All Surahs

Surah 3

آل عمران

Aal-Imran

3. ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)

200 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

الٓمَّٓ ۟ۙ

அலிஃப், லாம், மீம்.

2

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَیُّ الْقَیُّوْمُ ۟ؕ

அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.

3

نَزَّلَ عَلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَاَنْزَلَ التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۙ

(நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும்

4

مِنْ قَبْلُ هُدًی لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ ؕ۬ اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ 

இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் இறக்கியுள்ளான். (இனி) எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்க மறுக்கின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாய்க் கடுமையான தண்டனை உண்டு. மேலும், அல்லாஹ் வல்லமை மிக்கவனும் தீய செயல்களுக்கு பழிவாங்குபவனும் ஆவான்.

5

اِنَّ اللّٰهَ لَا یَخْفٰی عَلَیْهِ شَیْءٌ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ۟ؕ

திண்ணமாக வானத்திலும் பூமியிலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று!

6

هُوَ الَّذِیْ یُصَوِّرُكُمْ فِی الْاَرْحَامِ كَیْفَ یَشَآءُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

அவனே (உங்கள் அன்னை யரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை.

7

هُوَ الَّذِیْۤ اَنْزَلَ عَلَیْكَ الْكِتٰبَ مِنْهُ اٰیٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ ؕ فَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ زَیْغٌ فَیَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِیْلِهٖ ؔۚ وَمَا یَعْلَمُ تَاْوِیْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔۘ وَالرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ یَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖ ۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟

(நபியே!) அ(ந்த இறை)வனே இவ்வேத நூலை உம்மீது இறக்கியருளினான். இதில் இருவிதமான வசனங்கள் உள்ளன. ஒன்று: “முஹ்கமாத்”* எனும் வசனங்களாகும். அவைதாம் வேதத்தின் அடிப்படை. இரண்டாவது: “முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். எவர்களுடைய இதயங்களில் கோளாறு உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்யும் நோக்கில் முதஷாபிஹான வசனங்களைத் தேடித்திரிந்து கொண்டும், அவற்றின் கருத்தைத் திரித்துக் கூற முயற்சி செய்து கொண்டுமிருப்பார்கள். எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் (எதிலும்) சரியான படிப்பினை பெறுகின்றார்கள்.

8

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَیْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ۟

அவர்கள் இவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சிய வண்ணம் இருக்கிறார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.

9

رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠

எங்கள் இறைவனே! திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒருநாளில் ஒன்று திரட்டக்கூடியவனாய் இருக்கின்றாய்; அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவன் அல்லன்.”

10

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاُولٰٓىِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِ ۟ۙ

நிச்சயமாக, இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டவர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலன் அளித்திட மாட்டா. அவர்கள் நரகின் எரிபொருளாய்த்தான் இருப்பார்கள்.

11

كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟

ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களுக்கு முன் (இறைவனுக்கு அடிபணியாமல்) வாழ்ந்தவர்களுக்கும் நேர்ந்த கதியைப் போல்தான் (இவர்களுக்கும்) நேரும்! அவர்கள் நம் வசனங்களைப் பொய்யென்று கூறினார்கள். எனவே அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். (உண்மையில்) அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.

12

قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰی جَهَنَّمَ ؕ وَبِئْسَ الْمِهَادُ ۟

எனவே (நபியே!) உமது அழைப்பை ஏற்க மறுத்தவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் வெகு விரைவில் கீழடக்கப்படுவீர்கள். மேலும், நீங்கள் நரகத்தை நோக்கி கூட்டமாக விரட்டிச் செல்லப்படுவீர்கள்; அதுவோ மிகக் கெட்ட தங்குமிடமாகும்!”

13

قَدْ كَانَ لَكُمْ اٰیَةٌ فِیْ فِئَتَیْنِ الْتَقَتَا ؕ فِئَةٌ تُقَاتِلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاُخْرٰی كَافِرَةٌ یَّرَوْنَهُمْ مِّثْلَیْهِمْ رَاْیَ الْعَیْنِ ؕ وَاللّٰهُ یُؤَیِّدُ بِنَصْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟

(பத்ரில்) மோதிக் கொண்ட இரு பிரிவினரிடம் திண்ணமாக உங்களுக்குப் படிப்பினை தரும் சான்று இருக்கிறது. ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய வழியில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பிரிவினர் (அவனை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். நம்பிக்கையாளர்களைவிட நிராகரிப்பாளர்கள் இரு மடங்கு அதிகமாய் இருந்ததை பார்ப்பவர்கள் தம் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு உதவி செய்து வலுவூட்டுகின்றான் (என்பதைப் போரின் முடிவு நிரூபித்து விட்டது). திண்ணமாக அகப்பார்வை உடையோருக்கு இதில் மாபெரும் படிப்பினை (பொதிந்து) இருக்கிறது.

14

زُیِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَنِیْنَ وَالْقَنَاطِیْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَیْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ؕ ذٰلِكَ مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ ۟

பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர்ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது.

15

قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَیْرٍ مِّنْ ذٰلِكُمْ ؕ لِلَّذِیْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟ۚ

(நபியே!) நீர் கூறும்: “இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள்.” அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்.

16

اَلَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ۟ۚ

இவர்கள் பிரார்த்தனை புரிந்தவண்ணம் இருப்பார்கள்: “எங்களுடைய இறைவனே! திண்ணமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களுடைய பாவங்களை நீ மன்னித்தருள்; இன்னும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்!”

17

اَلصّٰبِرِیْنَ وَالصّٰدِقِیْنَ وَالْقٰنِتِیْنَ وَالْمُنْفِقِیْنَ وَالْمُسْتَغْفِرِیْنَ بِالْاَسْحَارِ ۟

இவர்கள் பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும் மற்றும் (இறைவழியில் தாராளமாகச்) செலவழிப்பவர்களாகவும் இருப்பதுடன் பின்னிரவு நேரங்களில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

18

شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۙ وَالْمَلٰٓىِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآىِٕمًا بِالْقِسْطِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ؕ

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதற்கு அல்லாஹ்வே சான்று பகர்கின்றான். மேலும், அந்த வல்லமைமிக்க நுண்ணறிவாளனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு வானவர்களும், அறிவுடையோரும் நேர்மையிலும் நீதியிலும் நிலைத்தவண்ணம் சான்று பகர்கின்றனர்.

19

اِنَّ الدِّیْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ ۫ وَمَا اخْتَلَفَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْیًا بَیْنَهُمْ ؕ وَمَنْ یَّكْفُرْ بِاٰیٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟

திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி (தீன்) ஆகும். வேதம் அருளப்பட்டவர்கள் இந்த இஸ்லாமிய வாழ்க்கை நெறியிலிருந்து பிறழ்ந்து பல்வேறு வழிகளை மேற்கொண்டது, அவர்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவுபடுத்தப்படாததனால் அல்ல. மாறாக, தம்மிடம் மெய்யறிவு வந்த பிறகுதான் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள்; தங்களுக்கிடையே அநீதி இழைப்பதற்காக! மேலும் யாரேனும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர்களிடம் கணக்கு வாங்குவதில் திண்ணமாக அல்லாஹ் விரைவானவனாய் இருக்கின்றான்.

20

فَاِنْ حَآجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِیَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ ؕ وَقُلْ لِّلَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّیّٖنَ ءَاَسْلَمْتُمْ ؕ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟۠

(நபியே! இனி) அவர்கள் உம்மோடு தர்க்கம் புரிந்தால் அவர்களிடம், “நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் முன் அடிபணிந்து விட்டோம்” என்று கூறுவீராக! இன்னும் வேதம் அருளப்பட்டவர்களையும் வேதம் அருளப்படாதவர்களையும் நோக்கி, “நீங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ்வதை ஏற்றுக்கொண்டீர்களா?” என்று கேளுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால் திண்ணமாக நேர்வழி அடைந்தவர்களாவர். அவர்கள் புறக்கணித்தாலோ (இறைத்தூதை அவர்களிடம்) எடுத் துரைப்பது மட்டுமே உம்மீது கடமையாகும். அல்லாஹ் தன் அடிமைகளின் செயற்பாடுகளை நன்கு பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

21

اِنَّ الَّذِیْنَ یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ النَّبِیّٖنَ بِغَیْرِ حَقٍّ ۙ وَّیَقْتُلُوْنَ الَّذِیْنَ یَاْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟

நிச்சயமாக யார் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும் நல்லொழுக்க அறிவுரைகளையும் ஏற்க மறுத்து, இறைத்தூதர்களை அநியாயமாகக் கொலை புரிகிறார்களோ, இன்னும் மனிதர்களில் நீதியைக் கைக்கொள்ளுமாறு ஏவியவர்களை கொலை செய்கின்றார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு எனும் “நற்செய்தி” சொல்வீராக!

22

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟

இவர்களின் செயல்கள் இம்மை, மறுமை இரண்டிலும் வீணாகி விட்டன. மேலும் இவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.

23

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُدْعَوْنَ اِلٰی كِتٰبِ اللّٰهِ لِیَحْكُمَ بَیْنَهُمْ ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ ۟

வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு கொடுக்கப்பட்டோரின் நிலை என்னவென்று நீர் கவனிக்கவில்லையா? அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் (வாருங்கள் என) அவர்கள் அழைக்கப்படும் போது, அவர்களில் ஒரு பிரிவினர் அதனைப் புறக்கணித்துத் திரும்பிச் செல்கிறார்கள்.

24

ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ۪ وَغَرَّهُمْ فِیْ دِیْنِهِمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

அவர்களின் இந்நடத்தைக்குக் காரணம், “சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர நரக நெருப்பு எங்களைத் திண்ணமாகத் தீண்டாது” என்று அவர்கள் கூறி வந்ததேயாகும். தாமே இயற்றிக் கொண்ட கோட்பாடுகள்தாம் அவர்களின் சமய விவகாரங்களில் அவர்களைப் பல தவறான கருத்துகளில் உழல வைத்திருக்கின்றன.

25

فَكَیْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ۫ وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

ஆனால் ஐயமின்றி வரவிருக்கின்ற ஒருநாளில் நாம் அவர்களை ஒன்று திரட்டும்போது அவர்களின் நிலை என்னவாகும்? அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்ததற்குரிய கூலி முழுமையாய் வழங்கப்படும். மேலும் யார் மீதும் அநீதி இழைக்கப்படமாட்டாது.

26

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ ؗ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِیَدِكَ الْخَیْرُ ؕ اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.

