All Surahs

Surah 36

يس

Ya-Sin

36. ஸூரத்து யாஸீன்

83 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

یٰسٓ ۟ۚ

யாஸீன்.

2

وَالْقُرْاٰنِ الْحَكِیْمِ ۟ۙ

ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது ஆணையாக,

3

اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ۙ

திண்ணமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவராவீர்;

4

عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟ؕ

நேரிய வழியில் இருக்கின்றீர்.

5

تَنْزِیْلَ الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ

(மேலும் இந்தக் குர்ஆன்) யாவரையும் மிகைத்தவனும் அருள்மிக்கவனுமாகிய இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும்.

6

لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ ۟

தம் மூதாதையர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாததால் எந்தச் சமுதாயம் அலட்சியமாக இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!

7

لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰۤی اَكْثَرِهِمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

அவர்களில் பெரும்பாலோர் தண்டனைக்குரிய தீர்ப்புக்கு ஆளாகிவிட்டனர். எனவே அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.

8

اِنَّا جَعَلْنَا فِیْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِیَ اِلَی الْاَذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ ۟

நாம் அவர்களின் கழுத்துகளில் விலங்குகளைப் பூட்டியுள்ளோம். அவை அவர்களின் முகவாய்க் கட்டைகள் வரை நெருக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

9

وَجَعَلْنَا مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَیْنٰهُمْ فَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟

மேலும் நாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் எழுப்பி, அவர்களை மூடி விட்டிருக்கின்றோம். இனி அவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லை.

10

وَسَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். நீர் அவர்களை அச்சமூட்டி எச்சரித்தாலும் சரி; எச்சரிக்காவிட்டாலும் சரி; அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

11

اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ ۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِیْمٍ ۟

யார் அறிவுரையைப் பின்பற்றி நேரில் காணாமலே ரஹ்மானுக்கு கருணை மிக்க இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவருக்குத்தான் நீர் எச்சரிக்கை செய்ய முடியும். அத்தகையோருக்கு மன்னிப்பும், சிறப்பான கூலியும் இருக்கின்றதென்று நற்செய்தி கூறுவீராக!

12

اِنَّا نَحْنُ نُحْیِ الْمَوْتٰی وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْ ؔؕ وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ فِیْۤ اِمَامٍ مُّبِیْنٍ ۟۠

திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக் கொண்டேயிருக்கின்றோம். அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்.

13

وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا اَصْحٰبَ الْقَرْیَةِ ۘ اِذْ جَآءَهَا الْمُرْسَلُوْنَ ۟ۚ

மேலும், ஓர் ஊர் மக்களிடம் தூதர்கள் வந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக.

14

اِذْ اَرْسَلْنَاۤ اِلَیْهِمُ اثْنَیْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوْۤا اِنَّاۤ اِلَیْكُمْ مُّرْسَلُوْنَ ۟

நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம்மக்களை நோக்கி) “உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்கள்.

15

قَالُوْا مَاۤ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَیْءٍ ۙ اِنْ اَنْتُمْ اِلَّا تَكْذِبُوْنَ ۟

“நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள்” என்று அந்த ஊர் மக்கள் கூறினார்கள்.

16

قَالُوْا رَبُّنَا یَعْلَمُ اِنَّاۤ اِلَیْكُمْ لَمُرْسَلُوْنَ ۟

தூதர்கள் கூறினார்கள்: “திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான்.

17

وَمَا عَلَیْنَاۤ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟

மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத்தவிர வேறில்லை!”

18

قَالُوْۤا اِنَّا تَطَیَّرْنَا بِكُمْ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ وَلَیَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟

அதற்கு அவ்வூர் மக்கள், “நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுனமாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக்கொள்ளாவிட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். மேலும், நீங்கள் எங்களிடமிருந்து அவசியம் துன்பமிகு தண்டனை பெறுவீர்கள்!” எனக் கூறலானார்கள்.

