حٰمٓ ۟ۚ
ஹாமீம்
Surah 41
Fussilat
41. ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா /ஃபுஸ்ஸிலத் (விளக்கவுரை)
54 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
حٰمٓ ۟ۚ
ஹாமீம்
تَنْزِیْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۚ
இது அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்.
كِتٰبٌ فُصِّلَتْ اٰیٰتُهٗ قُرْاٰنًا عَرَبِیًّا لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟ۙ
இது எத்தகைய வேதமெனில், அதனுடைய வசனங்கள் நன்கு விவரிக்கப்பட்டிருக்கின்றன; அரபி மொழியிலுள்ள குர்ஆன் ஆகவும் இருக்கின்றது; அறிவுள்ள மக்களுக்கு
بَشِیْرًا وَّنَذِیْرًا ۚ فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
நற்செய்தி சொல்லக்கூடியதும், எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகும். ஆனால், இந்த மக்களில் பெரும்பாலோர் (இதனைப்) புறக்கணித்து விட்டனர். மேலும், அவர்கள் செவிமடுப்பதுமில்லை.
وَقَالُوْا قُلُوْبُنَا فِیْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ وَفِیْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْ بَیْنِنَا وَبَیْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ ۟
அவர்கள் கூறுகின்றார்கள்; “எதன் பக்கம் நீர் எங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றீரோ, (அதன் பக்கம் நோக்காதபடி) எங்கள் உள்ளங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன. எங்கள் காதுகள் செவிடாகிவிட்டிருக்கின்றன. மேலும், எங்களுக்கும் உமக்கும் இடையே ஒரு திரை விழுந்து விட்டிருக்கின்றது. நீர் உமது பணியைச் செய்யும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்கின்றோம்.”
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَاسْتَقِیْمُوْۤا اِلَیْهِ وَاسْتَغْفِرُوْهُ ؕ وَوَیْلٌ لِّلْمُشْرِكِیْنَ ۟ۙ
(நபியே! இவர்களிடம்) கூறும்: நான் ஒரு மனிதன்தான், உங்களைப் போன்று! வஹியின்* மூலம் எனக்கு அறிவிக்கப்படுகின்றது, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; எனவே, நீங்கள் அவனுடைய திசையிலேயே நேராக நிலைகொள்ளுங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள். இணைவைப்பாளர்களுக்கு அழிவுதான்!
الَّذِیْنَ لَا یُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
அவர்களோ, ஜகாத் வழங்குவதில்லை; இன்னும் மறுமையை நிராகரிக்கின்றார்கள்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கின்றது.
قُلْ اَىِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِیْ خَلَقَ الْاَرْضَ فِیْ یَوْمَیْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا ؕ ذٰلِكَ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۚ
(நபியே! இவர்களிடம்) கேளும்: “நீங்கள் பூமியை இரண்டு நாட்களில் படைத்த இறைவனை நிராகரிக்கின்றீர்களா? மேலும், மற்றவர்களை அவனுக்கு இணையாக்குகின்றீர்களா?” அவன்தானே அகில உலகங்களுக்கும் இறைவன்!
وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِیْهَا وَقَدَّرَ فِیْهَاۤ اَقْوَاتَهَا فِیْۤ اَرْبَعَةِ اَیَّامٍ ؕ سَوَآءً لِّلسَّآىِٕلِیْنَ ۟
அவன் (பூமியைப் படைத்த பிறகு) அதன் மேல் மலைகளை அமைத்தான். மேலும், அதில் பாக்கியங்களை அருளினான். கேட்பவர்கள் அனைவருக்காகவும் அவரவரின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சரியான அளவில் அதனுள் உணவுப் பொருட்களை செய்து வைத்தான். இந்த அனைத்துப் பணிகளும் நான்கு நாட்களில் நிறைவேறின.
ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ وَهِیَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِیَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ قَالَتَاۤ اَتَیْنَا طَآىِٕعِیْنَ ۟
பிறகு, அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தினான். அப்போது அது வெறும் புகையாய் இருந்தது. அவன் வானத்திடமும், பூமியிடமும் கூறினான்: “உருவாகி வாருங்கள்; நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்!” அவை இரண்டும், “நாங்கள் கீழ்ப்படிந்த வண்ணமே வந்துவிட்டோம்” எனக் கூறின.
فَقَضٰىهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِیْ یَوْمَیْنِ وَاَوْحٰی فِیْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا ؕ وَزَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ ۖۗ وَحِفْظًا ؕ ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟
எனவே, அவன் இரண்டு நாட்களுக்குள் ஏழு வானங்களையும் அமைத்தான். மேலும், ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய நியதியை அறிவித்தான். உலகத்தின் அருகில் உள்ள வானத்தை விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். அதனை நன்கு பாதுகாத்து வைத்தோம். இவையனைத்தும் பேரறிவாளனும், வல்லமை மிக்கவனுமான இறைவன் நிர்ணயித்த அமைப்பாகும்.
فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۟ؕ
இனி, இவர்கள் புறக்கணித்தால் (இவர்களிடம்) கூறிவிடும்: ‘திடீரெனத் தாக்கும் வேதனை குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன்; ஆத் சமுதாயத்தினர் மீதும், ஸமூத் சமுதாயத்தினர் மீதும் இறங்கிய வேதனை போன்று!
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰٓىِٕكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
இறைவனின் தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாய் ஒவ்வொரு திசையிலிருந்தும் அவர்களிடம் வந்தார்கள். ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாதீர்கள்’ என அவர்களுக்கு விளக்கினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பானே! எனவே நீங்கள் கொண்டு வந்திருக்கும் தூதுச் செய்தியை நாங்கள் ஏற்பது இல்லை.”
فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ؕ اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ؕ وَكَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். “எங்களைவிட வலிமை மிக்கவர் யார்?” அவர்களைப் படைத்த இறைவன் அவர்களைவிட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்குப் புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள்.
فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْۤ اَیَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِیْقَهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰی وَهُمْ لَا یُنْصَرُوْنَ ۟
இறுதியில், அபசகுனமுடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்கள் சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக! மேலும், மறுமையின் வேதனை இதைவிடவும் இழிவு தரக்கூடியதாகும். அங்கு அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர் எவரும் இருக்கமாட்டார்.
وَاَمَّا ثَمُوْدُ فَهَدَیْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰی عَلَی الْهُدٰی فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ۚ
ஸமூத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: நாம் அவர்களுக்கு எது நேர்வழி என்பதை எடுத்துக் காட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியைப் பார்ப்பதற்குப் பதிலாக குருடர்களாய் இருக்க விரும்பினார்கள்! இறுதியில், அவர்கள் செய்த தீவினைகளின் காரணமாக இழிவான வேதனை அவர்களைத் திடீரெனத் தாக்கியது.
وَنَجَّیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠
இறைநம்பிக்கை கொண்டு வழிகேட்டிலிருந்தும், தீய செயலில் இருந்தும் விலகியிருந்தவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
وَیَوْمَ یُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَی النَّارِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
அந்த நேரத்தை சற்று நினைவுகூருங்கள்: அப்போது அல்லாஹ்வின் இந்தப் பகைவர்கள் நரகின் பக்கம் கொண்டு செல்வதற்காக ஒன்று திரட்டப்படுவார்கள். அவர்களில் முன்னோர்கள், பின்னோர்கள் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
حَتّٰۤی اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَیْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
இறுதியில், அனைவரும் அங்கு சென்றடையும்போது அவர்களின் காதுகளும், அவர்களின் கண்களும், அவர்களுடைய உடம்பின் தோல்களும் உலகில் அவை என்னென்ன செயல்களைச் செய்து கொண்டிருந்தன என்று அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும்.
وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَیْنَا ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِیْۤ اَنْطَقَ كُلَّ شَیْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
அவர்கள் தங்கள் தோல்களைப் பார்த்துக் கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி சொன்னீர்கள்?” அதற்கு அவை பதிலளிக்கும்: “ஒவ்வொன்றையும் பேச வைத்த இறைவனாகிய அல்லாஹ்தான் எங்களையும் பேச வைத்தான். அவனே உங்களை முதன் முறையாகப் படைத்தான். மேலும், இப்போது அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுகின்றீர்கள்.
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ یَّشْهَدَ عَلَیْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا یَعْلَمُ كَثِیْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ۟
உலகில் நீங்கள் குற்றங்களை இரகசியமாக செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய காதுகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் எனும் எண்ணமே உங்களுக்கு இருந்ததில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்கள்.
وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِیْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰىكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களுடைய இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்தி விட்டது. அதே காரணத்தால் நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகிவிட்டீர்கள்.”
فَاِنْ یَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۚ وَاِنْ یَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِیْنَ ۟
இந்நிலையில் அவர்கள் பொறுமையுடனிருந்தாலும் (இல்லாவிட்டாலும்) நரகமே அவர்களின் இருப்பிடமாகும். மேலும், அவர்கள் திரும்பிச் செல்வதற்கு ஒரு வாய்ப்பை விரும்பினாலும் எந்த வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது.
وَقَیَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَیَّنُوْا لَهُمْ مَّا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۚ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟۠
அவர்கள் மீது சில நண்பர்களை நாம் சாட்டியிருந்தோம். அவர்களோ அவர்களுக்கு முன்னாலும் பின்னாலுமுள்ள ஒவ்வொன்றையும் அழகுபடுத்திக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்களுக்கு முன்பு வாழ்ந்த ஜின் இனத்தின் மீதும் மனித இனத்தின் மீதும் விதிக்கப்பட்ட வேதனையின் தீர்ப்பு அவர்கள் மீதும் விதிக்கப்பட்டு விட்டது. திண்ணமாக, அவர்கள் இழப்புக்குரியவர்களாகி விட்டனர்.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِیْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ ۟
சத்தியத்தை நிராகரிக்கும் இவர்கள் கூறுகிறார்கள்: “இந்தக் குர்ஆனை அறவே செவியேற்காதீர்கள். இது ஓதப்பட்டால், அதற்கு இடையூறு செய்யுங்கள்; இதன் மூலம் நீங்கள் வென்றுவிடலாம்.”
فَلَنُذِیْقَنَّ الَّذِیْنَ كَفَرُوْا عَذَابًا شَدِیْدًا ۙ وَّلَنَجْزِیَنَّهُمْ اَسْوَاَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟
நாம் இந்த நிராகரிப்பாளர்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்தே தீருவோம். அவர்கள் செய்து கொண்டிருந்த மிக மோசமான செயல்களுக்குரிய முழுக்கூலியையும் அவர்களுக்கு நாம் கொடுப்போம்.
ذٰلِكَ جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ ۚ لَهُمْ فِیْهَا دَارُ الْخُلْدِ ؕ جَزَآءً بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
அது நரகமாகும். அல்லாஹ்வின் பகைவர்களுக்கு அது கூலியாகக் கிடைக்கும். அதிலேயே அவர்களுக்கு நிரந்தரமான இருப்பிடம் இருக்கும். நம் சான்றுகளை நிராகரித்து வந்த குற்றத்திற்கான தண்டனை இதுதான்.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَیْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِیَكُوْنَا مِنَ الْاَسْفَلِیْنَ ۟
அங்கு இந்நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை வழிகெடுத்த ஜின்களையும், மனிதர்களையும் சற்று எங்களுக்குக் காண்பிப்பாயாக! அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழே போட்டு மிதித்து விடுகின்றோம், பெரும் கேவலத்தில் அவர்களை ஆழ்த்துவதற்காக!”