27

تُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؗ وَتُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَتُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ ؗ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟

நீயே இரவைப் பகலில் கோக்கச் செய்கின்றாய்; மேலும் பகலை இரவிலும் கோக்கச் செய்கின்றாய்; இன்னும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளியாக்குகின்றாய். மேலும் நீ நாடுபவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றாய்.”

28

لَا یَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَلَیْسَ مِنَ اللّٰهِ فِیْ شَیْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ؕ وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟

இறைநம்பிக்கையாளர்கள், (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய், ஆதரவாளர்களாய் ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களுடைய கொடுமைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி! உங்களில் எவரேனும் அவ்வாறு நட்புகொண்டால், அவர்களுக்கு அல்லாஹ்வுடன் எத்தகைய தொடர்பும் இல்லை. மேலும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். இன்னும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.

29

قُلْ اِنْ تُخْفُوْا مَا فِیْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ یَعْلَمْهُ اللّٰهُ ؕ وَیَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

நபியே! (மக்களை) எச்சரிப்பீராக: “உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அவற்றை நன்கறிகின்றான்.” மேலும், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றை அவன் அறிகின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.

30

یَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَیْرٍ مُّحْضَرًا ۛۖۚ وَّمَا عَمِلَتْ مِنْ سُوْٓءٍ ۛۚ تَوَدُّ لَوْ اَنَّ بَیْنَهَا وَبَیْنَهٗۤ اَمَدًاۢ بَعِیْدًا ؕ وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟۠

ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மைகளும், தான் செய்த தீமைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதைக் காணும் நாள் வந்தே தீரும். அப்போது, “அந்தோ! தனக்கும் அந்நாளுக்குமிடையே மிக தூரமான இடைவெளி இருந்திருக்கக் கூடாதா!” என மனிதன் ஆவலுறுவான். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும் அல்லாஹ் தன் அடிமைகள் மீது மிகவும் இரக்கமுள்ளவனாய் இருக்கின்றான்.

31

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِیْ یُحْبِبْكُمُ اللّٰهُ وَیَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.”

32

قُلْ اَطِیْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْكٰفِرِیْنَ ۟

(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.” பிறகு அவர்கள் (உம்முடைய இந்த அழைப்பை) புறக்கணிப்பார்களாயின் திண்ணமாக அல்லாஹ் (தனக்கும் தன் தூதருக்கும் கீழ்ப்படிய) மறுப்பவர்களை நேசிக்க மாட்டான்.

33

اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ

திண்ணமாக அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் வழித்தோன்றல்களையும், இம்ரானின் வழித்தோன்றல்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

34

ذُرِّیَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۚ

இவர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய வழித்தோன்றல்களாவர். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும், நன்கறிபவனுமாய் இருக்கின்றான்.

35

اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّیْ نَذَرْتُ لَكَ مَا فِیْ بَطْنِیْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّیْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

இம்ரானைச் சார்ந்த பெண் “என் இறைவனே! நான் எனது வயிற்றில் இருக்கும் குழந்தையை உனது திருப்பணிக்காக அர்ப்பணிக்க நேர்ச்சை செய்துள்ளேன். எனவே இதனை (காணிக்கையை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! திண்ணமாக நீ நன்கு செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று இறைஞ்சிக் கொண்டிருந்ததையும் அல்லாஹ் செவியுற்றவனாகவே இருந்தான்.

36

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّیْ وَضَعْتُهَاۤ اُ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْ ؕ وَلَیْسَ الذَّكَرُ كَالْاُ ۚ وَاِنِّیْ سَمَّیْتُهَا مَرْیَمَ وَاِنِّیْۤ اُعِیْذُهَا بِكَ وَذُرِّیَّتَهَا مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ۟

பிறகு அவள் அதைப் (பெண் குழந்தையாகப்) பெற்றெடுத்தபோது கூறினாள்: “என் இறைவா! நான் அதைப் பெண் குழந்தையாய்ப் பெற்றுவிட்டேனே!” ஆயினும் அவள் எதைப் பெற்றெடுத்தாளோ அதைப் பற்றி அல்லாஹ் மிகவும் அறிந்தவன் “மேலும் ஆண் குழந்தை, பெண் குழந்தையைப் போலன்று; நான் அக்குழந்தைக்கு ‘மர்யம்’ எனப் பெயர் சூட்டியுள்ளேன். மேலும் நான் அக்குழந்தைக்காகவும் அதன் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தா(னின் தீங்கி)னை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.”

37

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِیَّا ؕۚ كُلَّمَا دَخَلَ عَلَیْهَا زَكَرِیَّا الْمِحْرَابَ ۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ۚ قَالَ یٰمَرْیَمُ اَنّٰی لَكِ هٰذَا ؕ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟

ஆகவே அவளுடைய இறைவன் அ(ந்தப் பெண் குழந்தை)தனை அன்போடு ஏற்றுக்கொண்டான். மேலும் அதைச் சிறப்புடன் வளர்த்தான். ஜகரிய்யாவை அக்குழந்தைக்குப் பாதுகாவலராகவும் ஆக்கினான். மர்யம் இருந்த மாடத்தினுள் ஜகரிய்யா செல்லும் போதெல்லாம், ஏதேனும் உணவுப் பொருள் அவளிடத்தில் இருப்பதைக் காண்பார். “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” எனக் கேட்பார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. தான் நாடியவர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் கணக்கின்றி வழங்குகின்றான்” என்று மர்யம் பதிலுரைப்பார்.

38

هُنَالِكَ دَعَا زَكَرِیَّا رَبَّهٗ ۚ قَالَ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ ۟

அங்கு இந்நிலையைக் கண்ட ஜகரிய்யா தம் இறைவனிடம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்குத் தூய ஒரு வழித் தோன்றலை உனது ஆற்றலால் வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பிரார்த்தனையைச் செவியேற்பவன்!”

39

فَنَادَتْهُ الْمَلٰٓىِٕكَةُ وَهُوَ قَآىِٕمٌ یُّصَلِّیْ فِی الْمِحْرَابِ ۙ اَنَّ اللّٰهَ یُبَشِّرُكَ بِیَحْیٰی مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَیِّدًا وَّحَصُوْرًا وَّنَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟

அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: “அல்லாஹ் உமக்கு யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய் விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் மற்றும் மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்.”

40

قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِیَ الْكِبَرُ وَامْرَاَتِیْ عَاقِرٌ ؕ قَالَ كَذٰلِكَ اللّٰهُ یَفْعَلُ مَا یَشَآءُ ۟

ஜகரிய்யா வினவினார்: “என் இறைவா! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்? நானோ முதுமையடைந்து விட்டேன்; என் மனைவியோ மலடியாய் இருக்கின்றாள்.” அதற்கு இறைவன் “இவ்வாறே நடைபெறும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைச் செய்(தே தீரு)வான்” என்று பதிலளித்தான்.

41

قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَیَّامٍ اِلَّا رَمْزًا ؕ وَاذْكُرْ رَّبَّكَ كَثِیْرًا وَّسَبِّحْ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟۠

அதற்கு அவர், “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்!” என்று (பணிந்து) கேட்டார். அதற்கு, “நீர் மூன்று நாட்கள் வரை சைகையினாலே அன்றி மக்களிடம் பேச மாட்டீர் (பேச இயலாது) என்பதே அடையாளமாகும். இக்கால கட்டத்தில் உம் இறைவனை அதிகமாய் நினைவுகூருவீராக! மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பீராக!” எனக் கூறினான்.

42

وَاِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰی نِسَآءِ الْعٰلَمِیْنَ ۟

மேலும், அந்நேரம் வந்தபோது வானவர்கள் கூறினார்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்துத் தூய்மையாக்கினான். மேலும் அகிலத்துப் பெண்கள் அனைவரினும் (உனக்கு முதலிடம் அளித்து, தனது திருப்பணிக்காக) உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

43

یٰمَرْیَمُ اقْنُتِیْ لِرَبِّكِ وَاسْجُدِیْ وَارْكَعِیْ مَعَ الرّٰكِعِیْنَ ۟

மர்யமே! உன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடப்பாயாக! மேலும் ஸஜ்தா செய்வாயாக! (அவனது திருமுன்) பணிபவர்களுடன் சேர்ந்து நீயும் பணிவாயாக!”

44

ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ؕ وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَیُّهُمْ یَكْفُلُ مَرْیَمَ ۪ وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یَخْتَصِمُوْنَ ۟

(நபியே!) இவை யாவும் மறைவான செய்திகள். இவற்றை உமக்கு, வஹி மூலம் நாம் அறிவிக்கின்றோம். (வழிபாட்டில்லத்தின் பணியாளர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யத்திற்குப் பொறுப்பு ஏற்பவர் என்று முடிவு செய்ய, தத்தமது எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்தபோது அவர்களிடையே நீர் இருக்கவில்லை. மேலும் அவர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்திலும் அவர்களிடையே நீர் இருக்கவில்லை.

45

اِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ یُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖۗ اسْمُهُ الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ وَجِیْهًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ

வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா ‘அல் மஸீஹ்’ என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார்.

46

وَیُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِیْنَ ۟

மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராயும் திகழ்வார்.”

47

قَالَتْ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ وَلَدٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟

(இதனைக் கேட்ட) மர்யம், “என் இறைவனே! என்னை எந்த மனிதனும் தீண்டாமலிருக்க, எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என்று வினவினார். அல்லாஹ் கூறினான்: “அவ்வாறுதான் நடக்கும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். அவன் எதையேனும் (செய்யத்) தீர்மானித்தால் ‘ஆகுக’ என்றுதான் அதற்குக் கட்டளை இடுவான். உடனே அது ஆகிவிடுகின்றது.” (பிறகு வானவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்:)

48

وَیُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۚ

“இன்னும் அல்லாஹ் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிப்பான். தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுத்தருவான்.

49

وَرَسُوْلًا اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬ اَنِّیْ قَدْ جِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّیْۤ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ فَاَنْفُخُ فِیْهِ فَیَكُوْنُ طَیْرًا بِاِذْنِ اللّٰهِ ۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْیِ الْمَوْتٰی بِاِذْنِ اللّٰهِ ۚ وَاُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ ۙ فِیْ بُیُوْتِكُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ

மேலும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவரைத் தன் தூதராகவும் நியமிப்பான்.” (இறைத்தூதர் எனும் அந்தஸ்தில் அவர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் வந்தபோது கூறினார்:) “திண்ணமாக நான் உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று கொண்டு வந்துள்ளேன். நான் உங்கள் முன் களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் கட்டளையினால் பறவையாகி விடும். மேலும் நான் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டமுடையவனையும் குணமாக்குவேன். இன்னும் இறந்தவர்களை அவனது அனுமதி கொண்டு உயிர்பெற்றெழச் செய்வேன். அதுமட்டுமன்று! நீங்கள் உண்பவற்றையும் உங்கள் இல்லங்களில் சேமித்து வைப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின் இவற்றிலெல்லாம் உங்களுக்குப் போதிய சான்று உண்டு.