19

قَالُوْا طَآىِٕرُكُمْ مَّعَكُمْ ؕ اَىِٕنْ ذُكِّرْتُمْ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟

(அதற்கு) அத்தூதர்கள், “உங்களுடைய அபசகுனம் உங்களோடுதான் இருக்கிறது. உங்களுக்கு நல்லுரை கூறப்பட்டதற்காகவா (நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்!) உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிய மக்களாவீர்!” எனப் பதிலளித்தார்கள்.

20

وَجَآءَ مِنْ اَقْصَا الْمَدِیْنَةِ رَجُلٌ یَّسْعٰی قَالَ یٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِیْنَ ۟ۙ

(இதற்கிடையில்) நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து கூறினார்: “என் சமூகத்தவரே! இறைத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.

21

اتَّبِعُوْا مَنْ لَّا یَسْـَٔلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ ۟

எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லையோ, மேலும், எவர்கள் நேர்வழியில் இருக்கிறார்களோ, அவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள்.

22

وَمَا لِیَ لَاۤ اَعْبُدُ الَّذِیْ فَطَرَنِیْ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

எவன் என்னைப் படைத்தானோ மேலும், எவன் பக்கம் நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்களோ அத்தகைய ஒருவனுக்கு நான் ஏன் அடிபணியக் கூடாது?

23

ءَاَتَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ یُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا وَّلَا یُنْقِذُوْنِ ۟ۚ

அவனை விடுத்து மற்றவர்களை அடி பணிவதற்குரியவர்களாய் நான் எடுத்துக் கொள்வேனா? உண்மையில், கருணைமிக்க இறைவன் எனக்கு ஏதேனும் தீங்கினை ஏற்படுத்த நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்கு எவ்விதப் பலனையும் அளிக்காது. அவர்களால் என்னை விடுவிக்கவும் முடியாது.

24

اِنِّیْۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

நான் அவ்வாறு செய்தால், வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிடுவேன் என்பதில் ஐயமில்லை.

25

اِنِّیْۤ اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِ ۟ؕ

நானோ உங்கள் அதிபதியின் மீதே உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே நீங்களும் நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.”

26

قِیْلَ ادْخُلِ الْجَنَّةَ ؕ قَالَ یٰلَیْتَ قَوْمِیْ یَعْلَمُوْنَ ۟ۙ

(இறுதியில் அம்மக்கள் அவரைக் கொன்று விட்டார்கள். பிறகு) அவரிடம் “சுவனம் புகுவீராக!” என்று கூறப்பட்டது. அவர் கூறினார்: “ஆஹா! என் சமூகத்தவர் அறிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!”

27

بِمَا غَفَرَ لِیْ رَبِّیْ وَجَعَلَنِیْ مِنَ الْمُكْرَمِیْنَ ۟

என் இறைவன் எக்காரணத்தால் என்னை மன்னித்து, கண்ணியமிக்கவர்களில் ஒருவனாய் என்னை ஆக்கினான் என்பதனை.

28

وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی قَوْمِهٖ مِنْ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَآءِ وَمَا كُنَّا مُنْزِلِیْنَ ۟

அவருக்குப் பின்னர் அவருடைய சமூகத்தினர் மீது வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை. அவ்வாறு இறக்குவதற்கான அவசியமும் நமக்கு இருக்கவில்லை.

29

اِنْ كَانَتْ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ ۟

ஒரே ஓர் உரத்த ஓசைதான் (முழங்கியது). அவர்களெல்லோரும் உடனே கருகிச் சாம்பலாகிவிட்டனர்.

30

یٰحَسْرَةً عَلَی الْعِبَادِ ؔۚ مَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

அந்தோ! இம்மக்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது. அவர்களிடம் எந்த இறைத்தூதர் வந்தபோதும், அத்தூதரை அவர்கள் ஏளனம் செய்துகொண்டுதான் இருந்தார்கள்.

31

اَلَمْ یَرَوْا كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ اَنَّهُمْ اِلَیْهِمْ لَا یَرْجِعُوْنَ ۟ؕ

இவர்களுக்கு முன்பு (வாழ்ந்த) எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். (பிறகு) அவர்கள் ஒருபோதும் இவர்களிடம் திரும்பிவர மாட்டார்கள் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா, என்ன?