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَیْهِمُ الْمَلٰٓىِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
எவர்கள் “அல்லாஹ் எங்கள் இறைவன்” என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ திண்ணமாக, அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்: “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்!
نَحْنُ اَوْلِیٰٓؤُكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ وَلَكُمْ فِیْهَا مَا تَشْتَهِیْۤ اَنْفُسُكُمْ وَلَكُمْ فِیْهَا مَا تَدَّعُوْنَ ۟ؕ
நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்; இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்! அங்கு நீங்கள் விரும்புகின்றவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்கக்கூடிய ஒவ்வொன்றும் உங்களுடையதாகிவிடும்.
نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِیْمٍ ۟۠
பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும் இது!”
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَی اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும், நான் முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரைவிட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார்?
وَلَا تَسْتَوِی الْحَسَنَةُ وَلَا السَّیِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ فَاِذَا الَّذِیْ بَیْنَكَ وَبَیْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِیٌّ حَمِیْمٌ ۟
(நபியே!) நன்மையும் தீமையும் சமமாகமாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர்.
وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا ۚ وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
பொறுமை கொள்வோரைத் தவிர வேறெவர்க்கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத் தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை.
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
மேலும், ஷைத்தானின் தரப்பிலிருந்து ஏதேனும் தூண்டுதலை நீர் உணர்ந்தால் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரும். திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَمِنْ اٰیٰتِهِ الَّیْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ؕ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
இந்த இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளுள் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். மாறாக, அவற்றைப் படைத்த இறைவனுக்கே சிரம் பணியுங்கள், நீங்கள் உண்மையில் அவனையே வணங்குபவர்களாய் இருந்தால்!
فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِیْنَ عِنْدَ رَبِّكَ یُسَبِّحُوْنَ لَهٗ بِالَّیْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا یَسْـَٔمُوْنَ ۟
ஆனால், இவர்கள் கர்வம் கொண்டு தம் போக்கிலேயே பிடிவாதமாய் இருந்தால் பரவாயில்லை; உம் இறைவனிடம் நெருக்கமாய் உள்ள வானவர்கள் அல்லும் பகலும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் களைப்படைவதில்லை.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنَّكَ تَرَی الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ ؕ اِنَّ الَّذِیْۤ اَحْیَاهَا لَمُحْیِ الْمَوْتٰی ؕ اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
பூமி வறண்டு கிடப்பதையும் நீர் காண்கிறீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர்பெறு வதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். திண்ணமாக, இறந்துவிட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிரூட்டினானோ அந்த இறைவன், இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். திண்ணமாக, அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்.
اِنَّ الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اٰیٰتِنَا لَا یَخْفَوْنَ عَلَیْنَا ؕ اَفَمَنْ یُّلْقٰی فِی النَّارِ خَیْرٌ اَمْ مَّنْ یَّاْتِیْۤ اٰمِنًا یَّوْمَ الْقِیٰمَةِ ؕ اِعْمَلُوْا مَا شِئْتُمْ ۙ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
எவர்கள் நம் வசனங்களுக்கு மாறுபட்ட பொருள் கற்பிக்கின்றார்களோ அவர்கள் நம்மைவிட்டு மறைந்திருப்பவர் அல்லர். நீங்களே சிந்தியுங்கள். நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமைநாளில் நிம்மதியாக வருகைதருபவன் சிறந்தவனா? செய்து கொண்டிருங்கள் நீங்கள் விரும்பியவற்றை! உங்கள் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَآءَهُمْ ۚ وَاِنَّهٗ لَكِتٰبٌ عَزِیْزٌ ۟ۙ
இவர்கள் தங்களிடம் அறவுரை வந்தபோது அதனை நிராகரித்துவிட்டவர்கள்! ஆனால், உண்மையில் இது ஓர் ஆற்றல் மிக்க வேதமாகும்.