50

وَمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِیْ حُرِّمَ عَلَیْكُمْ وَجِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۫ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟

மேலும் தற்பொழுது தவ்ராத்தின் அறிவுரைகளிலிருந்து எவை என் முன் உள்ளனவோ அவற்றை மெய்ப்படுத்திடவும், உங்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கும் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக்கி வைத்திடவும் நான் வந்துள்ளேன். நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்றினைக் கொண்டு வந்துள்ளேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.

51

اِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟

உறுதியாக அல்லாஹ்தான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாவான்! எனவே நீங்கள் அவனுக்கே பணிந்து வாழுங்கள்! இதுதான் நேரான வழியாகும்.”

52

فَلَمَّاۤ اَحَسَّ عِیْسٰی مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ اٰمَنَّا بِاللّٰهِ ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ۟

இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் நிராகரிக்க முனைந்து விட்டதை ஈஸா உணர்ந்து கொண்டபோது, “அல்லாஹ்வின் வழியில் எனக்கு உதவி புரிவோர் யார்?” என வினவினார். ‘ஹவாரிகள்’* பதிலளித்தார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாய் இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். திண்ணமாக நாங்கள் இறை ஆணைக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்பதற்கு நீரே சாட்சியாக இரும்.

53

رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟

எங்கள் இறைவனே! நீ இறக்கியருளிய கட்டளைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; தூதரையும் பின்பற்றுகின்றோம். எனவே நீ எங்கள் பெயர்களை சத்தியத்திற்குச் சான்று வழங்குவோருடன் சேர்த்து எழுதுவாயாக!”

54

وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ؕ وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟۠

பிறகு இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் (ஈஸாவிற்கெதிராக) சதித் திட்டங்கள் தீட்டினார்கள். (அதற்குப் பதிலாக) அல்லாஹ்வும் தகுந்த திட்டங்களைத் தீட்டினான். மேலும் இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரினும் வல்லவன்.

55

اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟

(அத்தகையதோர் திட்டத்தை நிறைவேற்றவே) அவன் கூறினான்: “ஈஸாவே! நிச்சயமாக நான் இப்போது உம்மைத் திரும்ப அழைத்துக் கொள்வேன். மேலும் உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்வேன்; உம்மை நிராகரித்தவர்களிடமிருந்து (அதாவது அவர்களுடைய தொடர்பிலிருந்தும், அவர்களுடைய தூய்மையற்ற சூழ்நிலையில் நீர் வாழ்வதிலிருந்தும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; இறுதித் தீர்ப்புநாள்வரை உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களைவிட உயர்த்தியே வைப்பேன். இறுதியில் என்னிடம் நீங்கள் அனைவரும் வந்தேயாக வேண்டும். அப்போது நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்தவற்றில் நான் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்;

56

فَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟

ஆகவே அவர்களில் எவர் நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இம்மை, மறுமை இரண்டிலும் கடுமையான தண்டனை அளிப்பேன். மேலும், அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார்.

57

وَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟

ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய கூலி முழுமையாக வழங்கப்படும். மேலும் (நன்கு அறிந்து கொள்ளுங்கள்:) அநீதி இழைப்போரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.

58

ذٰلِكَ نَتْلُوْهُ عَلَیْكَ مِنَ الْاٰیٰتِ وَالذِّكْرِ الْحَكِیْمِ ۟

(நபியே!) நாம் எடுத்துரைக்கும் இவை, சான்றுகளும் ஞானமும் நிறைந்த அறிவுரைகளாகும்.

59

اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟

திண்ணமாக, அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உவமை ஆதமின் உதாரணம் போன்றதாகும். அல்லாஹ் அவரை மண்ணினால் படைத்தான். பிறகு ‘ஆகுக’ என்று கட்டளையிட்டான். உடனே அவர் ஆகிவிட்டார்.

60

اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِیْنَ ۟

இந்த உண்மைகள் உம்முடைய இறைவனிடமிருந்து எடுத்துரைக்கப்படுகின்றன. எனவே ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிடாதீர்.

61

فَمَنْ حَآجَّكَ فِیْهِ مِنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ۫ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَّعْنَتَ اللّٰهِ عَلَی الْكٰذِبِیْنَ ۟

இந்த அறிவு உம்மிடம் வந்த பின்பு யாரேனும் உம்மிடம் இவ்விவகாரத்தில் தர்க்கம் செய்தால் (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “வாருங்கள்! உங்கள் மக்களையும் எங்கள் மக்களையும், உங்கள் பெண்களையும், எங்கள் பெண்களையும், நாங்களும் நீங்களும் அழைத்துக் கொண்டு ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று பணிந்து இறைஞ்சுவோம்.”

62

اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

இவை யாவும் முற்றிலும் சரியான நிகழ்ச்சிகளாகும். மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. உண்மை யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வுடைய வலிமையே அனைத்தையும்விட மேலோங்கியிருக்கிறது. மேலும், அவனுடைய நுண்ணறிவே இப்பேரண்டத்தின் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

63

فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِالْمُفْسِدِیْنَ ۟۠

எனவே அவர்கள் (மேற்கூறப்பட்ட நிபந்தனையின்படி தர்க்கம் புரிய) முன் வராமல் புறக்கணித்து விட்டால் (அவர்கள் குழப்ப வாதிகள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.) குழப்ப வாதிகளை அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

64

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰی كَلِمَةٍ سَوَآءٍۭ بَیْنَنَا وَبَیْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَیْـًٔا وَّلَا یَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ ۟

(நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்: ‘அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாம் அடிபணிய மாட்டோம். அவனோடு எதனையும் எவரையும் நாம் இணைவைக்க மாட்டோம். மேலும் நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவனாய் ஆக்கிக் கொள்ளக்கூடாது.’ அவர்கள் (இந்த அழைப்பினை) ஏற்க மறுப்பார்களேயானால், திண்ணமாக நாங்கள் முஸ்லிம்கள் (அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிகின்றவர்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (தெளிவாகக்) கூறி விடுங்கள்.

65

یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِیْۤ اِبْرٰهِیْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِیْلُ اِلَّا مِنْ بَعْدِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟

வேதம் அருளப்பட்டவர்களே! இப்ராஹீம் (உடைய தீனைப்) பற்றி ஏன் தர்க்கம் புரிகின்றீர்கள்? அவருக்குப் பின்னர் தாம் தவ்ராத்தும் இன்ஜீலும் இறக்கியருளப்பட்டன. (இதனைக் கூட) நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?

66

هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ حَاجَجْتُمْ فِیْمَا لَكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِیْمَا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟

நீங்கள் எவற்றை அறிந்து வைத்திருக்கின்றீர்களோ, அவற்றில் நன்கு தர்க்கம் புரிந்துவிட்டீர்கள். (இப்போது) நீங்கள் முற்றிலும் அறியாதவற்றில் தர்க்கம் புரிய ஏன் முற்படுகின்றீர்கள்? அல்லாஹ் நன்கறிகின்றான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.

67

مَا كَانَ اِبْرٰهِیْمُ یَهُوْدِیًّا وَّلَا نَصْرَانِیًّا وَّلٰكِنْ كَانَ حَنِیْفًا مُّسْلِمًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟

இப்ராஹீம் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் ஒருமனப்பட்ட முஸ்லிமாக இருந்தார். மேலும் அவர் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் எப்போதும் இருந்ததில்லை.

68

اِنَّ اَوْلَی النَّاسِ بِاِبْرٰهِیْمَ لَلَّذِیْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِیُّ وَالَّذِیْنَ اٰمَنُوْا ؕ وَاللّٰهُ وَلِیُّ الْمُؤْمِنِیْنَ ۟

இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலே மிகவும் அருகதையானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர். அல்லாஹ், நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான்.

69

وَدَّتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یُضِلُّوْنَكُمْ ؕ وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟

(இறைநம்பிக்கை கொண்டோரே!) வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் உங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்திட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆயினும், அவர்கள் தங்களைத் தாங்களே வழிகேட்டிலாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் இதனை அவர்கள் உணர்வதில்லை!

70

یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟

வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டே அல்லாஹ்வின் சான்றுகளை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?

71

یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠

வேதம் அருளப்பட்டவர்களே! சத்தியத்தை அசத்தியத்தோடு கலந்து ஏன் அதனைச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்குகின்றீர்கள்? நீங்கள் நன்கு அறிந்துகொண்டே சத்தியத்தை ஏன் மறைக்கின்றீர்கள்?

72

وَقَالَتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِیْۤ اُنْزِلَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْۤا اٰخِرَهٗ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟ۚۖ

வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் (தங்களுக்கிடையே) கூறிக் கொள்கிறார்கள்: “(இந்த நபியை) நம்பியவர்கள் மீது இறக்கியருளப்பட்டவற்றை முற்பகலில் நம்பி, பிற்பகலில் நிராகரித்து விடுங்கள்! (இப்படிச் செய்வதால்) நம்பிக்கையாளர்கள் (தம் நம்பிக்கையை விட்டு) திரும்பிவிடக்கூடும்.

73

وَلَا تُؤْمِنُوْۤا اِلَّا لِمَنْ تَبِعَ دِیْنَكُمْ ؕ قُلْ اِنَّ الْهُدٰی هُدَی اللّٰهِ ۙ اَنْ یُّؤْتٰۤی اَحَدٌ مِّثْلَ مَاۤ اُوْتِیْتُمْ اَوْ یُحَآجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ ؕ قُلْ اِنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ ۚ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟ۚۙ

மேலும் உங்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள்!” (நபியே!) நீர் கூறும்: “திண்ணமாக, அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல்தான் உண்மையான வழிகாட்டுதலாகும். மேலும் உங்களுக்குக் கிடைத்திருப்பது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்றால் அல்லது உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக சமர்ப்பிப்பதற்காக வலுவான வாதங்கள் மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அது இறைவன் வழங்கியதேயாகும்.” (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “திண்ணமாக, சிறப்பனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. தான் நாடுபவர்களுக்கே அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த நோக்குடையவனும் யாவற்றையும் நன்கு அறிபவனுமாவான்.

74

یَّخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟

தான் நாடுபவர்களைத் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக்குகின்றான். மேலும் அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகும்.”

