حٰمٓ ۟ۚ
ஹா மீம்;
Surah 40
Ghafir
40. ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்) / அல் காஃபிர் (மன்னிப்பவன்)
85 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
حٰمٓ ۟ۚ
ஹா மீம்;
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟ۙ
இவ்வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டிருக்கின்றது. அவனே வல்லமை மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன்!
غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِیْدِ الْعِقَابِ ۙ ذِی الطَّوْلِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ اِلَیْهِ الْمَصِیْرُ ۟
பாவத்தை மன்னிப்பவன்; பாவமன்னிப்புக் கோரி மீளுவதை ஏற்றுக் கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன்; அருட்பேறு உடையவன்! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டி யிருக்கிறது.
مَا یُجَادِلُ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ اِلَّا الَّذِیْنَ كَفَرُوْا فَلَا یَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِی الْبِلَادِ ۟
அல்லாஹ்வுடைய வசனங்களில் யாரும் தர்க்கம் புரிவதில்லை; நிராகரித்தவர்களைத் தவிர! இதன்பிறகு உலகநாடுகளில் அவர்களுடைய நடமாட்டம் உம்மை எந்த வகையிலும் ஏமாற்றிவிட வேண்டாம்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّالْاَحْزَابُ مِنْ بَعْدِهِمْ ۪ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍ بِرَسُوْلِهِمْ لِیَاْخُذُوْهُ وَجٰدَلُوْا بِالْبَاطِلِ لِیُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۫ فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
இவர்களுக்கு முன்பு நூஹுடைய சமூகத்தாரும் பொய்யென வாதிட்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிறகு, வேறு பல கூட்டத்தினரும் இவ்வாறு செய்துள்ளனர். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்களுடைய தூதரைப் பிடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் அனைவரும் அசத்தியத்தின் ஆயுதங்களால் சத்தியத்தை வீழ்த்திட முயன்றனர். ஆனால், இறுதியில் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்.
وَكَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ اَصْحٰبُ النَّارِ ۟
பிறகு பாருங்கள், என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையானது! ‘அவர்கள் நரகத்தில் நுழைபவர்களே!’ எனும் உம் அதிபதியின் தீர்ப்பு, இவ்வாறு அந்த நிராகரிப்பாளர்கள் அனைவர் மீதும் சார்ந்து விட்டது.
اَلَّذِیْنَ یَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیُؤْمِنُوْنَ بِهٖ وَیَسْتَغْفِرُوْنَ لِلَّذِیْنَ اٰمَنُوْا ۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَیْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِیْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِیْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
அர்ஷை* சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும் அதனைச் சுற்றியிருப்பவர்களும் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். (அவர்கள் கூறுகிறார்கள்:) “எங்கள் அதிபதியே! உனது கருணையாலும், உனது ஞானத்தினாலும் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறாய். எவர்கள் பாவ மன்னிப்புக்கோரி உன்னுடைய வழியைப் பின்பற்றினார்களோ அவர்களை மன்னிப்பாயாக! மேலும், அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக!
رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ لَّتِیْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ
மேலும், நீ அவர்களுக்கு வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களை நுழையச் செய்வாயாக! அவர்களுடைய தாய் தந்தையர்களிலும், மனைவியரிலும் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்களிலும் நல்லவர்களாய் இருப்பவர்களையும் (அவர்களுடன் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக!) திண்ணமாக, நீ வலிமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறாய்.
وَقِهِمُ السَّیِّاٰتِ ؕ وَمَنْ تَقِ السَّیِّاٰتِ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
மேலும், நீ அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாற்றுவாயாக! மறுமை நாளில் எவரை நீ தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறாயோ, அவர்மீது பெருங்கருணையைப் பொழிந்துவிட்டாய். இதுவே, மகத்தான வெற்றியாகும்.”
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنَادَوْنَ لَمَقْتُ اللّٰهِ اَكْبَرُ مِنْ مَّقْتِكُمْ اَنْفُسَكُمْ اِذْ تُدْعَوْنَ اِلَی الْاِیْمَانِ فَتَكْفُرُوْنَ ۟
எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களை (மறுமை நாளில்) அழைத்துக் கூறப்படும்: “இறைநம்பிக்கை கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது அல்லாஹ் உங்கள் மீது கொண்ட கோபம் (இன்று) நீங்கள் உங்கள் மீது கொள்கின்ற கோபத்தை விடவும் கடுமையானது.”
قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَیْنِ وَاَحْیَیْتَنَا اثْنَتَیْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰی خُرُوْجٍ مِّنْ سَبِیْلٍ ۟
அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ உண்மையில் எங்களுக்கு இரு தடவை இறப்பும், இரு தடவை வாழ்வும் அளித்துவிட்டாய்! இப்போது நாங்கள் எங்கள் தவறுகளை ஒப்புக்கொள்கிறோம். இனி, இங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?”
ذٰلِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِیَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ ۚ وَاِنْ یُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ؕ فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِیِّ الْكَبِیْرِ ۟
(பதில் கூறப்படும்:) இந்நிலை உங்களுக்கு ஏற்பட்டதற்குக் காரணம், ஏக அல்லாஹ்வின் பக்கம் மட்டும் அழைக்கப்பட்டபோது நீங்கள் ஏற்க மறுத்ததும், அவனோடு மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது அதை ஏற்றுக் கொண்டதும்தான்! இனி தீர்ப்பு வழங்குவது, மேலானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது.
هُوَ الَّذِیْ یُرِیْكُمْ اٰیٰتِهٖ وَیُنَزِّلُ لَكُمْ مِّنَ السَّمَآءِ رِزْقًا ؕ وَمَا یَتَذَكَّرُ اِلَّا مَنْ یُّنِیْبُ ۟
அவன்தான் உங்களுக்குத் தன்னுடைய சான்றுகளைக் காண்பிக்கிறான். மேலும், வானத்திலிருந்து உங்களுக்காக உணவை இறக்குகிறான். ஆனால், அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவன் மட்டுமே (இந்தச் சான்றுகளைக் கொண்டு) படிப்பினை பெறுகிறான்.
فَادْعُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
எனவே (அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றவர்களே!) உங்கள் தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனையே அழையுங்கள்; உங்களுடைய இந்தச் செயல் இறைநிராகரிப்பாளர்களுக்கு எவ்வளவு வெறுப்பூட்டக்கூடியதாய் இருந்தாலும் சரியே!
رَفِیْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ ۚ یُلْقِی الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِیُنْذِرَ یَوْمَ التَّلَاقِ ۟ۙ
அவன் உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்; அர்ஷின் உரிமையாளன்; அவன் தன்னுடைய அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது தனது கட்டளையால் ரூஹை இறக்கி வைக்கிறான்; சந்திக்கவிருக்கும் நாளைக் குறித்து அவர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!
یَوْمَ هُمْ بٰرِزُوْنَ ۚ۬ لَا یَخْفٰی عَلَی اللّٰهِ مِنْهُمْ شَیْءٌ ؕ لِمَنِ الْمُلْكُ الْیَوْمَ ؕ لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟
அந்நாளிலோ மக்கள் எந்தத் திரையுமின்றி வெளிப்பட்டுவிடுவார்கள். அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வை விட்டு மறைந்திருக்காது. (அன்று அழைத்துக் கேட்கப்படும்:) “இன்று ஆட்சியதிகாரம் யாருக்குரியது?” (அனைத்துலகமும் கூறும்:) “எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகன் ஆகிய அல்லாஹ்விற்குரியது.”
اَلْیَوْمَ تُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ؕ لَا ظُلْمَ الْیَوْمَ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
(அப்போது கூறப்படும்:) “இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதைச் சம்பாதித்தானோ, அதற்குரிய கூலி வழங்கப்படும். இன்று எவர் மீதும் எந்தவித அநீதியும் ஏற்படாது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிக விரைவானவன்!”
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَی الْحَنَاجِرِ كٰظِمِیْنَ ؕ۬ مَا لِلظّٰلِمِیْنَ مِنْ حَمِیْمٍ وَّلَا شَفِیْعٍ یُّطَاعُ ۟ؕ
(நபியே!) அண்மித்துவிட்டிருக்கும் அந்த நாளினைக் குறித்து இவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வீராக! அன்றோ இதயங்கள் தொண்டையை அடைத்துக் கொள்ளும். மேலும், மக்கள் துக்கத்தை மென்று விழுங்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது கொடுமைக்காரர்களுக்கு இரக்கம் காட்டுகிற எந்த நண்பனும் கிடைக்கமாட்டான். ஏற்றுக்கொள்ளத் தக்க எந்தப் பரிந்துரையாளனும் கிடைக்க மாட்டான்.
یَعْلَمُ خَآىِٕنَةَ الْاَعْیُنِ وَمَا تُخْفِی الصُّدُوْرُ ۟
கண்களின் கள்ளத்தனங்களையும், நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அல்லாஹ் அறிகின்றான்.
