كٓهٰیٰعٓصٓ ۟۫ۚ
காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.
كٓهٰیٰعٓصٓ ۟۫ۚ
காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ
உம் இறைவன் தன் அடியார் ஜகரிய்யா மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும் இது.
اِذْ نَادٰی رَبَّهٗ نِدَآءً خَفِیًّا ۟
அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்தபோது!
قَالَ رَبِّ اِنِّیْ وَهَنَ الْعَظْمُ مِنِّیْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَیْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآىِٕكَ رَبِّ شَقِیًّا ۟
அவர் பணிவுடன் வேண்டினார்: “என் அதிபதியே! என் எலும்புகளோ நலிவடைந்துவிட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுத்துவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை.
وَاِنِّیْ خِفْتُ الْمَوَالِیَ مِنْ وَّرَآءِیْ وَكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا فَهَبْ لِیْ مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۟ۙ
எனக்குப்பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக்கூடிய) தீயவழி பற்றி நான் அஞ்சுகிறேன். மேலும், என்னுடைய மனைவி மலடியாக இருக்கின்றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு ஒரு வாரிசை வழங்குவாயாக!
یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۖۗ وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟
அவர் எனக்கும் யஃகூபுடைய குடும்பத்தினருக்கும் வாரிசாகத் திகழட்டும். மேலும், என் இறைவா! அவரை விரும்பத்தக்க மனிதராய் ஆக்குவாயாக!”
یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ سْمُهٗ یَحْیٰی ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟
(பதிலளிக்கப்பட்டது:) “ஜகரிய்யாவே! உமக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கின்றோம்; அதன் பெயர் ‘யஹ்யா’ ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை.”
قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِیًّا ۟
அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையினால் தளர்ந்து போய்விட்டேன்.”
قَالَ كَذٰلِكَ ۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَیَّ هَیِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَیْـًٔا ۟
பதில் கிடைத்தது: “அவ்வாறே ஆகும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “இது என்னைப் பொறுத்து சுலபமானதாகும் இதற்கு முன், நீர் எப்பொருளாகவும் இல்லாதிருந்தபோது, நான் உம்மைப் படைத்திருக்கின்றேனே!”
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَیَالٍ سَوِیًّا ۟
அதற்கு ஜகரிய்யா, “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்வாயாக” என்றார். அதற்கு இறைவன், “உமக்கு அடையாளம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மக்களிடம் உம்மால் பேச இயலாமல் போவதாகும்” என்றான்.
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰۤی اِلَیْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِیًّا ۟
பிறகு, அவர் மாடத்திலிருந்து வெளியேறி தம் சமுதாயத்தாரிடம் வந்து, “நீங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதியுங்கள்” என்று சாடையாய் உணர்த்தினார்.
یٰیَحْیٰی خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ؕ وَاٰتَیْنٰهُ الْحُكْمَ صَبِیًّا ۟ۙ
“யஹ்யாவே, நீர் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும்.” குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு நாம் ஹுக்மை* வழங்கினோம்.
وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً ؕ وَكَانَ تَقِیًّا ۟ۙ
மேலும், நம்மிடமிருந்து இளகிய மனத்தையும் தூய்மையையும் வழங்கியிருந்தோம்.
وَّبَرًّا بِوَالِدَیْهِ وَلَمْ یَكُنْ جَبَّارًا عَصِیًّا ۟
அவர் மிகவும் பேணுதல் உள்ளவராயும் தம் தாய் தந்தையரின் கடமைகளைச் செவ்வனே ஆற்றுபவராகவும் திகழ்ந்தார். அவர் முரடராகவோ, கீழ்ப்படியாதவராகவோ இருக்கவில்லை.
وَسَلٰمٌ عَلَیْهِ یَوْمَ وُلِدَ وَیَوْمَ یَمُوْتُ وَیَوْمَ یُبْعَثُ حَیًّا ۟۠
அவர்மீது சாந்தி உண்டாகட்டும் அவர் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளிலும்!