75

وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ یُّؤَدِّهٖۤ اِلَیْكَ ۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِیْنَارٍ لَّا یُؤَدِّهٖۤ اِلَیْكَ اِلَّا مَا دُمْتَ عَلَیْهِ قَآىِٕمًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَیْسَ عَلَیْنَا فِی الْاُمِّیّٖنَ سَبِیْلٌ ۚ وَیَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُمْ یَعْلَمُوْنَ ۟

வேதம் அருளப்பட்டவர்களில் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி நீர் ஒரு செல்வக் குவியலை அவர்களிடம் ஒப்படைத்தாலும், உம்மிடம் அதனைத் திருப்பித் தந்துவிடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி ஒரு காசைக் கொடுத்தாலும்கூட நீர் அதற்காக விடாப்பிடியாய் நின்றாலேயொழிய அதனை உம்மிடம் திருப்பித் தரமாட்டார்கள். இதற்கு (அவர்களின் இந்த நாணயமின்மைக்குக்) காரணம் அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்ததுதான்: “உம்மிகள் (யூதர் அல்லாதவர்) விஷயத்தில் நாங்கள் அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட மாட்டோம்!” இவ்வாறு அல்லாஹ்வின் மீது அவர்கள் அப்பட்டமான பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். ஆனால் (உண்மையில் அல்லாஹ் இதுபோன்ற எதையும் சொல்லவில்லை என்பதை) அவர்கள் நன்கு அறிந்தே இருக்கின்றார்கள்.

76

بَلٰی مَنْ اَوْفٰی بِعَهْدِهٖ وَاتَّقٰی فَاِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟

அவ்வாறல்ல, (அவர்கள் ஏன் விசாரிக்கப்படக் கூடாது?) எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக்கொள்கின்றாரோ அவரே, அல்லாஹ்வின் நேசத்திற்குரியவராவார். ஏனெனில், தீவினையிலிருந்து விலகிக் கொள்பவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

77

اِنَّ الَّذِیْنَ یَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَیْمَانِهِمْ ثَمَنًا قَلِیْلًا اُولٰٓىِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِی الْاٰخِرَةِ وَلَا یُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا یَنْظُرُ اِلَیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ وَلَا یُزَكِّیْهِمْ ۪ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

எவர்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது.

78

وَاِنَّ مِنْهُمْ لَفَرِیْقًا یَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِ ۚ وَیَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَیَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُمْ یَعْلَمُوْنَ ۟

அவர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள்; வேதத்தைப் படிக்கும்போது தம் நாவுகளை அவர்கள் சுழற்றுகின்றார்கள்; அவர்கள் படிக்கின்ற யாவும் வேதத்தில் உள்ளவையே என்று நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் என்பதற்காக! உண்மை யாதெனில், அவர்கள் படிப்பவை வேதத்திலுள்ளவையல்ல. (நாங்கள் படிக்கின்ற) “இவை யாவும் இறைவனிட மிருந்து வந்தவை” என்று அவர்கள் கூறுகின்றார்கள்; ஆனால் அவை உண்மையில் இறைவனிடமிருந்து வந்தவையல்ல! அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள்.

79

مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّؤْتِیَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ یَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّیْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ كُوْنُوْا رَبّٰنِیّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَ ۟ۙ

ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும், இறைத்தூதுத் துவத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்க அதனைப் பெற்ற பின்னர், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாகி விடுங்கள்!” என்று மக்களிடம் கூறுவது அவருக்கு அனுமதிக்கப்பட்டதன்று. மாறாக, “நீங்கள் ஓதிக்கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கும் வேத அறிவுரைகளின் தேட்டப்படி ரப்பானீகளாய்த் திகழுங்கள்!” என்றே அவர் கூறுவார்.

80

وَلَا یَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰٓىِٕكَةَ وَالنَّبِیّٖنَ اَرْبَابًا ؕ اَیَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟۠

வானவர்களையோ இறைத்தூதர்களையோ உங்கள் கடவுளர்களாய் ஆக்கிக்கொள்ளும்படி உங்களுக்கு ஒருபோதும் அவர் கட்டளையிடமாட்டார். நீங்கள் முற்றிலும் இறைவனுக்குப் பணிந்துவிட்ட பிறகு (முஸ்லிம்களாய்த் திகழும்போது) நிராகரிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி ஒரு நபி உங்களுக்குக் கட்டளையிடுவாரா, என்ன?

81

وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ النَّبِیّٖنَ لَمَاۤ اٰتَیْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰی ذٰلِكُمْ اِصْرِیْ ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟

அல்லாஹ் நபிமார்களிடம் இவ்வாறு உறுதிமொழி வாங்கிய நேரத்தை நினைவுகூருங்கள்: “நான் (இப்போது) உங்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் வழங்கியிருக்கின்றேன். இனி ஏற்கனவே உங்களிடமுள்ள அறிவுரைகளை மெய்ப்படுத்தக்கூடிய வேறோர் இறைத்தூதர் உங்களிடம் வந்தால் கண்டிப்பாக அவர் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் அவருக்கு உதவி புரிந்திடவும் வேண்டும்” (இவ்வாறு கூறிவிட்டு) அல்லாஹ் வினவினான்: “இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? மேலும், இதற்காக என்னுடன் நீங்கள் செய்துகொண்ட பெரும் ஒப்பந்தத்தை (அதனால் ஏற்படும் மாபெரும் பொறுப்புகளை) ஏற்றுக் கொள்கிறீர்களா?” அவர்கள், “(ஆம்!) நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “அப்படியானால் நீங்கள் (இதற்கு) சாட்சியாக இருங்கள். நானும் உங்களோடு சாட்சியாக இருக்கின்றேன்.

82

فَمَنْ تَوَلّٰی بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟

இதன் பிறகு (அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையிலிருந்து) யார் பின்வாங்கிச் செல்கின்றார்களோ அவர்களே பாவிகளாவர்.”

83

اَفَغَیْرَ دِیْنِ اللّٰهِ یَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَیْهِ یُرْجَعُوْنَ ۟

இனி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தீனை (வாழ்க்கை நெறியை) விட்டு வேறொரு வாழ்க்கை நெறியையா இவர்கள் விரும்புகின்றார்கள்? உண்மை என்னவெனில், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே கீழ்ப்படிந்து (முஸ்லிமாக) இருக்கின்றன; மேலும் அவனிடமே அவர்கள் அனைவரும் திரும்ப வேண்டியவராய் இருக்கின்றனர்.

84

قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟

நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கியருளப்பட்டிருக்கும் அறிவுரைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்கள் ஆகியோர் மீது இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்னும் மூஸா, ஈஸா மற்றுமுள்ள நபிமார்களுக்கு அவர்களுடைய அதிபதியிடமிருந்து இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இவர்களுக்கிடையே நாங்கள் எவ்வித வேற்றுமையும் காட்டுவதில்லை. மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம்.

85

وَمَنْ یَّبْتَغِ غَیْرَ الْاِسْلَامِ دِیْنًا فَلَنْ یُّقْبَلَ مِنْهُ ۚ وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟

இவ்வாறு அவனுக்குப் பணிந்து வாழும் நடத்தையை (இஸ்லாத்தை) விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒருபோதும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்.

86

كَیْفَ یَهْدِی اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَیِّنٰتُ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟

இறைநம்பிக்கை கொண்ட பிறகு நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்ட மக்களுக்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அவர்களோ இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சியம் அளித்திருந்தார்கள். மேலும் தெளிவான சான்றுகளும் அவர்களிடம் வந்திருந்தன. இவ்வாறு கொடுமை புரியும் சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.

87

اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَیْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ

(அவர்கள் புரிந்த கொடுமைக்காக) அல்லாஹ்வும் வானவர்களும், மக்கள் அனைவரும் அவர்கள் மீது இடுகின்ற சாபம்தான் அவர்களுக்குரிய சரியான கூலியாகும்!

88

خٰلِدِیْنَ فِیْهَا ۚ لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟ۙ

சாபக்கேடான நிலையிலேயே அவர்கள் என்றென்றும் மூழ்கிக் கிடப்பார்கள்; தண்டனை அவர்களுக்குக் குறைக்கப்படவும் மாட்டாது. மேலும் அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படமாட்டாது.

89

اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۫ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

ஆயினும் அதற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரி, தமது நடத்தையைத் திருத்திக் கொண்டவர்களைத் தவிர! (அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.) ஏனெனில் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், கருணை பொழிபவனும் ஆவான்.

90

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الضَّآلُّوْنَ ۟

ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டனரோ, மேலும் நிராகரிப்பிலேயே மூழ்கிக் கொண்டு போகின்றனரோ அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அவர்கள்தான் (முதிர்ந்த) வழிகேடர்கள்.

91

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰی بِهٖ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ وَّمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟۠

திண்ணமாக, எவர்கள் நிராகரிப்பை மேற்கொண்டு அதே நிலையில் மரணமடைந்து விடுகின்றார்களோ அவர்கள் தம்மைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பூமி நிரம்பப் பொன்னை ஈட்டுத் தொகையாகத் தந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார்.

92

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰی تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ؕ۬ وَمَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟

உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

93

كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِیْلُ عَلٰی نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰىةُ ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰىةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

(முஹம்மத் நபியுடைய ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும்) உண்பொருள்கள் அனைத்தும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தவ்ராத் அருளப்படுவதற்கு முன் சில பொருட்களை இஸ்ராயீல் (அதாவது யஃகூப்) தாமாகவே தமக்கு தடுக்கப்பட்டனவாய் (ஹராமாய்) ஆக்கிக் கொண்டிருந்தார். எனவே நபியே! அவர்களிடம் நீர் கூறும்: (“உங்கள் ஆட்சேபணையில்) நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், தவ்ராத்தைக் கொண்டுவந்து அதிலிருந்து ஒரு வாசகத்தையேனும் படித்துக் காட்டுங்கள்!”

94

فَمَنِ افْتَرٰی عَلَی اللّٰهِ الْكَذِبَ مِنْ بَعْدِ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟ؔ

எனவே அதற்குப் பின்னரும் யார் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைத்தவாறு இருக்கின்றார்களோ, அவர்கள்தாம் உண்மையில் கொடுமையாளர்கள் ஆவர்.

95

قُلْ صَدَقَ اللّٰهُ ۫ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟

(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உண்மையே உரைக்கின்றான். நீங்கள் ஒருமனப்பட்ட இப்ராஹீமின் வழிமுறையைப் பின்பற்றுங்கள்! மேலும் இப்ராஹீம் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் இருந்ததில்லை.”

96

اِنَّ اَوَّلَ بَیْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِیْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًی لِّلْعٰلَمِیْنَ ۟ۚ

திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது.

97

فِیْهِ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِیْمَ ۚ۬ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ؕ وَلِلّٰهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟

அங்குத் தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான்.