32

وَاِنْ كُلٌّ لَّمَّا جَمِیْعٌ لَّدَیْنَا مُحْضَرُوْنَ ۟۠

மேலும், திண்ணமாக இவர்கள் அனைவருமே (ஒருநாள்) நம்முன் கொண்டுவரப்பட இருக்கின்றார்கள்.

33

وَاٰیَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَیْتَةُ ۖۚ اَحْیَیْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ یَاْكُلُوْنَ ۟

உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாம் அதற்கு உயிர்கொடுத்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்தினோம்; அதிலிருந்து அவர்கள் புசிக்கிறார்கள்.

34

وَجَعَلْنَا فِیْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِیْهَا مِنَ الْعُیُوْنِ ۟ۙ

மேலும், நாம் இதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினோம்; மேலும், இதில் நீரூற்றுகளைப் பீரிட்டெழச் செய்தோம்;

35

لِیَاْكُلُوْا مِنْ ثَمَرِهٖ ۙ وَمَا عَمِلَتْهُ اَیْدِیْهِمْ ؕ اَفَلَا یَشْكُرُوْنَ ۟

இதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக! இவையனைத்தும் அவர்களுடைய கைகள் உருவாக்கியவை அல்லவே! பிறகு ஏன், அவர்கள் நன்றி செலுத்துவதில்லை?

36

سُبْحٰنَ الَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا یَعْلَمُوْنَ ۟

மிகவும் தூய்மையானவன்; எல்லா வகையான ஜோடிகளையும் படைத்திருப்பவன்! அவை பூமி முளைக்கச் செய்யக்கூடியவையானாலும் சரி; அவர்களுடைய இனத்திலிருந்தானாலும் சரி; அவர்கள் அறிந்திராத மற்ற பொருள்களிலிருந்தானாலும் சரியே!

37

وَاٰیَةٌ لَّهُمُ الَّیْلُ ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَ ۟ۙ

மேலும், இரவு அவர்களுக்கு மற்றொரு சான்று ஆகும். அதிலிருந்து நாம் பகலை அகற்றிவிடும்போது அவர்கள் மீது இருள் சூழ்ந்து கொள்கிறது.

38

وَالشَّمْسُ تَجْرِیْ لِمُسْتَقَرٍّ لَّهَا ؕ ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟ؕ

மேலும், சூரியனும் (பிறிதொரு சான்றாகும்). அது தனக்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனுமான இறைவனின் நிர்ணயமாகும்.

39

وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰی عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِیْمِ ۟

மேலும், சந்திரன் (இன்னொரு சான்றாகும்). அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது (அவற்றையெல்லாம் கடந்து) உலர்ந்து வளைந்துபோன பேரீச்சங்காம்பு போல் மீண்டும் ஆகி விடுகிறது.

40

لَا الشَّمْسُ یَنْۢبَغِیْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّیْلُ سَابِقُ النَّهَارِ ؕ وَكُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟

சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.

41

وَاٰیَةٌ لَّهُمْ اَنَّا حَمَلْنَا ذُرِّیَّتَهُمْ فِی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ

மேலும், நிரம்பிய பெரிய தோணியில் நாம் அவர்களின் வழித்தோன்றல்களை ஏற்றியதும் அவர்களுக்கு ஒரு சான்றாகும்.

42

وَخَلَقْنَا لَهُمْ مِّنْ مِّثْلِهٖ مَا یَرْكَبُوْنَ ۟

பிறகு, அவர்கள் ஏறிச் செல்லக்கூடிய அதைப் போன்றவற்றையும் அவர்களுக்காக நாம் படைத்திருக்கின்றோம்.