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مَرْیَمَ ۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِیًّا ۟ۙ
மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில்
فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا ۪۫ فَاَرْسَلْنَاۤ اِلَیْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِیًّا ۟
அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார்.
قَالَتْ اِنِّیْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِیًّا ۟
உடனே மர்யம் கூறினார்: “உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!”
قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ۖۗ لِاَهَبَ لَكِ غُلٰمًا زَكِیًّا ۟
அதற்கு அவர் கூறினார்: “நான் உம் இறைவனின் தூதராவேன்; தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”
قَالَتْ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِیًّا ۟
மர்யம் கூறினார்: “எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!”
قَالَ كَذٰلِكِ ۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَیَّ هَیِّنٌ ۚ وَلِنَجْعَلَهٗۤ اٰیَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ وَكَانَ اَمْرًا مَّقْضِیًّا ۟
அதற்கு வானவர் கூறினார்: “அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது;மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும், அது நடந்தே தீரும்!”
فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِیًّا ۟
பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார்.
فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰی جِذْعِ النَّخْلَةِ ۚ قَالَتْ یٰلَیْتَنِیْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْیًا مَّنْسِیًّا ۟
பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருந்திருக்கக் கூடாதா?” என்று கூறலானார்.
فَنَادٰىهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِیْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِیًّا ۟
அப்பொழுது கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்: “நீர் கவலைப்படாதீர்; உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.
وَهُزِّیْۤ اِلَیْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَیْكِ رُطَبًا جَنِیًّا ۟ؗ
மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும். அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும்;
فَكُلِیْ وَاشْرَبِیْ وَقَرِّیْ عَیْنًا ۚ فَاِمَّا تَرَیِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِیْۤ اِنِّیْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْیَوْمَ اِنْسِیًّا ۟ۚ
ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் (அவரிடம்) கூறிவிடும்: “கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கின்றேன். ஆதலால், இன்று நான் எவரிடமும் பேசமாட்டேன்.”
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ ؕ قَالُوْا یٰمَرْیَمُ لَقَدْ جِئْتِ شَیْـًٔا فَرِیًّا ۟
பிறகு, அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர்: “மர்யமே! நீ ஒரு பெரும் பாவச்செயலைச் செய்து விட்டாயே...!
یٰۤاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِیًّا ۟ۖۚ
ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தையுடையவளாய் இருக்கவில்லை!”
فَاَشَارَتْ اِلَیْهِ ؕ قَالُوْا كَیْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِی الْمَهْدِ صَبِیًّا ۟
அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?”
قَالَ اِنِّیْ عَبْدُ اللّٰهِ ؕ۫ اٰتٰىنِیَ الْكِتٰبَ وَجَعَلَنِیْ نَبِیًّا ۟ۙ
உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்;
وَّجَعَلَنِیْ مُبٰرَكًا اَیْنَ مَا كُنْتُ ۪ وَاَوْصٰنِیْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَیًّا ۪۟ۖ
பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!
وَّبَرًّا بِوَالِدَتِیْ ؗ وَلَمْ یَجْعَلْنِیْ جَبَّارًا شَقِیًّا ۟
மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை.
وَالسَّلٰمُ عَلَیَّ یَوْمَ وُلِدْتُّ وَیَوْمَ اَمُوْتُ وَیَوْمَ اُبْعَثُ حَیًّا ۟
என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!”
ذٰلِكَ عِیْسَی ابْنُ مَرْیَمَ ۚ قَوْلَ الْحَقِّ الَّذِیْ فِیْهِ یَمْتَرُوْنَ ۟
இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும்.
مَا كَانَ لِلّٰهِ اَنْ یَّتَّخِذَ مِنْ وَّلَدٍ ۙ سُبْحٰنَهٗ ؕ اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟ؕ
எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வின் நியதியல்ல! அவன் புனிதமானவன்; அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் “ஆகிவிடு” என்றுதான் ஆணையிடுகின்றான்; உடனே அது ஆகிவிடுகின்றது.
وَاِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
மேலும் (ஈஸா கூறியிருந்தார்:) “திண்ணமாக, என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ்தான்! எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். இதுதான் நேரான வழியாகும்!”
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ یَوْمٍ عَظِیْمٍ ۟
ஆயினும், அவர்களில் பல்வேறு பிரிவினர் தமக்குள் கருத்து மாறுபாடு கொள்ளலாயினர். எனவே, அந்த மாபெரும் மறுமை நாளினை அவர்கள் பார்க்கும்போது இறைவனை நிராகரித்தவர்களுக்கு பெரும் கேடுதான் விளையும்!
اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْ ۙ یَوْمَ یَاْتُوْنَنَا لٰكِنِ الظّٰلِمُوْنَ الْیَوْمَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
அவர்கள் நம்மிடம் வரும் நாளில் அவர்களுடைய காதுகள் நன்கு கேட்டுக்கொண்டிருக்கும்; கண்கள் நன்கு பார்த்துக் கொண்டிருக்கும். ஆயினும், இந்தக் கொடுமையாளர்கள் இன்று வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்!
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِیَ الْاَمْرُ ۘ وَهُمْ فِیْ غَفْلَةٍ وَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
(நபியே!) இம்மக்கள் கவனமின்றியும், நம்பிக்கை கொள்ளாதவர்களாயும் உள்ள இந்நிலையில், அந்த மறுமைநாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அந்நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்போது வருந்துவதைத்தவிர வேறு வழியேதும் இராது.
اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَیْهَا وَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟۠
இறுதியில், இப்பூமிக்கும் இதன் மீதுள்ள பொருள்கள் அனைத்திற்கும் நாமே வாரிசாகிவிடுவோம். மேலும், எல்லாரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِبْرٰهِیْمَ ؕ۬ اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟
மேலும், இவ்வேதத்தில் உள்ள இப்ராஹீமின் சரிதையை விவரிப்பீராக! திண்ணமாக, அவர் வாய்மை உள்ளவராகவும், நபியாகவும் இருந்தார்.
اِذْ قَالَ لِاَبِیْهِ یٰۤاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا یَسْمَعُ وَلَا یُبْصِرُ وَلَا یُغْنِیْ عَنْكَ شَیْـًٔا ۟
(சற்று அவர்களுக்குப் பின்வரும் சந்தர்ப்பத்தை நினைவூட்டும்:) அப்போது அவர் தம் தந்தையிடம் கூறினார்: “என் அன்புத் தந்தையே! கேட்கவோ, பார்க்கவோ முடியாத, உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவோ இயலாதவற்றை நீங்கள் ஏன் வணங்குகின்றீர்கள்?
یٰۤاَبَتِ اِنِّیْ قَدْ جَآءَنِیْ مِنَ الْعِلْمِ مَا لَمْ یَاْتِكَ فَاتَّبِعْنِیْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِیًّا ۟
என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத ஒரு ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பின்பற்றுவீர்களாக! நான் உங்களுக்கு நேரிய வழியைக் காண்பிப்பேன்.
یٰۤاَبَتِ لَا تَعْبُدِ الشَّیْطٰنَ ؕ اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِیًّا ۟
என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; திண்ணமாக, ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான்.
یٰۤاَبَتِ اِنِّیْۤ اَخَافُ اَنْ یَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّیْطٰنِ وَلِیًّا ۟
என் தந்தையே! கருணைமிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் இலக்காகி விடுவீர்களோ; மேலும் ஷைத்தானின் தோழனாகி விடுவீர்களோ என்று நான் அஞ்சுகின்றேன்!”
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِیْ یٰۤاِبْرٰهِیْمُ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِیْ مَلِیًّا ۟
அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களை நிராகரித்து விட்டாயா? இதனை நீ தவிர்த்துக் கொள்ளாவிடில் நிச்சயம் உன்னை நான் கல்லால் அடிப்பேன்; நீ என்றென்றும் என்னை விட்டுப் பிரிந்து போய்விடு!”