98

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۖۗ وَاللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا تَعْمَلُوْنَ ۟

(நபியே!) நீர் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்”

99

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟

(நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டவரை அல்லாஹ்வுடைய வழியில் செல்லவிடாமல் ஏன் தடுக்கின்றீர்கள்? (அவர்கள் நேரான வழியில்தான் செல்கின்றார்கள் என்பதற்கு) நீங்களே சான்று வழங்குவோராயிருந்தும், அவர்கள் கோணலான வழியில் செல்ல வேண்டுமென ஏன் விரும்புகின்றீர்கள்? உங்கள் செயல்களைக் குறித்து அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.”

100

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِیْعُوْا فَرِیْقًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ یَرُدُّوْكُمْ بَعْدَ اِیْمَانِكُمْ كٰفِرِیْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினரின் கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் உங்களுடைய நம்பிக்கையிலிருந்து உங்களைப் பிறழச் செய்து இறைமறுப்பின்பால் உங்களைக் கொண்டுபோய் விடுவார்கள்.

101

وَكَیْفَ تَكْفُرُوْنَ وَاَنْتُمْ تُتْلٰی عَلَیْكُمْ اٰیٰتُ اللّٰهِ وَفِیْكُمْ رَسُوْلُهٗ ؕ وَمَنْ یَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِیَ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟۠

உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. மேலும் அவனுடைய தூதரும் உங்களிடையே இருக்கின்றார். அவ்வாறிருக்க, இறைமறுப்பின்பால் செல்ல உங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? யார் அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்கின்றாரோ, அவர் நேரான வழியினை நிச்சயம் பெற்றுக் கொள்வார்.

102

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.

103

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِیْعًا وَّلَا تَفَرَّقُوْا ۪ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَلَّفَ بَیْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰی شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟

நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும், அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களை அதிலிருந்து காப்பாற்றி விட்டான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக!

104

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ یَّدْعُوْنَ اِلَی الْخَیْرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟

நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.

105

وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَیِّنٰتُ ؕ وَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ

எவர்கள் தம்மிடம் தெளிவான அறிவுரைகள் வந்த பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பற்பல பிரிவினராய்ச் சிதறுண்டு விட்டார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். (யார் இத்தகைய நடத்தையை மேற்கொள்கிறார்களோ) அவர்களுக்கு மறுமைநாளில் மாபெரும் தண்டனை உண்டு.

106

یَّوْمَ تَبْیَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ ۚ فَاَمَّا الَّذِیْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ ۫ اَكَفَرْتُمْ بَعْدَ اِیْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟

அந்நாளில் சிலரின் முகங்கள் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருக்கும். மற்றும் சிலரின் முகங்களோ துயரத்தால் கறுத்துப் போயிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்திருக்குமோ அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை எனும் அருட்கொடையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நன்றி கொல்லும் போக்கினை மேற்கொண்டீர்களல்லவா? இவ்வாறு நீங்கள் நன்றி மறந்து வாழும் போக்கினை மேற்கொண்டதால் இப்போது நரக வேதனையைச் சுவையுங்கள்!” என்று சொல்லப்படும்.

107

وَاَمَّا الَّذِیْنَ ابْیَضَّتْ وُجُوْهُهُمْ فَفِیْ رَحْمَةِ اللّٰهِ ؕ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

எவருடைய முகங்கள் மின்னிக் கொண்டிருக்குமோ, அவர்கள் அல்லாஹ்வுடைய அருளில் இருப்பார்கள். மேலும் அதிலே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.

108

تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ؕ وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعٰلَمِیْنَ ۟

இவை அல்லாஹ்வின் அருளுரைகள்! இவற்றை மிகச் சரியாக உமக்கு நாம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், அல்லாஹ் அகிலத்தாருக்குக் கொடுமைபுரிய நாடுவதில்லை.

109

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠

வானங்கள், பூமி இவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் உரிமையாளன் அல்லாஹ்வே ஆவான். மேலும் எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன.

110

كُنْتُمْ خَیْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَكَانَ خَیْرًا لَّهُمْ ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ ۟

இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர்.

111

لَنْ یَّضُرُّوْكُمْ اِلَّاۤ اَذًی ؕ وَاِنْ یُّقَاتِلُوْكُمْ یُوَلُّوْكُمُ الْاَدْبَارَ ۫ ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟

அவர்களால் உங்களுக்குத் தீங்கு எதையும் இழைத்துவிட முடியாது; சிறுசிறு தொல்லைகள் தருவதைத் தவிர! ஆயினும் உங்களோடு போரிட்டால் அவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள். பிறகு எங்கிருந்தும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது.

112

ضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ اَیْنَ مَا ثُقِفُوْۤا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَیْهِمُ الْمَسْكَنَةُ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟ۗ

அவர்கள் எங்கு காணப்படினும், அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் பொறுப்பில் அல்லது மனிதர்களின் பொறுப்பில் எங்கேனும் அவர்களுக்கு பாதுகாப்புக் கிட்டினாலே தவிர! மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டனர். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டன. இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து வந்ததும் அவனுடைய தூதர்களை நியாயமின்றிக் கொலை செய்ததும்தான்; அவர்கள் (இறைவனுக்கு) மாறு செய்ததாலும் வரம்பு மீறிச் செயல்பட்டதாலும் ஏற்பட்ட விளைவுகளாகும் இவை!

113

لَیْسُوْا سَوَآءً ؕ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآىِٕمَةٌ یَّتْلُوْنَ اٰیٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّیْلِ وَهُمْ یَسْجُدُوْنَ ۟

ஆனால், வேதம் அருளப்பட்டோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்களாய் இல்லை. அவர்களில் நேரிய வழியில் நிலைத்து நிற்கும் ஒரு குழுவினரும் இருக்கின்றனர்; அவர்கள் இராக்காலங்களில் இறைவசனங்களை ஓதுகின்றனர். (அல்லாஹ்வின் முன்னிலையில்) ஸுஜூது சிரம்தாழ்த்திப் பணிகின்றனர்.

114

یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُسَارِعُوْنَ فِی الْخَیْرٰتِ ؕ وَاُولٰٓىِٕكَ مِنَ الصّٰلِحِیْنَ ۟

இன்னும் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்புகின்றனர். நல்லவை புரியுமாறு ஏவி, தீயவற்றிலிருந்து தடுக்கின்றனர். மேலும், நற்பணிகளில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர். இவர்கள்தாம் நன் மக்களில் உள்ளவர்களாவர்.

115

وَمَا یَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَلَنْ یُّكْفَرُوْهُ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالْمُتَّقِیْنَ ۟

மேலும், இவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது புறக்கணிக்கப்படமாட்டாது. இறையச்சமுள்ளவர்களை அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

116

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

எவர்கள் நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களும் சரி, பிள்ளைகளும் சரி அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலனளிக்கமாட்டா! அவர்கள்தாம் நரகவாசிகள்! மேலும் அதிலேயே அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.

117

مَثَلُ مَا یُنْفِقُوْنَ فِیْ هٰذِهِ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَثَلِ رِیْحٍ فِیْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பதற்கான உவமை கடும் பனிப்புயல் போன்றதாகும். அதுவோ தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் வேளாண்மை நிலத்தைத் தாக்கி நாசப்படுத்துகிறது. அல்லாஹ் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை; உண்மையில் அவர்கள் தமக்குத்தாமே கொடுமை இழைத்துக் கொள்கிறார்கள்.

118

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا یَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ ۖۚ وَمَا تُخْفِیْ صُدُوْرُهُمْ اَكْبَرُ ؕ قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்கள் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்தக்கூடியது அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களுடைய வாய் மூலமாகவே அவர்களுடைய காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றைவிட) அதிகக் கொடியனவாக இருக்கின்றன. நிச்சயமாக நாம் தெளிவான அறிவுரைகளை உங்களுக்கு அளித்திருக்கின்றோம். நீங்கள் அறிவுடையோராயின் (அவர்களோடு தொடர்பு கொள்வதில் விழிப்புடன் இருங்கள்!)

119

هٰۤاَنْتُمْ اُولَآءِ تُحِبُّوْنَهُمْ وَلَا یُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا ۖۗۚ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَیْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَیْظِ ؕ قُلْ مُوْتُوْا بِغَیْظِكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள்; ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. நீங்களோ எல்லா இறைவேதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்! அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது, “நாங்களும் (உங்களுடைய தூதரையும், வேதத்தையும்) நம்புகின்றோம்” எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே, உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கின்றார்கள். அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் எரிச்சலிலேயே மூழ்கிச் சாகுங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”

120

اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ ؗ وَاِنْ تُصِبْكُمْ سَیِّئَةٌ یَّفْرَحُوْا بِهَا ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا یَضُرُّكُمْ كَیْدُهُمْ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟۠

உங்களுக்கு நன்மை ஏதும் கிட்டிவிட்டால் அது அவர்களை வருந்தச் செய்கின்றது. மேலும், உங்களுக்குத் துன்பம் நேர்ந்து விட்டாலோ அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது. ஆனால் நீங்கள் நிலைகுலையாமலும், அல்லாஹ்வுக்கு அஞ்சியும் வாழ்ந்தால் (உங்களுக்கெதிராக) அவர்கள் கையாளுகின்ற சூழ்ச்சி எந்தப் பலனையும் தரப்போவதில்லை. திண்ணமாக, அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

121

وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِیْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ

(நபியே!) நீர் அதிகாலையில் உமது வீட்டை விட்டுப் புறப்பட்டு முஸ்லிம்களை (உஹதுப் போர்க்களத்தில் அவரவருக்குரிய அணிவகுப்பு) இடங்களில் போருக்காக நிறுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை (முஸ்லிம்களுக்கு) நினைவூட்டுவீராக! அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.

122

اِذْ هَمَّتْ طَّآىِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَا ۙ وَاللّٰهُ وَلِیُّهُمَا ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟

உங்களில் இரு பிரிவினர் கோழைத்தனம் காட்ட முனைந்த நேரத்தை நினைவுகூரும். அல்லாஹ்வோ அவர்களுக்கு உதவி செய்ய இருந்தான். எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பவர்களாய்த் திகழ வேண்டும்.

123

وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْتُمْ اَذِلَّةٌ ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

(இதற்கு முன்) பத்ரு போரிலே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். அப்போது நீங்கள் மிகவும் வலுவற்றவர்களாய் இருந்தீர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி கொல்வதிலிருந்து விலகி வாழுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும்.

124

اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِیْنَ اَلَنْ یَّكْفِیَكُمْ اَنْ یُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُنْزَلِیْنَ ۟ؕ

“உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்திருந்தது போதுமானதில்லையா?” என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூரும்.