43

وَاِنْ نَّشَاْ نُغْرِقْهُمْ فَلَا صَرِیْخَ لَهُمْ وَلَا هُمْ یُنْقَذُوْنَ ۟ۙ

மேலும், நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்துவிடுவோம். அப்போது அவர்களுடைய முறையீடுகளைக் கேட்பவர் எவரும் இருக்கமாட்டார். அவர்கள் (எந்த வகையிலும்) மீட்கப்படவும் மாட்டார்கள்;

44

اِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَاعًا اِلٰی حِیْنٍ ۟

ஆயினும் நம்முடைய கருணையே அவர்களைக் காப்பாற்றுகிறது; மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை அனுபவிக்க அவர்களுக்கு அவகாசம் அளிக்கின்றது.

45

وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّقُوْا مَا بَیْنَ اَیْدِیْكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟

மேலும், “உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பவற்றின் விளைவுகளிலிருந்தும், உங்களைக் கடந்து சென்று விட்டவற்றின் விளைவுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள்; உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், (அவர்கள் கேட்டும் கேளாதவர்கள் போல் இருந்து விடுகின்றார்கள்).

46

وَمَا تَاْتِیْهِمْ مِّنْ اٰیَةٍ مِّنْ اٰیٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟

மேலும், அவர்களிடம் தம் இறைவனின் சான்றுகளிலிருந்து எந்த ஒரு சான்று வந்தாலும் அவர்கள் அதனை ஏறிட்டும் பார்ப்பதில்லை.

47

وَاِذَا قِیْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۙ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا اَنُطْعِمُ مَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ اَطْعَمَهٗۤ ۖۗ اِنْ اَنْتُمْ اِلَّا فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

மேலும், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேறுகளிலிருந்து (இறைவழியிலும் பிறருக்கு) செலவழியுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் இறைநிராகரிப்பாளர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கிக் கூறுகின்றார்கள்: “நாங்கள் அவர்களுக்கு உணவளிப்பதா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு அவனே உணவளித்திருப்பானே! திண்ணமாக, நீங்கள் முற்றிலும் வழிபிறழ்ந்து விட்டிருக்கிறீர்கள்!”

48

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

மேலும் அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மை கூறுவோராயின், (மறுமைநாளைப் பற்றிய உங்களின்) இந்த அச்சுறுத்தல் எப்போது நிறைவேறப் போகிறது? (என்பதை அறிவியுங்களேன்)”

49

مَا یَنْظُرُوْنَ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً تَاْخُذُهُمْ وَهُمْ یَخِصِّمُوْنَ ۟

அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒரேயொரு பயங்கர ஓசையேயன்றி வேறில்லை. அவர்கள் (உலக விவகாரங்கள் குறித்து) தர்க்கித்துக் கொண்டிருக்கும்போதே (திடீரென்று) அது அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.

50

فَلَا یَسْتَطِیْعُوْنَ تَوْصِیَةً وَّلَاۤ اِلٰۤی اَهْلِهِمْ یَرْجِعُوْنَ ۟۠

அப்போது அவர்களால் மரண சாஸனம் அளிக்கவோ, தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லவோ முடியாது.

51

وَنُفِخَ فِی الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰی رَبِّهِمْ یَنْسِلُوْنَ ۟

பிறகு ஒரு சங்கு ஊதப்படும். அப்பொழுது உடனே அவர்கள், (தத்தம்) அடக்கத்தலங்களிலிருந்து தம் இறைவனை நோக்கி விரைந்து வருவார்கள்.

52

قَالُوْا یٰوَیْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَّرْقَدِنَا ؔٚۘ هٰذَا مَا وَعَدَ الرَّحْمٰنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ ۟

அவர்கள் (திகிலடைந்தவாறு) கேட்பார்கள்: “அந்தோ, எங்கள் பரிதாபமே! நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” (அப்போது), “கருணைமிக்க இறைவன் வாக்களித்திருந்தது இதுவேயாகும்! இறைத்தூதர்களின் வாக்கும் உண்மையாகிவிட்டது!” (என்று பதில் சொல்லப்படும்)

53

اِنْ كَانَتْ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ جَمِیْعٌ لَّدَیْنَا مُحْضَرُوْنَ ۟

அது ஒரே ஓர் உரத்த ஓசையாகத்தான் இருக்கும். அக்கணம் அவர்கள் அனைவருமே நம்முன் கொண்டு வரப்படுவார்கள்.