قَالَ سَلٰمٌ عَلَیْكَ ۚ سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّیْ ؕ اِنَّهٗ كَانَ بِیْ حَفِیًّا ۟
அதற்கு இப்ராஹீம் கூறினார்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உங்களை மன்னித்தருளுமாறு என் இறைவனிடம் நான் இறைஞ்சுவேன். நிச்சயமாக, என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கின்றான்.
وَاَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّیْ ۖؗ عَسٰۤی اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّیْ شَقِیًّا ۟
மேலும், உங்களைவிட்டும், அல்லாஹ்வை அன்றி, நீங்கள் பிரார்த்தித்து வருகின்ற தெய்வங்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொள்கின்றேன்; நான் என் இறைவனையே பிரார்த்திக்கின்றேன். நான் என் இறைவனைப் பிரார்த்தித்து ஏமாந்து போகமாட்டேன் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.”
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِیًّا ۟
பிறகு, அம்மக்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கி வருகின்ற பிற தெய்வங்களையும் விட்டு அவர் ஒதுங்கிக் கொண்டபோது, நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் மற்றும் யஃகூப் போன்ற மக்களையும் வழங்கினோம். மேலும், அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِیًّا ۟۠
மேலும், அவர்களுக்கு நம்முடைய அருட்கொடையிலிருந்து வழங்கினோம். உயர்ந்த, உண்மையான புகழையும் அவர்களுக்கு அளித்தோம்.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مُوْسٰۤی ؗ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟
மேலும், மூஸாவைப் பற்றி இவ்வேதத்தில் உள்ளதைக் கூறுவீராக. நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார்; தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
وَنَادَیْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَیْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِیًّا ۟
மேலும், நாம் ‘தூர்’ மலையின் வலப்பக்கத்தில் இருந்து அவரை அழைத்தோம்; தனியே உரையாடுவதன் மூலம் நம்மிடம் நெருங்குவதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தோம்.
وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِیًّا ۟
மேலும், நம் தயவினால் அவருடைய சகோதரர் ஹாரூனை ஒரு நபியாக நியமித்து அவருக்கு உதவியாளராக ஆக்கினோம்.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِسْمٰعِیْلَ ؗ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟ۚ
(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
وَكَانَ یَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ ۪ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِیًّا ۟
மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்; மேலும், தம் இறைவனிடம் விரும்பத்தக்க மனிதராகவும் இருந்தார்.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِدْرِیْسَ ؗ اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟ۗۙ
(நபியே!) இத்ரீஸைப் பற்றி இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் ஒரு நேர்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِیًّا ۟
மேலும், நாம் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
இவர்களோ, அல்லாஹ் தன் அருட்பேறுகளை வழங்கியுள்ள நபிமார்கள் ஆவர். இவர்கள் ஆதத்தின் வழித்தோன்றல்களிலிருந்தும், நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்களிலிருந்தும் இப்ராஹீம் மற்றும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்தும் தோன்றியவர்களாவர். மேலும், நாம் நேர்வழி காட்டி, தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களைச் சார்ந்தவர்களுமாவர். இவர்களின் நிலைமை எவ்வாறிருந்த தெனில் கருணைமிக்க இறைவனின் வசனங்கள் இவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால், அழுதுகொண்டே ஸுஜூதில்* விழுந்துவிடுவார்கள்.
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ یَلْقَوْنَ غَیًّا ۟ۙ
அவர்களுக்குப் பிறகு, சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய பிற்சந்ததிகளாகத் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் தங்கள் வழிகேட்டின் தீயவிளைவை விரைவில் சந்திப்பார்கள்.