125

بَلٰۤی ۙ اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَیَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا یُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُسَوِّمِیْنَ ۟

ஆம். நீங்கள் நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சிப் பணியாற்றினால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள் மீது படையெடுத்து வருகின்றார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான்.

126

وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی لَكُمْ وَلِتَطْمَىِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ ؕ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟ۙ

அல்லாஹ் இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவித்தது, நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும், உங்கள் இதயங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காகவுமே! வெற்றி என்பது மிக்க வலிமையுடையவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது.

127

لِیَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَوْ یَكْبِتَهُمْ فَیَنْقَلِبُوْا خَآىِٕبِیْنَ ۟

அல்லாஹ் இத்தகைய உதவியை உங்களுக்குச் செய்வதெல்லாம், நிராகரித்தவர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக அல்லது அவர்களைப் படுதோல்வியில் ஆழ்த்தி அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாய் திரும்பிச் செல்வதற்காகத்தான்!

128

لَیْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَیْءٌ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ اَوْ یُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ ۟

(நபியே! தீர்ப்பு வழங்குவதற்கான) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்குமில்லை; அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோ அல்லது அக்கிரமக்காரர்களாய் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை அளிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும்.

129

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பை அருள்வான்; மேலும் தான் நாடுகின்றவர்களுக்கு வேதனையை அளிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான்.

130

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰۤوا اَضْعَافًا مُّضٰعَفَةً ۪ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும்.

131

وَاتَّقُوا النَّارَ الَّتِیْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟ۚ

இன்னும் இறை மறுப்பாளர்களுக்குத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்புக்கு அஞ்சுங்கள்.

132

وَاَطِیْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟ۚ

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம்.

133

وَسَارِعُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُ ۙ اُعِدَّتْ لِلْمُتَّقِیْنَ ۟ۙ

இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் (செல்லும் பாதையில்) விரைந்து செல்லுங்கள்! அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறையச்சமுடையோர்க்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

134

الَّذِیْنَ یُنْفِقُوْنَ فِی السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِیْنَ الْغَیْظَ وَالْعَافِیْنَ عَنِ النَّاسِ ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟ۚ

அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். மேலும் அவர்கள் சினத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்(களின் தவறு)களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை (முஹ்ஸின்களை) அல்லாஹ் நேசிக்கின்றான்.

135

وَالَّذِیْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ ۪ وَمَنْ یَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۪۫ وَلَمْ یُصِرُّوْا عَلٰی مَا فَعَلُوْا وَهُمْ یَعْلَمُوْنَ ۟

மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள்.

136

اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ؕ

இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிட மிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது!

137

قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ فَسِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟

உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றிருக்கின்றன. பூமியில் சுற்றித் திரிந்து (அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும், அறிவுரைகளையும்) பொய் என்று கூறியவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்!

138

هٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَهُدًی وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟

இது மக்களுக்குரிய தெளிவான விளக்கமாகும். மேலும், இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும், அறவுரையுமாகும்.

139

وَلَا تَهِنُوْا وَلَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.

140

اِنْ یَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ؕ وَتِلْكَ الْاَیَّامُ نُدَاوِلُهَا بَیْنَ النَّاسِ ۚ وَلِیَعْلَمَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟ۙ

(இப்பொழுது) உங்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்றால், இதற்கு முன்னர் (உங்கள்) எதிரணியினருக்கும் இதேபோன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம். (உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்று பகர்கின்றவர்களை (ஷுஹதா) உங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகத் தான்! ஏனெனில் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

141

وَلِیُمَحِّصَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَمْحَقَ الْكٰفِرِیْنَ ۟

(இவ்வாறெல்லாம் சோதனை செய்வதன் மூலம்) நம்பிக்கையாளர்களைப் பிரித்துத் தேர்ந்தெடுக்கவும், நிராகரிப்போரை நசுக்கவும் அல்லாஹ் நாடியிருந்தான்.

142

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَعْلَمِ اللّٰهُ الَّذِیْنَ جٰهَدُوْا مِنْكُمْ وَیَعْلَمَ الصّٰبِرِیْنَ ۟

உங்களில் யார் அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில் நிலைகுலையாமல் நிற்பவர்கள் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் (எளிதில்) சுவனம் புகுந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?

143

وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُ ۪ فَقَدْ رَاَیْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟۠

மரணம் உங்கள் எதிரில் வருவதற்கு முன்பு நீங்கள் நிச்சயமாக அதனை விரும்பிக் கொண்டிருந்தீர்கள். இதோ, இப்பொழுது அது உங்கள் முன் வந்துவிட்டது! அதனை நீங்கள் கண்கூடாய்ப் பார்த்துவிட்டீர்கள்.

144

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ اَفَاۡىِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ ؕ وَمَنْ یَّنْقَلِبْ عَلٰی عَقِبَیْهِ فَلَنْ یَّضُرَّ اللّٰهَ شَیْـًٔا ؕ وَسَیَجْزِی اللّٰهُ الشّٰكِرِیْنَ ۟

முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறல்லர். திண்ணமாக, அவருக்கு முன்பும் தூதர்கள் பலர் சென்றுள்ளனர். எனவே அவர் மரணமெய்திவிட்டால், அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் முந்திய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்று விடுவீர்களா? நினைவிருக்கட்டும்! எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ, அவனால் அல்லாஹ்விற்கு எத்தகையத் தீங்கும் செய்துவிட முடியாது. ஆயினும், நன்றி செலுத்தி வாழ்பவர்க்கு அல்லாஹ் மிக விரைவில் அதற்குரிய கூலியை வழங்குவான்.

145

وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَمَنْ یُّرِدْ ثَوَابَ الدُّنْیَا نُؤْتِهٖ مِنْهَا ۚ وَمَنْ یُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ؕ وَسَنَجْزِی الشّٰكِرِیْنَ ۟

எந்த உயிரினமும் அல்லாஹ்வுடைய உத்தரவின்றி இறக்க முடியாது. மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. எவர் உலகாயத லாபங்களைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். எவர் மறுமைப் பேற்றைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துவோர்க்கு அதிவிரைவில் நாம் கூலி வழங்கிடுவோம்.

146

وَكَاَیِّنْ مِّنْ نَّبِیٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّیُّوْنَ كَثِیْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الصّٰبِرِیْنَ ۟

(இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்(களும் அவர்)களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ளார்கள். அல்லாஹ்வின் வழியில், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவுமில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

147

وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِیْۤ اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟

அவர்களுடைய பிரார்த்தனை இதுவாகத்தான் இருந்தது: “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!”

148

فَاٰتٰىهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْیَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠

இறுதியில் இவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலக நன்மைகளையும் அளித்தான்; அதைவிட உன்னதமான மறுமைப் பேறுகளையும் வழங்கினான். இத்தகைய நற்செயல்கள் புரியும் முஹ்ஸின்கள் தாம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரியவர்கள்.

149

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِیْعُوا الَّذِیْنَ كَفَرُوْا یَرُدُّوْكُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டவர்களின் கூற்றுகளை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை முந்திய வாழ்க்கைக்குத் திருப்பி விடுவார்கள். மேலும் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள். (அவர்களுடைய கூற்று தவறானவையே!

150

بَلِ اللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ خَیْرُ النّٰصِرِیْنَ ۟

உண்மை என்னவெனில்) அல்லாஹ்தான் உங்களின் பாதுகாவலன். மேலும் அவன் உதவி செய்வோரில் மிகச் சிறந்தவன்.

151

سَنُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَاۤ اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ۚ وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ وَبِئْسَ مَثْوَی الظّٰلِمِیْنَ ۟

(சத்தியத்தை) நிராகரிப்போரின் உள்ளங்களில் வெகுவிரைவில் நாம் பேரச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அவனுடன் இணையாக்கிவிட்டார்கள். இவர்கள் இறுதியாகப் போய்ச் சேருமிடம் நரகமே! அக்கிரமக்காரர்கள் சேர இருக்கும் இந்த இடம் எத்துணைக் கெட்டது!

152

وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَعَصَیْتُمْ مِّنْ بَعْدِ مَاۤ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ؕ مِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الدُّنْیَا وَمِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الْاٰخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِیَبْتَلِیَكُمْ ۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْ ؕ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟

அல்லாஹ் உங்களுக்கு (உதவி செய்வதாகக் கூறிய) தனது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான். துவக்கத்தில் அவனது அனுமதியின்படி அவர்களை நீங்கள்தாம் (போரில்) வெட்டி வீழ்த்தினீர்கள்! ஆனால் இறுதியில் நீங்கள் ஊக்கமிழந்து உங்களுடைய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள்; மேலும் நீங்கள் மோகம் கொண்டிருந்தவற்றை (போர்ப் பொருட்களை) அல்லாஹ் உங்கள் கண்ணெதிரே காட்டிய உடனேயே (உங்கள் தலைவரின் கட்டளைக்கு) நீங்கள் மாறு செய்தீர்கள். ஏனெனில் உங்களில் சிலர் இம்மையை விரும்புவோராய் இருந்தனர்; வேறு சிலர் மறுமையை விரும்புவோராய் இருந்தனர். பிறகு அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு இறைமறுப்பாளர்களை எதிர்த்து நிற்க முடியாத வண்ணம் உங்களை திசை திருப்பிவிட்டான். இதன் பிறகும் அவன் உங்களை மன்னித்தருளினான். ஏனெனில், அல்லாஹ் இறைநம்பிக்கையுடையோர் மீது பெரிதும் கருணை பொழிபவனாக இருக்கின்றான்.

153

اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰۤی اَحَدٍ وَّالرَّسُوْلُ یَدْعُوْكُمْ فِیْۤ اُخْرٰىكُمْ فَاَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِّكَیْلَا تَحْزَنُوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟

இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காதவாறு ஓடிக் கொண்டிருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். இதன் விளைவாக அல்லாஹ் உங்களுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பத்தைக் கொடுத்தான். ஏனெனில், உங்களை விட்டு நழுவிப் போனவை பற்றியும், உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டது பற்றியும், (இனிமேல்) நீங்கள் வருந்தக் கூடாது எனும் படிப்பினையை இதிலிருந்து பெறவேண்டும் என்பதற்காக! அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.

