حُرِّمَتْ عَلَیْكُمُ الْمَیْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّیَةُ وَالنَّطِیْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّیْتُمْ ۫ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ؕ ذٰلِكُمْ فِسْقٌ ؕ اَلْیَوْمَ یَىِٕسَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ دِیْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ؕ اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَرَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًا ؕ فَمَنِ اضْطُرَّ فِیْ مَخْمَصَةٍ غَیْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெரிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலிருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப்பட்டவையாகும்.) எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்துவிட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாவமான செயல்களாகும். இன்று உங்களுடைய தீன்வாழ்க்கை நெறி குறித்து நிராகரிப்போர் முற்றிலும் நிராசை அடைந்துவிட்டிருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். மாறாக எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன். (எனவே, உங்கள் மீது விதிக்கப்பட்ட ஹலால், ஹராமெனும் வரம்புகளைப் பேணி நடந்து வாருங்கள்.) ஆயினும் கடும் பசியினால் நிர்பந்திக்கப்பட்டு பாவம் செய்யும் நாட்டமின்றி ஒருவர் அவற்றில் ஏதாவதொன்றைப் புசித்து விட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெருங்கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.