54

فَالْیَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا وَّلَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

இன்று எவர் மீதும் இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. நீங்கள் எத்தகைய செயல்கள் புரிந்து கொண்டு இருந்தீர்களோ அவற்றிற்குத் தகுந்தாற்போல்தான் உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும்

55

اِنَّ اَصْحٰبَ الْجَنَّةِ الْیَوْمَ فِیْ شُغُلٍ فٰكِهُوْنَ ۟ۚ

திண்ணமாக, இன்று சுவனவாசிகள் இன்பநுகர்ச்சியில் திளைத்திருப்பார்கள்.

56

هُمْ وَاَزْوَاجُهُمْ فِیْ ظِلٰلٍ عَلَی الْاَرَآىِٕكِ مُتَّكِـُٔوْنَ ۟

அவர்களும், அவர்களின் மனைவியரும் அடர்ந்த நிழலில் சாய்வாசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள்.

57

لَهُمْ فِیْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا یَدَّعُوْنَ ۟ۚۖ

அவர்களுக்காக அங்கே உண்ணவும் பருகவும் வித விதமான சுவைமிக்க பொருள்கள் இருக்கும். மேலும், அவர்கள் விரும்பிக்கேட்கும் அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும்.

58

سَلٰمٌ ۫ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِیْمٍ ۟

கருணைமிக்க இறைவனிடமிருந்து அவர்களுக்கு வாழ்த்துரை (ஸலாம்) கூறப்படும்.

59

وَامْتَازُوا الْیَوْمَ اَیُّهَا الْمُجْرِمُوْنَ ۟

மேலும், “குற்றம் புரிந்தவர்களே! இன்று நீங்கள் தனியே பிரிந்து நில்லுங்கள்.

60

اَلَمْ اَعْهَدْ اِلَیْكُمْ یٰبَنِیْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّیْطٰنَ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ

ஆதத்தின் மக்களே, நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவன் என்றும்,

61

وَّاَنِ اعْبُدُوْنِیْ ؔؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟

எனக்கே அடிபணியுங்கள்; இதுவே நேரான வழி என்றும் நான் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கவில்லையா?

62

وَلَقَدْ اَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِیْرًا ؕ اَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ ۟

(அவ்வாறிருந்தும்) அவன், உங்களில் பெரும்பாலான மக்களைத் திண்ணமாக வழிபிறழச் செய்துவிட்டான். நீங்கள் அறிவு பெற்றவர்களாய் இருக்கவில்லையா?

63

هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟

எதனைக் குறித்து நீங்கள் அச்சுறுத்தப்பட்டு வந்தீர்களோ அந்த நரகம் இதுவேயாகும்.

64

اِصْلَوْهَا الْیَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟

நீங்கள் (உலகில் சத்தியத்தை) நிராகரித்து வந்ததன் விளைவாக இன்று அதன் எரிபொருளாகுங்கள்!”

65

اَلْیَوْمَ نَخْتِمُ عَلٰۤی اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَیْدِیْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

இன்று, அவர்களுடைய வாய்களுக்கு நாம் முத்திரை வைத்து விடுவோம். (உலகில்) அவர்கள் எவற்றைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களின் கைகள் நம்மிடம் சொல்லும்; அவர்களின் கால்களும் சாட்சி பகரும்.

66

وَلَوْ نَشَآءُ لَطَمَسْنَا عَلٰۤی اَعْیُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰی یُبْصِرُوْنَ ۟

மேலும், நாம் நாடினால் அவர்களுடைய கண்களை அவித்து விடுவோம். பிறகு, அவர்கள் பாதையை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால், எவ்வாறு அவர்களுக்குப் (பாதை) புலப்படும்?

67

وَلَوْ نَشَآءُ لَمَسَخْنٰهُمْ عَلٰی مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوْا مُضِیًّا وَّلَا یَرْجِعُوْنَ ۟۠

மேலும், நாம் நாடியிருந்தால் முன்னோக்கிச் செல்லவும், பின்னோக்கித் திரும்பவும் அவர்களால் முடியாதவாறு தம் இருப்பிடத்திலேயே அவர்களை உருமாற்றி விட்டிருப்போம்!