154

ثُمَّ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنْ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا یَّغْشٰی طَآىِٕفَةً مِّنْكُمْ ۙ وَطَآىِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ یَظُنُّوْنَ بِاللّٰهِ غَیْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِیَّةِ ؕ یَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَیْءٍ ؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ ؕ یُخْفُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ مَّا لَا یُبْدُوْنَ لَكَ ؕ یَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَیْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِیْ بُیُوْتِكُمْ لَبَرَزَ الَّذِیْنَ كُتِبَ عَلَیْهِمُ الْقَتْلُ اِلٰی مَضَاجِعِهِمْ ۚ وَلِیَبْتَلِیَ اللّٰهُ مَا فِیْ صُدُوْرِكُمْ وَلِیُمَحِّصَ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

பின்னர் இத் துன்பத்திற்குப் பிறகு மன ஆறுதலை அளிக்கக்கூடிய சிற்றுறக்கத்தை அல்லாஹ் உங்களுக்கு அருளினான். உங்களில் ஒரு குழுவினரை அது ஆட்கொண்டது. ஆனால் மற்றும் சிலரோ தமது நலன்களையே முக்கியமாகக் கருதி உண்மைக்குப் புறம்பாக, அல்லாஹ்வைப் பற்றி அறியாமை மிக்க பல யூகங்களைக் கொண்டிருந்தனர். “இந்த விவகாரங்களில் எங்களுக்கும் ஏதாவது பங்குண்டா?” என்று அவர்கள் வினவுகின்றனர். நீர் கூறும்: “(யாருக்கும் எத்தகையப் பங்குமில்லை.) இவற்றின் அனைத்து அதிகாரங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் கைவசமே உள்ளன.” உண்மையில் அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை உம்மிடம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் கேட்டதன் பொருள் இதுதான்: “தலைமையதிகாரங்களில் எங்களுக்கும் சிறிது பங்கு இருந்திருந்தால், நாங்கள் இங்குக் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” என்று அவர்கள் சொல்கின்றார்கள். அதற்கு நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!” மேலும் அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றைச் சோதிக்கவும் உங்கள் இதயங்களில் படிந்திருக்கும் மாசுகளை அகற்றவுமே இவ்வாறெல்லாம் நிகழும்படிச் செய்தான். அல்லாஹ் உங்கள் உள்ளங்களின் நிலையை நன்கறிபவனாக இருக்கின்றான்.

155

اِنَّ الَّذِیْنَ تَوَلَّوْا مِنْكُمْ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ۙ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّیْطٰنُ بِبَعْضِ مَا كَسَبُوْا ۚ وَلَقَدْ عَفَا اللّٰهُ عَنْهُمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠

இரு கூட்டத்தாரும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத்தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். எனினும் அல்லாஹ் அவர்களைப் பொறுத்தருளினான். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் சகிப்புத்தன்மையுடையவனுமாய் இருக்கின்றான்.

156

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِی الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّی لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْا ۚ لِیَجْعَلَ اللّٰهُ ذٰلِكَ حَسْرَةً فِیْ قُلُوْبِهِمْ ؕ وَاللّٰهُ یُحْیٖ وَیُمِیْتُ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிப்போரைப் போன்று பேசாதீர்கள்! அவர்கள், தங்களுடைய உற்றார் உறவினர் எப்போதேனும் பயணம் சென்றால், அல்லது போரில் கலந்து (ஏதேனும் துன்பத்திற்குள்ளாகி) விட்டால், “இவர்கள் எங்களுடன் இருந்திருந்தால் மரணமடைந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய இப்படிப்பட்ட பேச்சுகளின் காரணமாக, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் கடுந்துயரத்தை ஏற்படுத்துகிறான். உண்மையில் உயிரைக் கொடுப்பவனும், உயிரைப் பறிப்பவனும் அல்லாஹ்வே ஆவான்; மேலும், நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

157

وَلَىِٕنْ قُتِلْتُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟

நீங்கள் அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டாலோ அல்லது மரணமடைந்தாலோ, அப்போது உங்களுக்கு வழங்கப்படவிருக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் கருணையும் இ(ந்நிராகரிப்ப)வர்கள் திரட்டி வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும்விட மிகச் சிறந்தவையாகும்.

158

وَلَىِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَاۡاِلَی اللّٰهِ تُحْشَرُوْنَ ۟

நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.

159

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِیْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۪ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِی الْاَمْرِ ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَوَكِّلِیْنَ ۟

(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்(களின் தவறு)களைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும் இவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும் தீனுடைய பணிகளில் இவர்களையும் கலந்தாலோசிப்பீராக! (ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.

160

اِنْ یَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمْ ۚ وَاِنْ یَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِیْ یَنْصُرُكُمْ مِّنْ بَعْدِهٖ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாகில், பிறகு எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது! மேலும் உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.

161

وَمَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّغُلَّ ؕ وَمَنْ یَّغْلُلْ یَاْتِ بِمَا غَلَّ یَوْمَ الْقِیٰمَةِ ۚ ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

வஞ்சனை செய்தல் எந்த ஒரு நபிக்குரிய செயலாகவும் இருக்க முடியாது. எனவே எவர் வஞ்சனை செய்கின்றாரோ அவர் மறுமைநாளில் தான் செய்த வஞ்சனையுடன்தான் வருவார். பின்னர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்களில் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.

162

اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟

எப்பொழுதுமே அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றி நடக்கும் ஒருவர் அல்லாஹ்வின் சினத்துக்கு ஆளானவரைப் போலவும், மிகவும் கெட்ட இருப்பிடமான நரகத்தைப் புகலிடமாகப் பெற்றிருப்பவரைப் போலவும் செயல்படுவாரா?

163

هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟

அல்லாஹ்விடம் இவ்விரு வகை மனிதர்களுக்கும் இடையில் வேறுபட்ட படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் இவர்கள் அனைவரின் செயல்களையும் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.

164

لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ اِذْ بَعَثَ فِیْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

திண்ணமாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருதவி புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் கற்றுக்கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில்தான் இருந்தார்கள்.

165

اَوَلَمَّاۤ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَیْهَا ۙ قُلْتُمْ اَنّٰی هٰذَا ؕ قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

(என்னே உங்கள் நிலை!) உங்களுக்கு ஏதேனும் துன்பம் வரும்போது, “அது எங்கிருந்து வந்தது?” என்று கேட்கிறீர்கள். (ஆனால் பத்ருப் போரில்) இது போன்ற இரு மடங்கு துன்பம் உங்கள் கைகளால் எதிரிகளுக்கு ஏற்பட்டிருந்ததே! (நபியே!) நீர் அவர்களுக்குக் கூறும்: “இத்துன்பம் உங்களால்தான் வந்தது. திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.”

166

وَمَاۤ اَصَابَكُمْ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِیَعْلَمَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ

இரு சாராரும் மோதிக் கொண்ட நாளில் உங்களுக்கு வந்த துன்பங்கள் அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் ஏற்பட்டன.

167

وَلِیَعْلَمَ الَّذِیْنَ نَافَقُوْا ۖۚ وَقِیْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ؕ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنٰكُمْ ؕ هُمْ لِلْكُفْرِ یَوْمَىِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِیْمَانِ ۚ یَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یَكْتُمُوْنَ ۟ۚ

மேலும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்று அல்லாஹ் இனங்கண்டு கொள்வதற்காகவும்தான் (ஏற்பட்டன). “வாருங்கள், இறைவழியில் போர்புரியுங்கள்; அல்லது குறைந்த பட்சம் (உங்களின் நகரத்தையாவது) தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று இந்த நயவஞ்சகர்களிடம் கூறப்பட்டது. அதற்கு, “இன்று போர் நடைபெறும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாங்களும் உங்களை நிச்சயம் பின்தொடர்ந்து வந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நேரத்தில் இறைநம்பிக்கையைவிட நிராகரிப்புடன் (குஃப்ருடன்) அவர்கள் மிக நெருக்கமாய் இருந்தார்கள். தம் உள்ளங்களில் இல்லாதவற்றை நாவினால் கூறுகின்றார்கள்; மேலும், அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.

168

اَلَّذِیْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ؕ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

இவர்கள் எத்தகையவர்களென்றால், தாம் போரில் கலந்து கொள்ளாததுடன் (அதில் பங்கு பெற்று கொல்லப்பட்ட தம் சகோதரர்களைப் பற்றி) “அவர்கள் எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (நபியே!) நீர் அவர்களிடம் கூறும்: “நீங்கள் வாய்மையுடையோராயின், மரணம் வரும்போது உங்களை விட்டு அதனைத் தடுத்து விடுங்கள் பார்ப்போம்!”

169

وَلَا تَحْسَبَنَّ الَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ بَلْ اَحْیَآءٌ عِنْدَ رَبِّهِمْ یُرْزَقُوْنَ ۟ۙ

இறைவழியில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக ஒருபோதும் கருதாதீர்! உண்மையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்கள் தம் இறைவனிடமிருந்து தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

170

فَرِحِیْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ وَیَسْتَبْشِرُوْنَ بِالَّذِیْنَ لَمْ یَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْ ۙ اَلَّا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۘ

அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்கள். தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்து வருகின்ற இன்னும் தங்களுடன் வந்து சேராமல் இருக்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் குறித்து, அவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மனநிறைவு பெறுகின்றார்கள்.

171

یَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ ۙ وَّاَنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُؤْمِنِیْنَ ۟

அல்லாஹ் அளித்த கொடையினாலும், அருளினாலும் அவர்கள் அகமகிழ்வுடன் இருக்கின்றார்கள். இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகி விடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கிறது.

172

اَلَّذِیْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ ۛؕ لِلَّذِیْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِیْمٌ ۟ۚ

(அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால்) அவர்கள் (போரில்) தமக்குக் காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வு(டைய அழைப்பு)க்கும் தூதரு(டைய அழைப்பு)க்கும் மறுமொழியளித்தார்கள். அவர்களில் யார் நற்செயல் புரிந்து பாவங்களிலிருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு மாபெரும் கூலியுண்டு.

173

اَلَّذِیْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِیْمَانًا ۖۗ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِیْلُ ۟

“உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் (பெரும்படையாகத்) திரண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சுங்கள்!” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறைநம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள்.

174

فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ یَمْسَسْهُمْ سُوْٓءٌ ۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ؕ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِیْمٍ ۟

இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. இன்னும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின்படி நடந்தார்கள் (எனும் சிறப்பும் அவர்களுக்குக் கிடைத்தது). மேலும், அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கின்றான்.

175

اِنَّمَا ذٰلِكُمُ الشَّیْطٰنُ یُخَوِّفُ اَوْلِیَآءَهٗ ۪ فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

தன் நண்பர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஷைத்தானே அவ்வாறு கூறியவன் (என்பது இப்போது உங்களுக்குப் புரிந்துவிட்டது). எனவே நீங்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கையுடையோராயின் (இனி) அம்மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்!

