் மனிதர்களாகவும் அந்தந்த ஊர்களைச் சார்ந்தவர்களாகவும்தாம் இருந்தார்கள். அவர்களுக்கு நாம் வஹி அறிவித்துக் கொண்டிருந்தோம். பின்னர் இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் சென்றுபோனவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? எவர்கள் (இறைத்தூதர்களின் சொல்லை ஏற்று) இறையச்சத்துடன் வாழ்ந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மறுமை இல்லம் மிகவும் சிறந்ததாகும். (இனியும்) நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?

110

حَتّٰۤی اِذَا اسْتَیْـَٔسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَنُجِّیَ مَنْ نَّشَآءُ ؕ وَلَا یُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِیْنَ ۟

(முந்திய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்று வந்தார்கள். ஆனால் மக்கள் அதனைக் கேட்கவில்லை) எதுவரையெனில், மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும் தங்களிடம் பொய்தான் சொல்லப்பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி இறைத்தூதர்களுக்குக் கிடைத்துவிட்டது. (இவ்வாறான சந்தர்ப்பங்களில் நமது நியதி இதுதான்:) நாம் யாரை நாடுகின்றோமோ அவர்களைக் காப்பாற்றி விடுகின்றோம். மேலும் குற்றம் புரிந்த மக்களை விட்டு நமது தண்டனை அகற்றப்படுவதே இல்லை.

111

لَقَدْ كَانَ فِیْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِی الْاَلْبَابِ ؕ مَا كَانَ حَدِیْثًا یُّفْتَرٰی وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ كُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠

முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது. (குர்ஆனில் விவரித்துக் கூறப்படுகின்ற) இச்செய்திகள் புனைந்துரைக்கப்பட்டவை அல்ல. மாறாக, இந்தக் குர்ஆன் தனக்கு முன் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் விவரிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது; மேலும், நம்பிக்கை கொள்ளும் சமூகத்தாருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் திகழ்கின்றது.

PreviousHudNextAr-Rad

0:00–:––