لَّا یَاْتِیْهِ الْبَاطِلُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَلَا مِنْ خَلْفِهٖ ؕ تَنْزِیْلٌ مِّنْ حَكِیْمٍ حَمِیْدٍ ۟
அசத்தியம் இதன் முன்னாலிருந்தும் வர முடியாது; பின்னாலிருந்தும் வர முடியாது. நுண்ணறிவாளனும், மிகுந்த புகழுக்குரியவனுமான இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும் இது!
مَا یُقَالُ لَكَ اِلَّا مَا قَدْ قِیْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ؕ اِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَلِیْمٍ ۟
(நபியே!) உமக்கு முன் சென்ற தூதர்களுக்குக் கூறப்படாத எந்த ஒன்றும் இதில் இல்லை. ஐயமின்றி உம்முடைய இறைவன் பெரிதும் பிழை பொறுப்பவன் ஆவான். (அத்துடன்) துன்புறுத்தும் தண்டனை அளிக்கக்கூடியவனுமாவான்.
وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِیًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰیٰتُهٗ ؕ ءَؔاَعْجَمِیٌّ وَّعَرَبِیٌّ ؕ قُلْ هُوَ لِلَّذِیْنَ اٰمَنُوْا هُدًی وَّشِفَآءٌ ؕ وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ فِیْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَیْهِمْ عَمًی ؕ اُولٰٓىِٕكَ یُنَادَوْنَ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟۠
நாம் இதனை அரபி மொழியல்லாத குர்ஆனாக ஆக்கி அனுப்பியிருந்தால் இவர்கள் கூறியிருப்பார்கள்: “இதன் வசனங்கள் ஏன் தெளிவாக விவரிக்கப்படவில்லை? வசனங்களோ அரபியல்லாத மொழியில்! அவை எடுத்துரைக்கப்படுவதோ அரபிகளிடம்! என்ன விந்தை இது!” இவர்களிடம் கூறும்: “இந்த குர்ஆன் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு வழிகாட்டியும் அருமருந்தும் ஆகும். ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லையோ, இது அவர்களின் காதுகளுக்கு அடைப்பும் கண்களுக்குத் திரையுமாகும். ஆகையால் அவர்களின் நிலைமை தொலைவிலிருந்து அழைக்கப்படுபவர்கள் போன்று இருக்கின்றது.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
இதற்கு முன்னால் நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கியிருந்தோம். அதுபற்றியும் இதே கருத்துவேறுபாடு தான் ஏற்பட்டிருந்தது. உம் இறைவன் முன்பே ஒரு விஷயத்தை முடிவு செய்திராவிட்டால், கருத்து வேறுபாடு கொண்ட அம்மக்களிடையே தீர்ப்பு எப்பொழுதோ வழங்கப்பட்டிருக்கும். நிச்சயமாக இம்மக்கள் அதுபற்றி கடும் மனக் குழப்பத்தைத்தரும் சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟
யாரேனும் நற்செயல் புரிந்தால் அவர் தனக்கே நன்மை செய்து கொள்கின்றார். மேலும், யாரேனும் தீமை செய்தால் அதன் தீய விளைவு அவரையே சாரும். உம் இறைவன் தன் அடிமைகளுக்கு கொடுமை இழைப்பவன் அல்லன்.
اِلَیْهِ یُرَدُّ عِلْمُ السَّاعَةِ ؕ وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ وَیَوْمَ یُنَادِیْهِمْ اَیْنَ شُرَكَآءِیْ ۙ قَالُوْۤا اٰذَنّٰكَ ۙ مَا مِنَّا مِنْ شَهِیْدٍ ۟ۚ
அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே சொந்த மானது. மொட்டுக்களிலிருந்து வெளிவருகின்ற கனிகள் பற்றியெல்லாம் அவன்தான் அறிகின்றான். எந்தப் பெண் கருவுற்றிருக்கிறாள், எவள் குழந்தை பெறுகின்றாள் என்பதையும் அவன் அறிகின்றான். இறைவன் இம்மக்களை அழைத்து, “எனக்கு இணையாக ஏற்படுத்தப்பட்டவை (கடவுளர்) எங்கே?” என்று கேட்கும் நாளில் இவர்கள் கூறுவார்கள்: “எங்களில் (இதற்கு) சாட்சியம் அளிப்பவர் எவரும் இலர் என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்.”
وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟
அப்பொழுது இதற்கு முன்பு இவர்கள் அழைத்துக் கொண்டிருந்த கடவுளர் அனைவரும் இவர்களை விட்டுக் காணாமல் போய்விடுவார்கள். மேலும் அப்பொழுது தங்களுக்கு இப்போது எந்தப் புகலிடமும் இல்லை என்பதை இந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
لَا یَسْـَٔمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَیْرِ ؗ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَیَـُٔوْسٌ قَنُوْطٌ ۟
நன்மையை வேண்டுவதில் மனிதன் எப்போதும் சோர்வுறுவதில்லை. ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டு விட்டால், நம்பிக்கை இழந்தவனாகவும் மனம் நொந்தவனாகவும் ஆகிவிடுகின்றான்.
وَلَىِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ هٰذَا لِیْ ۙ وَمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ وَّلَىِٕنْ رُّجِعْتُ اِلٰی رَبِّیْۤ اِنَّ لِیْ عِنْدَهٗ لَلْحُسْنٰی ۚ فَلَنُنَبِّئَنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْا ؗ وَلَنُذِیْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟
ஆனால், அவனைப் பீடித்திருந்த துன்பம் அவனைவிட்டு நீங்கிய பிறகு நாம் நம்முடைய அருளை அவனுக்குச் சுவைக்கக் கொடுத்தால் அப்போது அவன் கூறுகின்றான்: “நான் இதற்கு அருகதையுள்ளவன் ஆவேன். மேலும், மறுமைநாள் எப்பொழுதேனும் வரும் என்று நான் நினைக்கவில்லை. இனி, உண்மையில் என் அதிபதியிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப்பட்டாலோ அங்கேயும் எனக்கு இன்பம்தான் கிடைக்கும்!” எனினும் நிராகரிப்போருக்கு அவர்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவசியம் நாம் காண்பித்துத் தருவோம். மேலும், அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِیْضٍ ۟
மனிதனுக்கு நாம் அருட்பேறுகளை வழங்கும்போது அவன் புறக்கணிக்கின்றான். கர்வத்துடன் நடந்து கொள்கின்றான். ஆனால், அவனை ஏதேனும் ஆபத்து தீண்டிவிடும்போது நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகின்றான்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟
(நபியே! இவர்களிடம்) கூறும்: “நீங்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லையா? இந்தக் குர்ஆன் உண்மையில் இறைவனிடமிருந்து வந்திருந்தும், இன்னும் இதனை நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்களெனில், இதனை எதிர்ப்பதில் வெகுதூரம் சென்றுவிட்டவனைவிட அதிகம் வழிதவறிய மனிதன் வேறு யார் இருக்க முடியும்?”
سَنُرِیْهِمْ اٰیٰتِنَا فِی الْاٰفَاقِ وَفِیْۤ اَنْفُسِهِمْ حَتّٰی یَتَبَیَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّ ؕ اَوَلَمْ یَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
அதிவிரைவில் நாம் இவர்களுக்கு நம்முடைய சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்குள்ளேயும் காண்பித்துக் கொடுப்போம் இந்தக் குர்ஆன் சத்தியமானது எனும் உண்மை இவர்களுக்குத் தெளிவாகிவிடும் வரையில்! உம் இறைவன் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான் என்பது போதுமானதா, இல்லையா?
اَلَاۤ اِنَّهُمْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ ؕ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطٌ ۟۠
பாருங்கள்! இந்த மக்கள் தங்கள் இறைவனை சந்திக்கும் விஷயத்தில் ஐயம் கொண்டிருக்கின்றார்கள். கேட்டுக் கொள்ளுங்கள். திண்ணமாக, அவன் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்.