وَاللّٰهُ یَقْضِیْ بِالْحَقِّ ؕ وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَقْضُوْنَ بِشَیْءٍ ؕ اِنَّ اللّٰهَ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟۠
மேலும், அல்லாஹ் பாரபட்சமின்றி துல்லியமான தீர்ப்பு வழங்குவான். ஆனால், அல்லாஹ்வை விடுத்து யாரை இவர்கள் (இணைவைப்பாளர்கள்) அழைக்கிறார்களோ அவர்கள் எந்த விஷயத்திலும் தீர்ப்பு வழங்கக்கூடியவர்களல்லர். ஐயமின்றி, அல்லாஹ்தான் அனைத்தையும் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
இவர்கள் என்றாவது பூமியில் சுற்றித் திரிந்து, தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமையுடையவர்களாய் இருந்தார்கள். மேலும், இவர்களைவிட அதிகமாகப் பூமியில் பெரும் பெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைப் பிடித்துக் கொண்டான். மேலும், அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவரும் இருக்கவில்லை.
ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُ ؕ اِنَّهٗ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟
அவர்களுக்கு நேர்ந்த இந்த கதிக்குக் காரணம், அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதுதான். இறுதியில், அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். திண்ணமாக, அவன் வலிமை மிக்கவனாகவும் கடுமையாகத் தண்டிப்பவனாகவும் இருக்கிறான்.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
திண்ணமாக, நாம் மூஸாவை நம் அத்தாட்சிகளுடனும், தெளிவான நியமனச் சான்றுகளுடனும் அனுப்பினோம்.
اِلٰی فِرْعَوْنَ وَهَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ ۟
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் கூறிவிட்டார்கள், “சூனியக்காரர், பெரும் பொய்யர்” என்று!
فَلَمَّا جَآءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوا اقْتُلُوْۤا اَبْنَآءَ الَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ وَاسْتَحْیُوْا نِسَآءَهُمْ ؕ وَمَا كَیْدُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟
பின்னர், அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “எவர்கள் நம்பிக்கை கொண்டு இவர்களுடன் சேர்ந்துவிட்டார்களோ, அவர்கள் அனைவரின் ஆண் மக்களையும் கொன்றுவிடுங்கள்; பெண்மக்களை உயிரோடு விட்டுவிடுங்கள்.” ஆனால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி வீணாகவே போயிற்று.
وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِیْۤ اَقْتُلْ مُوْسٰی وَلْیَدْعُ رَبَّهٗ ۚ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّبَدِّلَ دِیْنَكُمْ اَوْ اَنْ یُّظْهِرَ فِی الْاَرْضِ الْفَسَادَ ۟
ஃபிர்அவ்ன் (ஒரு நாள் தன் அவையோரிடம்) கூறினான்: “விடுங்கள் என்னை! நான் இந்த மூஸாவைக் கொன்று விடுகின்றேன். அவர் அழைத்துப் பார்க்கட்டும், தன் அதி பதியை! இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது நாட்டில் அராஜகம் விளைவிப்பார் என்று நான் அஞ்சுகிறேன்!”
وَقَالَ مُوْسٰۤی اِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا یُؤْمِنُ بِیَوْمِ الْحِسَابِ ۟۠
மூஸா கூறினார்: “கணக்கு வாங்கப்படும் நாளின் மீது நம்பிக்கை கொள்ளாத அனைத்து ஆணவக்காரர்களை விட்டும் நான் என்னுடையவும், உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு தேடியிருக்கிறேன்.”
وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ۖۗ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَكْتُمُ اِیْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ یَّقُوْلَ رَبِّیَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَیِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ یَّكُ كَاذِبًا فَعَلَیْهِ كَذِبُهٗ ۚ وَاِنْ یَّكُ صَادِقًا یُّصِبْكُمْ بَعْضُ الَّذِیْ یَعِدُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ ۟
(இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர்அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த தம் நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்: “ஒரு மனிதர், அல்லாஹ்தான் என் இறைவன் என்று கூறுகிறார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராய் இருந்தால், எந்த பயங்கரமான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைப் பீடிக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
یٰقَوْمِ لَكُمُ الْمُلْكُ الْیَوْمَ ظٰهِرِیْنَ فِی الْاَرْضِ ؗ فَمَنْ یَّنْصُرُنَا مِنْ بَاْسِ اللّٰهِ اِنْ جَآءَنَا ؕ قَالَ فِرْعَوْنُ مَاۤ اُرِیْكُمْ اِلَّا مَاۤ اَرٰی وَمَاۤ اَهْدِیْكُمْ اِلَّا سَبِیْلَ الرَّشَادِ ۟
என் சமுதாய மக்களே! இன்று உங்களுக்கு ஆட்சியதிகாரம் இருக்கிறது; பூமியில் நீங்கள் மேலோங்கியவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால், இறைவனுடைய தண்டனை நம்மீது வந்து விட்டால் நமக்கு உதவக்கூடியவர் யார் இருக்கிறார்?” ஃபிர்அவ்ன் கூறினான்: “எனக்குப் பொருத்தமாகத் தென்படுகின்ற கருத்தைத்தான் நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மேலும், நேரான வழியைத்தான் நான் உங்களுக்குக் காண்பிக்கின்றேன்.”
وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ مِّثْلَ یَوْمِ الْاَحْزَابِ ۟ۙ
இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என்னுடைய சமுதாய மக்களே! இதற்கு முன் பல கூட்டத்தார்களின் மீது வந்த அந்த நாள் உங்களின் மீதும் வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.
مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ؕ وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعِبَادِ ۟
நூஹின் சமூகத்தினர், ஆத், ஸமூத் சமூகத்தினர் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த சமுதாயத்தினர் ஆகியோர் மீது வந்த நாளைப் போன்று! மேலும், உண்மையில் அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு எந்த அநீதியும் இழைக்க வேண்டுமென்று கருதுவதில்லை.
وَیٰقَوْمِ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ یَوْمَ التَّنَادِ ۟ۙ
மேலும் என் சமூகத்தாரே! அழுது புலம்பி ஒருவர் மற்றவரை அழைக்கும் நாள் உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
یَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِیْنَ ۚ مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
அன்று நீங்கள் திரும்பிப் பாராமல் ஓடிக்கொண்டிருப்பீர்கள். ஆனால், அவ்வேளை அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார். உண்மையாதெனில், எவனை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனுக்கு வழிகாட்டுபவர் எவரும் இருப்பதில்லை.
وَلَقَدْ جَآءَكُمْ یُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَیِّنٰتِ فَمَا زِلْتُمْ فِیْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰۤی اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ یَّبْعَثَ اللّٰهُ مِنْ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابُ ۟ۚۖ
இதற்கு முன் யூஸுஃப், உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்கள் அவர் கொண்டு வந்த அறிவுரைகள் குறித்து சந்தேகத்தில் விழுந்து கிடந்தீர்கள். பிறகு அவர் மரணமடைந்தபோது நீங்கள் கூறினீர்கள், “அவருக்குப் பின் அல்லாஹ் எந்தத் தூதரையும் ஒருபோதும் அனுப்பமாட்டான்” என்று இவ்வாறு வரம்பு மீறுவோர், ஐயம் கொள்வோர் அனைவரையும் அல்லாஹ் வழிகேட்டில் தள்ளுகிறான்.
لَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ؕ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ ۟
அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வின் வசனங்களைக் குறித்து தர்க்கம் புரிகிறார்கள், எவ்விதச் சான்றும் ஆதாரமும் தங்களிடம் வராமலேயே! இந்த நடத்தை அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டோரிடமும் மிகவும் வெறுப்புக்குரியதாகும். இவ்வாறே ஒவ்வொரு ஆணவக்காரனுடையவும் கொடுங்கோலனுடையவும் உள்ளத்தின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.
وَقَالَ فِرْعَوْنُ یٰهَامٰنُ ابْنِ لِیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَبْلُغُ الْاَسْبَابَ ۟ۙ
ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! நீ எனக்கு ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பு. ஏனெனில், நான் வழிகளைச் சென்றடைவதற்காக
اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی وَاِنِّیْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُیِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِیْلِ ؕ وَمَا كَیْدُ فِرْعَوْنَ اِلَّا فِیْ تَبَابٍ ۟۠
வானத்தின் வழிகளை! மேலும், மூஸாவின் இறைவனை நான் எட்டிப்பார்க்க வேண்டும். நான் இந்த மூஸாவைப் பொய்யராகத்தான் கருதுகின்றேன்!” இவ்வாறு ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. மேலும், அவன் நேரிய வழியை விட்டுத் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவனது அழிவுப்பாதையில்தான் செலவாயின.
وَقَالَ الَّذِیْۤ اٰمَنَ یٰقَوْمِ اتَّبِعُوْنِ اَهْدِكُمْ سَبِیْلَ الرَّشَادِ ۟ۚ
இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என் சமுதாய மக்களே! நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சரியான வழியைத்தான் காட்டுகின்றேன்.
یٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَا مَتَاعٌ ؗ وَّاِنَّ الْاٰخِرَةَ هِیَ دَارُ الْقَرَارِ ۟
என் சமூகத்தினரே! இந்த உலக வாழ்க்கை சில நாட்கள்தாம்! திண்ணமாக, மறுமைதான் நிலையான தங்குமிடமாகும்;
مَنْ عَمِلَ سَیِّئَةً فَلَا یُجْزٰۤی اِلَّا مِثْلَهَا ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ یُرْزَقُوْنَ فِیْهَا بِغَیْرِ حِسَابٍ ۟
தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும்.
وَیٰقَوْمِ مَا لِیْۤ اَدْعُوْكُمْ اِلَی النَّجٰوةِ وَتَدْعُوْنَنِیْۤ اِلَی النَّارِ ۟ؕ
மேலும், என் சமூகத்தினரே, இது என்ன நியாயம்? நானோ உங்களை ஈடேற்றத்தின் பக்கம் அழைக்கின்றேன். ஆனால், நீங்களோ என்னை நெருப்பின் பக்கம் அழைக்கின்றீர்கள்.
تَدْعُوْنَنِیْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؗ وَّاَنَا اَدْعُوْكُمْ اِلَی الْعَزِیْزِ الْغَفَّارِ ۟
அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும், நான் அறிந்திடாதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். அதே நேரத்தில் நானோ வல்லமை மிக்கவனும் பெரும் மன்னிப்பாளனுமான இறைவனின் பக்கம் உங்களை அழைத்துக்கொண்டிருக்கின்றேன்.
لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ لَیْسَ لَهٗ دَعْوَةٌ فِی الدُّنْیَا وَلَا فِی الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَاۤ اِلَی اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِیْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ ۟
இல்லை; சத்தியம் இதுதான்; இதற்கு மாறாக நடக்காது; அதாவது, நீங்கள் என்னை எவற்றின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ அவற்றிற்கு எவ்வித அழைப்பும் இந்த உலகில் இல்லை. மறுமையிலும் இல்லை. மேலும், நாம் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்ப வேண்டியுள்ளது. வரம்பு மீறுவோர் நரகம் செல்லக்கூடியவர்களாவர்.
فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَكُمْ ؕ وَاُفَوِّضُ اَمْرِیْۤ اِلَی اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟
இன்று உங்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கும் ஒரு நேரம் அதிவிரைவில் வந்துவிடும். மேலும், நான் என் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளை கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
فَوَقٰىهُ اللّٰهُ سَیِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِ ۟ۚ
இறுதியில், (அந்நம்பிக்கையாளருக்கு எதிராக) அந்த மக்கள் கையாண்ட எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளிலிருந்தும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கொண்டான். மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கொடிய வேதனை சூழ்ந்து கொண்டது.
اَلنَّارُ یُعْرَضُوْنَ عَلَیْهَا غُدُوًّا وَّعَشِیًّا ۚ وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ ۫ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ ۟
நரக நெருப்பு! அதன் முன்பு காலையிலும் மாலையிலும் அவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது ஆணையிடப்படும்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மிகக் கடுமையான வேதனையில் புகுத்துங்கள்!
وَاِذْ یَتَحَآجُّوْنَ فِی النَّارِ فَیَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِیْبًا مِّنَ النَّارِ ۟
பிறகு, நரகத்தில் இவர்கள் ஒருவர் மற்றவருடன் தர்க்கம் செய்துகொண்டிருக்கும் நேரத்தைச் சற்று நினைத்துப் பாருங்கள். (உலகில்) பலவீனர்களாய் இருந்த மக்கள், பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டவர்களை நோக்கிச் சொல்வார்கள்: “நாங்கள் உங்களைப் பின்பற்றுவோராய் இருந்தோம். (இப்போது இங்கு) நரக வேதனையிலிருந்து சிறிதளவாவது எங்களைக் காப்பாற்றுவீர்களா?”
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِیْهَاۤ ۙ اِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَیْنَ الْعِبَادِ ۟
பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டிருந்தவர்கள் பதில் அளிப்பார்கள்: “நாம் அனைவரும் இங்கு ஒரே நிலையில் இருக்கின்றோம்; அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து விட்டான்.”
وَقَالَ الَّذِیْنَ فِی النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ یُخَفِّفْ عَنَّا یَوْمًا مِّنَ الْعَذَابِ ۟
மேலும், நரகத்தில் வீழ்ந்துகிடக்கும் அம்மக்கள் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்: “எங்களின் வேதனையை ஒரு நாளைக்கேனும் குறைப்பதற்கு நீங்கள் உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்.”
قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِیْكُمْ رُسُلُكُمْ بِالْبَیِّنٰتِ ؕ قَالُوْا بَلٰی ؕ قَالُوْا فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓؤُا الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟۠
அதற்கு அவர்கள் கேட்பார்கள்: “உங்களிடம் இறைத்தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்து கொண்டிருக்கவில்லையா? அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளிப்பார்கள். அப்பொழுது நரகத்தின் காவலர்கள் கூறுவர்: “அப்படியாயின் நீங்களே இறைஞ்சிக் கொள்ளுங்கள்!” நிராகரிப்பாளர்களின் இறைஞ்சுதல் பயனற்றுப் போய்விடும்.
اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُ ۟ۙ
உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்: நாம் நம்முடைய தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்விலும் அவசியம் உதவி செய்கின்றோம்; சாட்சிகள் நிற்கும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்.
یَوْمَ لَا یَنْفَعُ الظّٰلِمِیْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟
அந்நாளில் கொடுமைக்காரர்களுக்கு அவர்களுடைய சாக்குப்போக்குகள் எந்தப் பயனையும் அளித்திடமாட்டா; அவர்கள் மீது சாபம் உண்டாகும். மேலும், மிக மோசமான தங்குமிடம் அவர்களுக்குக் கிடைக்கும்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْهُدٰی وَاَوْرَثْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ ۟ۙ
தெரிந்துகொள்ளுங்கள்: மூஸாவுக்கு நாம் நேர்வழி காட்டினோம். மேலும், இஸ்ராயீலின் வழித் தோன்றல்களை வேதத்தின் வாரிசுகளாய் ஆக்கினோம்;
هُدًی وَّذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟
அவ்வேதம் அறிவுடையோருக்கு வழிகாட்டியாகவும் அறிவுரையாகவும் திகழ்ந்தது.
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟
எனவே, (நபியே!) நீர் பொறுமையாய் இரும்! அல்லாஹ்வின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. மேலும், உம் தவறுக்காக மன்னிப்புக் கோரும்! காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதித்துக் கொண்டுமிரும்.
اِنَّ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙ اِنْ فِیْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِیْهِ ۚ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
சான்றோ, ஆதாரமோ எதுவுமே தங்களிடம் வந்திருக்காத நிலையில், எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் புரிகின்றார்களோ அவர்களின் நெஞ்சங்களில் (தாமே பெரியவர்கள் எனும்) அகங்காரம் நிறைந்துள்ளது. ஆனாலும், அவர்கள் அந்தப் பெருமையை அடையப் போவதில்லை. எனவே (நபியே!) அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! திண்ணமாக, அவன் அனைத்தையும் பார்ப்பவனாகவும் கேட்பவனாகவும் இருக்கின்றான்.
لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
வானங்களையும் பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட நிச்சயம் மாபெரும் சாதனையாகும். எனினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِیْٓءُ ؕ قَلِیْلًا مَّا تَتَذَكَّرُوْنَ ۟
மேலும், குருடனும் பார்வையுள்ளவனும் சமமாக முடியாது; இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவரும் தீயவரும் சமமாக முடியாது; ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே உணர்கின்றீர்கள்.
اِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
திண்ணமாக, மறுமை நாள் வரத்தான் போகின்றது; அதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும், மக்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை.
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ ۟۠
உங்கள் இறைவன் கூறுகின்றான்: “என்னிடம் இறைஞ்சுங்கள்! நான் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வேன். திண்ணமாக, எவர்கள் தற்பெருமை கொண்டு எனக்கு வழிபட மறுக்கின்றார்களோ அவர்கள் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாகி அவசியம் நரகில் நுழைவார்கள்.
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
அல்லாஹ்தான் உங்களுக்காக இரவைப் படைத்தான்; அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காக! மேலும், பகலை ஒளியுடையதாக்கினான். உண்மையில், அல்லாஹ் மக்கள் மீது அருள்புரிபவனாக இருக்கின்றான். ஆனால், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَیْءٍ ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚؗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
(உங்களுக்காக இவை அனைத்தையும் செய்திருக்கும்) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; ஒவ்வொரு பொருளின் படைப்பாளன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. பின்னர் நீங்கள் எங்கிருந்து வழிபிறழச் செய்யப்படுகின்றீர்கள்?
كَذٰلِكَ یُؤْفَكُ الَّذِیْنَ كَانُوْا بِاٰیٰتِ اللّٰهِ یَجْحَدُوْنَ ۟
இவ்வாறே, அல்லாஹ்வின் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வழிபிறழச் செய்யப்படுகிறார்கள்.
