اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். உம்முடைய சமுதாயத்தை எச்சரிப்பீராக; துன்புறுத்தும் வேதனை அவர்களிடம் வருவதற்கு முன்பாக!
اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். உம்முடைய சமுதாயத்தை எச்சரிப்பீராக; துன்புறுத்தும் வேதனை அவர்களிடம் வருவதற்கு முன்பாக!
قَالَ یٰقَوْمِ اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ
அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர் ஆவேன்.
اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ وَاَطِیْعُوْنِ ۟ۙ
(நான் உங்களுக்கு இதனை உணர்த்துகின்றேன்:) அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
یَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرْكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا یُؤَخَّرُ ۘ لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் உங்களை விட்டு வைப்பான். திண்ணமாக அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டால் அது ஒத்தி வைக்கப்பட மாட்டாது. அந்தோ, இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே!
قَالَ رَبِّ اِنِّیْ دَعَوْتُ قَوْمِیْ لَیْلًا وَّنَهَارًا ۟ۙ
அவர் பணிந்து கூறினார்: “என் அதிபதியே! நான் என் சமூகத்தினருக்கு இரவு பகலாக அழைப்பு விடுத்தேன்.
فَلَمْ یَزِدْهُمْ دُعَآءِیْۤ اِلَّا فِرَارًا ۟
ஆனால், என்னுடைய அழைப்போ விரண்டோடுவதையே அவர்களிடம் அதிகப்படுத்தியது.
وَاِنِّیْ كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوْۤا اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِیَابَهُمْ وَاَصَرُّوْا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا ۟ۚ
மேலும், நீ அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொண்டார்கள். மேலும், தம் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டார்கள். மேலும், தம்முடைய தவறான நடத்தையில் பிடிவாதமாய் இருந்தார்கள். மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள்.
ثُمَّ اِنِّیْ دَعَوْتُهُمْ جِهَارًا ۟ۙ
மீண்டும் நான் அவர்களை உரக்கக் கூவி அழைத்தேன்.
ثُمَّ اِنِّیْۤ اَعْلَنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًا ۟ۙ
பின் நான் வெளிப்படையாகவும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்தரங்கமாகவும் விளக்கினேன்.
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۟ۙ
நான் கூறினேன்: “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.
یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا ۟ۙ
அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான்.
وَّیُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَیَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّیَجْعَلْ لَّكُمْ اَنْهٰرًا ۟ؕ
செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்.
مَا لَكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًا ۟ۚ
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வுக்கு மகத்துவமும் மாண்பும் ஏதேனும் இருக்கிறது என்ற உணர்வே உங்களிடம் இல்லையே!
وَقَدْ خَلَقَكُمْ اَطْوَارًا ۟
உண்மையில் அவன் உங்களைப் பல நிலைகளாகப் படைத்திருக்கின்றான்.
اَلَمْ تَرَوْا كَیْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۟ۙ
அல்லாஹ் எவ்வாறு ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதையும்,
وَّجَعَلَ الْقَمَرَ فِیْهِنَّ نُوْرًا وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا ۟
அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அமைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًا ۟ۙ
மேலும், அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்து வியக்கத்தக்க விதத்தில் முளைக்கச் செய்தான்.
ثُمَّ یُعِیْدُكُمْ فِیْهَا وَیُخْرِجُكُمْ اِخْرَاجًا ۟
பின்னர், உங்களை இதே பூமிக்குத் திரும்பக் கொண்டு செல்வான். மேலும், அதிலிருந்து திடீரென உங்களை எழுப்பி நிறுத்துவான்.
وَاللّٰهُ جَعَلَ لَكُمُ الْاَرْضَ بِسَاطًا ۟ۙ
மேலும், அல்லாஹ் பூமியை உங்களுக்காக விரிப்பாக அமைத்தான்;
لِّتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا ۟۠
நீங்கள் அதன் திறந்த பாதைகளில் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக!
قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِیْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ یَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا ۟ۚ
நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இவர்கள் என் பேச்சை நிராகரித்து விட்டார்கள். மேலும், இவர்கள் சில (தலைவ)ர்களைப் பின்பற்றியுள்ளார்கள். அந்தத் தலைவர்களுக்குத் தங்கள் செல்வமும் பிள்ளைகளும் அதிக நஷ்டத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًا ۟ۚ
இவர்கள் பெரியதொரு சூழ்ச்சி வலையை விரித்து வைத்திருக்கின்றார்கள்.
وَقَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ۙ۬ وَّلَا یَغُوْثَ وَیَعُوْقَ وَنَسْرًا ۟ۚ
“உங்களுடைய கடவுள்களை விட்டுவிடாதீர்கள். வத், ஸுவாஉ, யஃகூஸ், யஊஃக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை விட்டுவிடாதீர்கள்” என்று இவர்கள் கூறினார்கள்.
وَقَدْ اَضَلُّوْا كَثِیْرًا ۚ۬ وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا ضَلٰلًا ۟
இவர்கள் பலரை வழிகெடுத்திருக்கின்றார்கள். நீயும் இந்தக் கொடுமையாளர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதிலும் முன்னேற்றத்தை அளிக்காதே!”
مِمَّا خَطِیْٓـٰٔتِهِمْ اُغْرِقُوْا فَاُدْخِلُوْا نَارًا ۙ۬ فَلَمْ یَجِدُوْا لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَنْصَارًا ۟
தங்கள் தவறுகளின் காரணத்தால்தான் அவர்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டார்கள்; மேலும், நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றி உதவுவோர் எவரையும் அவர்கள் பெற்றிடவில்லை.
وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَی الْاَرْضِ مِنَ الْكٰفِرِیْنَ دَیَّارًا ۟
மேலும், நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இந்த நிராகரிப்பாளர்களில் எவரையும் பூமியில் வசிக்க விட்டு வைக்காதே!
اِنَّكَ اِنْ تَذَرْهُمْ یُضِلُّوْا عِبَادَكَ وَلَا یَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا ۟
நீ இவர்களைவிட்டு வைத்தால் இவர்கள் உன் அடிமைகளை வழிகெடுத்து விடுவார்கள். மேலும் இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவனாகவும் நிராகரிப் பாளனாகவும்தான் இருப்பான்.
رَبِّ اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِمَنْ دَخَلَ بَیْتِیَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا تَبَارًا ۟۠
என் அதிபதியே! எனக்கும் என் தாய் தந்தையருக்கும், என் வீட்டில் இறைநம்பிக்கை கொண்டவனாக நுழைந்திருக்கும் ஒவ்வொருவனுக்கும், மேலும், நம்பிக்கை கொண்ட ஆண் பெண்கள் அனைவருக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், கொடுமைக்காரர்களுக்கு அதிக அழிவைத் தவிர வேறு எதையும் கொடுக்காதே!”