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ شَیْـًٔا ۟ۙ
ஆயினும், எவர்கள் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
جَنّٰتِ عَدْنِ لَّتِیْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَیْبِ ؕ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِیًّا ۟
கருணைமிக்க இறைவன் தன்னுடைய அடியார்களுக்கு அவர்கள் காணாத நிலையில், அளித்துள்ள வாக்குறுதியான நிலையான சுவனபதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا اِلَّا سَلٰمًا ؕ وَلَهُمْ رِزْقُهُمْ فِیْهَا بُكْرَةً وَّعَشِیًّا ۟
அங்கு அவர்கள் எவ்வித வீணான விஷயத்தையும் செவியுறமாட்டார்கள். எதைச் செவியுற்றாலும் சரியானவற்றையே செவியுறுவார்கள். மேலும், அங்கு அவர்களுக்குரிய உணவு காலையிலும், மாலையிலும் (தொடர்ந்து) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
تِلْكَ الْجَنَّةُ الَّتِیْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِیًّا ۟
இத்தகைய சுவனமாகும் அது! நம் அடியார்களில் எவர்கள் இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ அவர்களையே இதற்கு வாரிசுகளாக்குவோம்.
وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ ۚ لَهٗ مَا بَیْنَ اَیْدِیْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَیْنَ ذٰلِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِیًّا ۟ۚ
(நபியே!) “நாங்கள் உம் இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை; எங்களுக்கு முன்னால் இருப்பவை, பின்னால் இருப்பவை மற்றும் இவற்றிற்கிடையேயுள்ளவை ஆகிய ஒவ்வொன்றுக்கும் அவனே உரிமையாளன் ஆவான். மேலும், உம் இறைவன் மறக்கக் கூடியவனல்லன்.
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖ ؕ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِیًّا ۟۠
வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்குமிடையே உள்ள அனைத்திற்கும் அவன் அதிபதி ஆவான். எனவே, அவனுக்கு நீர் அடிபணிவீராக! மேலும், அவனுக்கு அடிபணிவதிலேயே நிலைத்திருப்பீராக! அவனுக்கு சமமானவர் எவரையேனும் நீர் அறிவீரா?”
وَیَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَیًّا ۟
மனிதன், கேட்கின்றான்: “நான் இறந்துவிட்டால், உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவேனா?”
اَوَلَا یَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ یَكُ شَیْـًٔا ۟
முன்பு அவன் எப்பொருளாயும் இல்லாதிருந்தபோது நாம்தாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லையா?
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّیٰطِیْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِیًّا ۟ۚ
உம் இறைவன் மீது ஆணையாக! அவர்கள் அனைவரையும் (அவர்களோடு) ஷைத்தான்களையும் அவசியம் நாம் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, நரகத்தைச் சுற்றிலும் அவர்களைக் கொண்டுவந்து முழங்காலிட்டு நிறுத்துவோம்.
ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِیْعَةٍ اَیُّهُمْ اَشَدُّ عَلَی الرَّحْمٰنِ عِتِیًّا ۟ۚ
பிறகு, அவர்களில் எவன் கருணைமிக்க இறைவனுக்கு மாறு செய்வதில் தீவிரமாக இருந்தானோ அவனை ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் தனியே பிரித்துவிடுவோம்.
ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِیْنَ هُمْ اَوْلٰی بِهَا صِلِیًّا ۟
பின்னர், அனைவரையும்விட நரகில் புகுத்தப்படுவதற்கு யார் அதிகம் தகுதியுடையவர்களோ அவர்களை நாம் நன்கு அறிவோம்.
وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلٰی رَبِّكَ حَتْمًا مَّقْضِیًّا ۟ۚ
உங்களில் எவரும் நரகத்தைக் கடந்து செல்லாதவராய் இருக்க முடியாது. இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாகும்; இதனை நிறைவேற்றுவது உம்முடைய இறைவனின் பொறுப்பாகும்.