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۖۚ فَتَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
அல்லாஹ்தான் உங்களுக்காகப் பூமியைத் தங்குமிடமாகவும் மேலே வானத்தை முகடாகவும் அமைத்தான். அவனே உங்களுக்கு வடிவங்கள் அமைத்தான்; உங்கள் வடிவங்களை மிகவும் அழகுபட அமைத்தான். மேலும், அவன் உங்களுக்குத் தூய்மையான பொருள்களிலிருந்து உணவளித்தான். (இவற்றைச் செய்த) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; அகில உலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
هُوَ الْحَیُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
அவனே நித்திய ஜீவனாக இருக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறெவரும் இல்லை. ஆகவே, அவனிடமே இறைஞ்சுங்கள்; உங்களுடைய தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கியவர்களாய்! புகழ் அனைத்தும் அகில உலகங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
قُلْ اِنِّیْ نُهِیْتُ اَنْ اَعْبُدَ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِیَ الْبَیِّنٰتُ مِنْ رَّبِّیْ ؗ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
(நபியே! இம்மக்களிடம்) கூறிவிடும்: “நீங்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு எவற்றையெல்லாம் அழைக்கின்றீர்களோ அவற்றை வணங்குவதைவிட்டு நான் தடுக்கப்பட்டிருக்கின்றேன்; என் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகள் என்னிடம் வந்திருக்கும்போது (நான் இதனை எப்படிச் செய்ய முடியும்?) அகில உலகங்களின் அதிபதியின் முன்னால் கீழ்ப்படிந்துவிட வேண்டும் என நான் பணிக்கப்பட்டிருக்கின்றேன்.
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ یُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُیُوْخًا ۚ وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّی وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
அவனே உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின்னர் விந்திலிருந்து பின்னர் இரத்தக்கட்டியிலிருந்து! பின்னர், அவன் உங்களைக் குழந்தையின் வடிவில் வெளிக்கொணர்கின்றான். பின்னர், நீங்கள் உங்கள் முழு வலிமையை அடையும் வரை உங்களை வளர்த்து வருகின்றான்; பிறகு நீங்கள் முதுமையை அடையும் வரையிலும் வளர்க்கின்றான்! மேலும், உங்களில் சிலர் முன்னதாகவே திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். எதற்காக இவையனைத்தும் செய்யப்படுகின்றனவெனில் உங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் உண்மையை அறிவதற்காகவும்தான்!
هُوَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۚ فَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠
அவனே வாழ்வளிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் ஆவான். அவன் எந்த விஷயத்தைத் தீர்மானித்தாலும் ‘ஆகு!’ என்றுதான் ஆணையிடுகின்றான். உடனே அது ஆகிவிடுகின்றது.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ ؕ اَنّٰی یُصْرَفُوْنَ ۟
அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? எங்கிருந்து அவர்கள் திசைதிருப்பப்படுகின்றார்கள்?
الَّذِیْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ۫ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟ۙ
இவர்கள் இந்த வேதத்தையும் நாம், நம் தூதர்களுடன் அனுப்பிவைத்திருந்த அனைத்து வேதங்களையும் பொய்யெனக் கூறுகின்றார்கள். விரைவில் இவர்களுக்குத் தெரிந்துவிடும்;
اِذِ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُ ؕ یُسْحَبُوْنَ ۟ۙ
அப்பொழுது அவர்களுடைய கழுத்துகள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கும்.
فِی الْحَمِیْمِ ۙ۬ ثُمَّ فِی النَّارِ یُسْجَرُوْنَ ۟ۚ
அவர்கள் கொதிநீரின் பக்கம் இழுத்துவரப்படுவார்கள்; பின்னர் நரகத்தில் வீசியெறியப்படுவார்கள்.
ثُمَّ قِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَ ۟ۙ
“அல்லாஹ்வை விடுத்து நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்த மற்ற கடவுள்கள் இப்போது எங்கே?” என்று அவர்களிடம் கேட்கப்படும்.
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَیْـًٔا ؕ كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ الْكٰفِرِیْنَ ۟
அப்போது அவர்கள் பதில் அளிப்பார்கள்: “அவர்கள் எங்களை விட்டும் காணாமல் போய் விட்டார்கள். உண்மையில், நாங்கள் இதற்கு முன்பு எதனையும் அழைத்துக் கொண்டிருக்கவில்லை.” இவ்வாறாக, நிராகரிப்பாளர்கள் வழிகெட்டிருப்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தி விடுவான்.
ذٰلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُوْنَ ۟ۚ
அவர்களிடம் கூறப்படும்: “உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் உண்மைக்கு மாற்றமானதைக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தீர்கள்; பூரிப்பில் இறுமாந்து கொண்டும் இருந்தீர்கள்.
اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
இப்போது நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள்; நீங்கள் அதிலேயே நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க வேண்டியுள்ளது, அகங்காரம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும்.
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟
(நபியே!) பொறுமையைக் கைக்கொள்ளும்! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எந்தத் தீய விளைவுகளைப் பற்றி நாம் இவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றோமோ அவற்றில் சிலவற்றை நாம் உம் கண்ணெதிரில் காட்டித் தந்தாலும் சரி; அல்லது (அதற்கு முன்பே) உலகைவிட்டு உம்மை எடுத்துக் கொண்டாலும் சரி. இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது.
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَیْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَیْكَ ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۚ فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِیَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ ۟۠
மேலும், (நபியே!) நாம் உமக்கு முன்பு இறைத்தூதர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலரைக் குறித்து உமக்கு எடுத்துரைத்திருக்கின்றோம். வேறு சிலரைப் பற்றி உமக்கு நாம் எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஒரு சான்றையும் சுயமாகக் கொண்டு வரும் ஆற்றல் எந்தத் தூதருக்கும் இருக்கவில்லை. பிறகு, அல்லாஹ்வின் கட்டளை வந்தபோது சத்தியத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது; மேலும், அப்போது தவறு செய்தவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.
اَللّٰهُ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَاْكُلُوْنَ ۟ؗ
அல்லாஹ்தான் உங்களுக்காக இந்தக் கால்நடைகளைப் படைத்திருக்கின்றான் அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்வதற்காகவும், வேறு சிலவற்றின் இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும்!
وَلَكُمْ فِیْهَا مَنَافِعُ وَلِتَبْلُغُوْا عَلَیْهَا حَاجَةً فِیْ صُدُوْرِكُمْ وَعَلَیْهَا وَعَلَی الْفُلْكِ تُحْمَلُوْنَ ۟ؕ
அவற்றில் உங்களுக்கு இன்னும் பல பயன்கள் உள்ளன. உங்கள் இதயம் விரும்புகின்ற இடத்தை நீங்கள் அடைவதற்கு அவற்றின் மீது சவாரி செய்கிறீர்கள். அந்தக் கால்நடைகளின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் ஏற்றிச்செல்லப் படுகின்றீர்கள்.
وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ ۖۗ فَاَیَّ اٰیٰتِ اللّٰهِ تُنْكِرُوْنَ ۟
அல்லாஹ் இத்தகைய தன்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கின்றான். அவ்வாறிருக்க, அவனுடைய எந்தெந்தச் சான்றுகளை நீங்கள் மறுப்பீர்கள்?
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْۤا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّاٰثَارًا فِی الْاَرْضِ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் வாழ்ந்து சென்றவர்களுக்கு நேர்ந்த கதியை இவர்கள் காணவில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக எண்ணிக்கையுடையவர்களாகவும், மிக்க பலமுடையவர்களாகவும் இருந்தனர். மேலும், பூமியில் இவர்களைவிட மாபெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் சம்பாதித்தார்களோ அவை இறுதியில் அவர்களுக்கு என்ன பயனைத் தந்தது?
فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرِحُوْا بِمَا عِنْدَهُمْ مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது, தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்துபோயிருந்தார்கள். பின்னர், அவர்கள் எதைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ அதன் சுழற்சியிலேயே அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள்.
فَلَمَّا رَاَوْا بَاْسَنَا قَالُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِیْنَ ۟
அவர்கள் நம்முடைய தண்டனையைக் கண்டபோது, “இணை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அவனுக்கு இணையானவையாக நாங்கள் ஏற்படுத்தியிருந்த தெய்வங்கள் அனைத்தையும் நிராகரிக்கின்றோம்” என்று உரக்கக் கூறினர்.
فَلَمْ یَكُ یَنْفَعُهُمْ اِیْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَاْسَنَا ؕ سُنَّتَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ فِیْ عِبَادِهٖ ۚ وَخَسِرَ هُنَالِكَ الْكٰفِرُوْنَ ۟۠
ஆனால், நம்முடைய தண்டனையைக் கண்ட பின்னால் அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது போயிற்று. ஏனெனில், இதுவே அல்லாஹ்வின் நியதி; இது அவனுடைய அடிமைகளுக்கிடையே என்றென்றும் நடைபெற்று வருகின்றது. மேலும், அந்நேரம் நிராகரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு ஆளாகி விட்டார்கள்.