176

وَلَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ ۚ اِنَّهُمْ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ یُرِیْدُ اللّٰهُ اَلَّا یَجْعَلَ لَهُمْ حَظًّا فِی الْاٰخِرَةِ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟

(நபியே! இன்று) இறைநிராகரிப்பின் வழியில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்(களின் நடவடிக்கை)கள் உம்மைத் துயரத்தில் ஆழ்த்திட வேண்டாம். நிச்சயமாக அவர்களால் அல்லாஹ்வுக்குச் சிறிதும் தீங்கு விளைவித்திட முடியாது. அவர்களுக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் கிடைக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். இறுதியில் அவர்களுக்கு மிகப்பெரும் தண்டனையும் கிடைக்கும்.

177

اِنَّ الَّذِیْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِیْمَانِ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

எவர்கள் இறைநம்பிக்கைக்குப் பதிலாக நிராகரிப்பை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ அவர்களால் அல்லாஹ்வுக்கு எத்தகைய தீங்கினையும் திண்ணமாக ஏற்படுத்திட முடியாது. துன்புறுத்தும் வேதனைதான் அவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

178

وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِیْ لَهُمْ خَیْرٌ لِّاَنْفُسِهِمْ ؕ اِنَّمَا نُمْلِیْ لَهُمْ لِیَزْدَادُوْۤا اِثْمًا ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟

இவ்வாறு அவர்களை நாம் (உடனடியாகத் தண்டிக்காமல்) விட்டு வைப்பது தங்களுக்கு நன்மையாகும் என நிராகரிப்பவர்கள் எண்ணிவிட வேண்டாம்! அவர்களை நாம் விட்டு வைப்பதெல்லாம் பாவச் சுமையை அவர்கள் அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான்! பின்னர் அவர்களுக்கு இழிவு மிக்க வேதனை இருக்கிறது.

179

مَا كَانَ اللّٰهُ لِیَذَرَ الْمُؤْمِنِیْنَ عَلٰی مَاۤ اَنْتُمْ عَلَیْهِ حَتّٰی یَمِیْزَ الْخَبِیْثَ مِنَ الطَّیِّبِ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِیُطْلِعَكُمْ عَلَی الْغَیْبِ وَلٰكِنَّ اللّٰهَ یَجْتَبِیْ مِنْ رُّسُلِهٖ مَنْ یَّشَآءُ ۪ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَكُمْ اَجْرٌ عَظِیْمٌ ۟

இப்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ, அதே நிலையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டான். தூய்மையானவர்களை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியே தீருவான். மேலும், மறைவானவற்றை உங்களுக்கு அறிவிப்பது அல்லாஹ்வின் நியதியல்ல. எனினும் (அவற்றை அறிவித்துக் கொடுப்பதற்காக) தன்னுடைய தூதர்களில் தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். எனவே (மறைவானவற்றில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தோடும் வாழ்வீர்களாயின் உங்களுக்கு மகத்தான கூலி இருக்கிறது.

180

وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ یَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَیْرًا لَّهُمْ ؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ؕ سَیُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠

அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும். வானங்களும், பூமியும் அல்லாஹ்வுக்கே உரித்தானவையாய் இருக்கின்றன. மேலும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.

181

لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِیْرٌ وَّنَحْنُ اَغْنِیَآءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ۙ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟

“அல்லாஹ் வறியவன்; நாங்கள் செல்வந்தர்கள்!” என்று கூறியவர்களின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். இவ்வாறு அவர்கள் கூறியதை நாம் பதிவு செய்கின்றோம். (இதற்கு முன்) தூதர்களை நியாயமின்றி அவர்கள் கொலை செய்து வந்ததும் செயலேட்டில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், (தீர்ப்புக் கூறும் நேரம் வரும்போது) நாம் அவர்களிடம் கூறுவோம்: “இதோ, சுட்டுப் பொசுக்கும் நரக வேதனையை இப்பொழுது சுவையுங்கள்!”

182

ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۚ

இது உங்கள் கைகள் சம்பாதித்ததுதான்! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகள்மீது கொடுமை புரிபவன் அல்லன்.

183

اَلَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَیْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰی یَاْتِیَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ ؕ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِیْ بِالْبَیِّنٰتِ وَبِالَّذِیْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

“(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் வரை எந்த ஒருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று திண்ணமாக அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னவர்களிடம் (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக எனக்கு முன்பு உங்களிடையே தூதர்கள் பலர் தெளிவான பல சான்றுகளுடன் வந்திருந்தனர். (ஏன்) நீங்கள் இப்பொழுது குறிப்பிடுகின்ற சான்றினையும் கூட அவர்கள் கொண்டு வந்தனர். (இறைநம்பிக்கை கொள்வதற்கு இதனை ஒரு நிபந்தனையாய்க் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், பிறகு அத்தகைய தூதர்களை ஏன் கொலை செய்தீர்கள்?”

184

فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَآءُوْ بِالْبَیِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِیْرِ ۟

(முஹம்மதே! இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் எனக் கூறுகின்றார்கள். ஆனால், உமக்கு முன் தெள்ளத் தெளிவான சான்றுகளையும் ஆகமங்களையும், ஒளியூட்டும் வேதங்களையும் கொணர்ந்த தூதர்களில் பலரும் பொய்யர்கள் எனக் கூறப்பட்டனர்.

185

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟

ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். நீங்கள் அனைவரும் உங்களுடைய கூலியை மறுமைநாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள். (அங்கு) எவன் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப் படுகின்றானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான்! இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை!

186

لَتُبْلَوُنَّ فِیْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ۫ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْۤا اَذًی كَثِیْرًا ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟

(முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும் உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள் பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைப்பிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும்.

187

وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَتُبَیِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ ؗ فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَاشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ فَبِئْسَ مَا یَشْتَرُوْنَ ۟

வேதம் அருளப்பட்டவர்களிடம், “வேதக் கருத்துகளை மக்களிடையே நீங்கள் பரப்பிட வேண்டும்; அவற்றை மறைத்து வைக்கக் கூடாது” என்று அல்லாஹ் வாக்குறுதி வாங்கியதை நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! எனினும் அவர்கள் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னே எறிந்து விட்டார்கள்! மேலும் அதனை அற்ப ஆதாயத்திற்காக விற்று விட்டார்கள். அவர்களுடைய கொடுக்கல் வாங்கல் எத்துணைத் தரங்கெட்டது!

188

لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ یَفْرَحُوْنَ بِمَاۤ اَتَوْا وَّیُحِبُّوْنَ اَنْ یُّحْمَدُوْا بِمَا لَمْ یَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

தாம் செய்கின்ற இழிசெயல்களைக் குறித்து மகிழ்ந்திருப்பவர்கள் செய்யாத செயல்களுக்காகத் தாம் பாராட்டப்பட வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று ஒருபோதும் நீர் கருதிவிட வேண்டாம். (உண்மையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது.

189

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠

வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனுடைய பேராற்றல் யாவற்றையும் உள்ளடக்கியுள்ளது!

190

اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الْاَلْبَابِ ۟ۚۙ

திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவுபகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன.

191

الَّذِیْنَ یَذْكُرُوْنَ اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِهِمْ وَیَتَفَكَّرُوْنَ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ۟

அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும்போதும் ஆக எல்லா நிலைகளிலும், அல்லாஹ்வை நினைக்கின்றார்கள்; மேலும், வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (பிறகு அவர்கள் உணர்ச்சி பொங்க இப்படிப் பிரார்த்திக்கின்றார்கள்:) “எங்கள் இறைவனே! இவையனைத்தையும் நீ வீணாக (யாதொரு நோக்கமுமின்றிப்) படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே, நரக வேதனையிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக!

192

رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَیْتَهٗ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟

எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ, அவனை நீ உண்மையில் மிகக் கேவலப்படுத்திவிட்டாய். மேலும் இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.

193

رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِیًا یُّنَادِیْ لِلْاِیْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۖۗ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَیِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ ۟ۚ

எங்கள் அதிபதியே! இறைநம்பிக்கையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்றோம். ‘உங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறினார். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனவே, “எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக!

194

رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰی رُسُلِكَ وَلَا تُخْزِنَا یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِیْعَادَ ۟

எங்கள் இறைவா! மேலும், தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித் தந்தருள்வாயாக! மேலும், மறுமைநாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே! திண்ணமாக, நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்!”

195

فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّیْ لَاۤ اُضِیْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُ ۚ بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ فَالَّذِیْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاُوْذُوْا فِیْ سَبِیْلِیْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ ۟

அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான்: “உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே! எனவே (எனக்காக) நாட்டைத் துறந்தவர்கள், மேலும் என் வழியில் தம் இல்லங்களை விட்டு வெளியேற்றப்பட்டு துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள், இன்னும் (எனக்காக) போர் புரிந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் குற்றங்குறைகளையும் நான் மன்னிப்பேன். இன்னும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அவர்களை நுழைவிப்பேன். இது, அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலியாகும். மேலும் அழகிய நற்கூலி அல்லாஹ்விடமேயுள்ளது.

196

لَا یَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِیْنَ كَفَرُوْا فِی الْبِلَادِ ۟ؕ

உலகின் பல பகுதிகளில் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவர்களின் நடமாட்டம் உம்மை ஒருபோதும் ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம்.

197

مَتَاعٌ قَلِیْلٌ ۫ ثُمَّ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمِهَادُ ۟

இது (சில நாள் வாழ்க்கையின்) அற்ப இன்பம்தான். பிறகு அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். எத்துணை இழிவான தங்குமிடம் அது!

198

لٰكِنِ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ لِّلْاَبْرَارِ ۟

இதற்கு மாறாக எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வருகின்றார்களோ அவர்களுக்கு, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்படும் மிகச் சிறந்த உபசரிப்பாகும். மேலும், நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம் இருப்பவையே மிகவும் சிறந்தவையாகும்.

199

وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ یُّؤْمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ خٰشِعِیْنَ لِلّٰهِ ۙ لَا یَشْتَرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟

திண்ணமாக, வேதம் அருளப்பட்டவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வையும், உம்மீது இறக்கியருளப்பட்டதையும், (முன்னர்) தங்கள் மீது இறக்கியருளப்பட்டதையும் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் திருமுன் பணிந்த வண்ணமிருக்கின்றார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்பதில்லை. அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான்.

200

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا ۫ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠

இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை கைக்கொள்வீர்களாக! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழ்வீர்களாக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும்!

PreviousAl-BaqarahNextAn-Nisa

0:00–:––