ثُمَّ نُنَجِّی الَّذِیْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِیْنَ فِیْهَا جِثِیًّا ۟
(உலக வாழ்வில்) இறையச்சம் கொண்டு வாழ்ந்தவர்களை நாம் காப்பாற்றுவோம். கொடுமையாளர்களை அதிலேயே வீழ்ந்து கிடக்குமாறு விட்டுவிடுவோம்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا ۙ اَیُّ الْفَرِیْقَیْنِ خَیْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِیًّا ۟
இவர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்பட்டால், நிராகரிப்பவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம், “நம் இரு பிரிவினரில் யார் நல்ல நிலையில் உள்ளவர்கள், யாருடைய அவைகள் மிகக் கம்பீரமாக இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள்” என்று கூறுவார்கள்.
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْیًا ۟
உண்மையில், இவர்களுக்கு முன் இவர்களைவிட எவ்வளவோ அதிகச் சாதனங்களை வைத்திருந்தவர்களும் வெளிப்பகட்டில் இவர்களைவிட மிகைத்திருந்தவர்களுமான எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம்.
قُلْ مَنْ كَانَ فِی الضَّلٰلَةِ فَلْیَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ۬ حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ فَسَیَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا ۟
இவர்களிடம் கூறுங்கள்: எவர்கள் வழிகேட்டிலே வீழ்ந்திருக்கின்றார்களோ அவர்களுக்கு கருணைமிக்க இறைவன் கால அவகாசம் அளிக்கின்றான். எதுவரையெனில், தங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்ததை அது அல்லாஹ் அளிக்கும் வேதனையாக இருந்தாலும் சரி, மறுமையாக இருந்தாலும் சரி, அதனை அவர்கள் காண்கிறார்கள்; அப்போது யாருடைய நிலைமை மோசமானது; யாருடைய கூட்டம் பலம் குன்றியது என்பது அவசியம் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
وَیَزِیْدُ اللّٰهُ الَّذِیْنَ اهْتَدَوْا هُدًی ؕ وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ مَّرَدًّا ۟
(இதற்கு மாறாக) எவர்கள் நேர்வழியை மேற்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியில் முன்னேற்றத்தை வழங்குகின்றான். மேலும், நிலைத்திருக்கும் நற்செயல்கள்தாம் உம் இறைவனிடத்தில் நற்கூலியையும் நல்ல முடிவையும் பொறுத்து மிகவும் சிறந்தவையாகும்.
اَفَرَءَیْتَ الَّذِیْ كَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوْتَیَنَّ مَالًا وَّوَلَدًا ۟ؕ
எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கின்றானோ மேலும், ‘பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்’ என்றும் கூறுகின்றானோ அவனை நீர் பார்த்தீரா?
اَطَّلَعَ الْغَیْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۙ
அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்து வைத்திருக்கின்றானா?
كَلَّا ؕ سَنَكْتُبُ مَا یَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۟ۙ
அப்படி ஒன்றும் இல்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
وَّنَرِثُهٗ مَا یَقُوْلُ وَیَاْتِیْنَا فَرْدًا ۟
எந்தப் பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் பற்றி அவன் பெருமையடித்துக் கொள்கின்றானோ அவை அனைத்தும் இறுதியில் நமக்கே உரியனவாகிவிடும்; அவன் தனியாகவே நம்மிடம் வருவான்.
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّیَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۟ۙ
அல்லாஹ்வை விடுத்து வேறு கடவுளரை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் இவர்களுக்கு உதவியாளராய் ஆக வேண்டும் என்பதற்காக!
كَلَّا ؕ سَیَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَیَكُوْنُوْنَ عَلَیْهِمْ ضِدًّا ۟۠
அவ்வாறு (எந்த உதவியாளரும்) இல்லை! அக்கடவுளர் அனைவரும் இவர்களின் வழிபாட்டை மறுத்துவிடுவர். ஏன், இவர்களுக்கு எதிரிகளாகவும் மாறிவிடுவர்.
اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّیٰطِیْنَ عَلَی الْكٰفِرِیْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۟ۙ
நீர் கவனிக்கவில்லையா? சத்தியத்தை நிராகரிப்போர் மீது ஷைத்தான்களை நாம் ஏவி விட்டிருக்கின்றோம். அவர்கள் (சத்தியத்தை எதிர்க்குமாறு) இவர்களை அதிகம் அதிகம் தூண்டிக் கொண்டிருக்கின்றார்கள்!
فَلَا تَعْجَلْ عَلَیْهِمْ ؕ اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۟ۚ
எனவே, இவர்கள் மீது வேதனை இறங்க வேண்டுமென நீர் அவசரப்படாதீர். நாம் அவர்களுக்காக (நாட்களை) எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
یَوْمَ نَحْشُرُ الْمُتَّقِیْنَ اِلَی الرَّحْمٰنِ وَفْدًا ۟ۙ
அந்த நாள் வரத்தான் போகின்றது. அன்று, கருணை மிக்க இறைவனின் திருமுன் இறையச்சமுள்ள மக்களை, விருந்தினரைப் போன்று ஒன்று சேர்ப்போம்.
وَّنَسُوْقُ الْمُجْرِمِیْنَ اِلٰی جَهَنَّمَ وِرْدًا ۟ۘ
குற்றவாளிகளையோ தாகித்த மிருகங்களைப் போன்று நரகத்தின் பக்கம் விரட்டிச் செல்வோம்.
لَا یَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۘ
அந்நாளில் எவராலும் எவ்விதப் பரிந்துரையும் சமர்ப்பிக்க இயலாது கருணை மிக்க இறைவனின் ஒப்புதல் பெற்றவர்களைத் தவிர!
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۟ؕ
“கருணைமிக்க இறைவன் ஒருவரை மகனாக ஏற்படுத்தியுள்ளான்” என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
لَقَدْ جِئْتُمْ شَیْـًٔا اِدًّا ۟ۙ
எத்தகைய அபத்தமான விஷயத்தை நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள்!
تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۟ۙ
அதனால் வானங்கள் உடைந்துவிடவும், பூமி பிளந்துவிடவும், மலைகள் தகர்ந்து நொறுங்கிவிடவும் போகின்றன.
اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۟ۚ
(ஏனெனில்) இப்படி கருணைமிக்க இறைவனுக்கு சந்ததி இருக்கிறது என்று மக்கள் கூறுவது கொடூரமான பேச்சாகும்.
وَمَا یَنْۢبَغِیْ لِلرَّحْمٰنِ اَنْ یَّتَّخِذَ وَلَدًا ۟ؕ
ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க இறைவனுக்கு ஏற்றது அல்ல!
اِنْ كُلُّ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِی الرَّحْمٰنِ عَبْدًا ۟ؕ
வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் அடிமைகளாய் கருணை மிக்க இறைவனின் திருமுன் வரத்தான் போகின்றனர்.
لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۟ؕ
அவன் அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொண்டும் இருக்கின்றான்; மேலும், அவர்களைக் கணக்கிட்டும் வைத்துள்ளான்.
وَكُلُّهُمْ اٰتِیْهِ یَوْمَ الْقِیٰمَةِ فَرْدًا ۟
மறுமை நாளில் இவர்கள் எல்லோரும் தனித்தனியாக அவனது திருமுன் வருவார்கள்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا ۟
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணை மிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான்.
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِیْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا ۟
எனவே (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் (இறக்கியருளி) எளிதாக்கி இருப்பது, இறையச்சம் கொண்டவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி அறிவிப்பதற்காகவும் மேலும், பிடிவாதத்தில் மூழ்கியிருக்கும் சமூகத்தை இதன் மூலம் எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ ؕ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا ۟۠
இவர்களுக்கு முன்னால் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம்; (இன்று) அவர்களில் எவருடைய அடையாளத்தையேனும், நீர் எங்கேயாவது காண்கின்றீரா? அல்லது அவர்களுடைய எந்த அரவத்தையாவது எங்கேயாவது கேட்கின்றீரா?