68

وَمَنْ نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِی الْخَلْقِ ؕ اَفَلَا یَعْقِلُوْنَ ۟

மேலும், நாம் எவருக்கேனும் நீண்ட ஆயுளைக் கொடுத்தால், அவருடைய அமைப்பை அடியோடு மாற்றிவிடுவோம். (இவை அனைத்தையும் பார்த்து) அவர்களுக்கு அறிவு வர வேண்டாமா, என்ன?

69

وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا یَنْۢبَغِیْ لَهٗ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِیْنٌ ۟ۙ

மேலும், (நபியாகிய) இவருக்கு நாம் கவிதை கற்றுக்கொடுக்கவில்லை; அது (கவிதை புனைதல்) அவருக்கு ஏற்றதுமன்று. திண்ணமாக இது ஒரு நல்லுரையாகவும், தெளிவாக ஓதப்படுகின்ற வேதமாகவும் இருக்கின்றது.

70

لِّیُنْذِرَ مَنْ كَانَ حَیًّا وَّیَحِقَّ الْقَوْلُ عَلَی الْكٰفِرِیْنَ ۟

இதன் வாயிலாக உயிரோடிருக்கின்ற (ஒவ்வொரு) மனிதனையும் எச்சரிப்பதற்காகவும், நிராகரிப்பவர்களுக்கு எதிரான ஆதாரம் நிறைவு பெறுவதற்காகவும்தான்!

71

اَوَلَمْ یَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَیْدِیْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ ۟

அவர்கள் கவனிக்கவில்லையா, என்ன? திண்ணமாக, நம் கைகள் உருவாக்கியவற்றிலிருந்து அவர்களுக்காகக் கால்நடைகளை நாம் படைத்துள்ளோம். இப்போது அவர்கள் அவற்றிற்கு உரிமையாளர்களாய் இருக்கின்றார்கள்.

72

وَذَلَّلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا یَاْكُلُوْنَ ۟

மேலும் அவற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். அவற்றில், சிலவற்றின்மீது அவர்கள் சவாரி செய்கின்றார்கள். மேலும், சிலவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றார்கள்.

73

وَلَهُمْ فِیْهَا مَنَافِعُ وَمَشَارِبُ ؕ اَفَلَا یَشْكُرُوْنَ ۟

மேலும், அவற்றில் அவர்களுக்குப் பலவிதமான பயன்களும் பானங்களும் இருக்கின்றன. (பிறகும்) அவர்கள் நன்றி செலுத்துவோராய் இருக்க வேண்டாமா, என்ன?

74

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ یُنْصَرُوْنَ ۟ؕ

(இவ்வாறெல்லாம் இருந்தும்) அல்லாஹ்வை விடுத்து பிற கடவுள்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், தாம் உதவி செய்யப்படலாமென்று ஆசை கொள்கிறார்கள்.

75

لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَهُمْ ۙ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ ۟

அவற்றால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது! (இதற்கு நேர்மாறாக) அம்மக்கள், அவற்றிற்காக தயார் நிலையிலிருக்கும் சேனையாக விளங்குகிறார்கள்.

76

فَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ اِنَّا نَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟

(இட்டுக்கட்டிப் பேசும்) அவர்களின் பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவை அனைத்தையும் திண்ணமாக நாம் அறிகின்றோம்.

77

اَوَلَمْ یَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِیْمٌ مُّبِیْنٌ ۟

திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான்.

78

وَضَرَبَ لَنَا مَثَلًا وَّنَسِیَ خَلْقَهٗ ؕ قَالَ مَنْ یُّحْیِ الْعِظَامَ وَهِیَ رَمِیْمٌ ۟

மேலும், அவன் நமக்கு உவமையைப் பொருத்துகின்றான். ஆனால் தான் படைக்கப்பட்ட விதத்தை மறந்துவிடுகின்றான். மக்கிப் போய்விட்ட நிலையிலுள்ள இந்த எலும்புகளை உயிர்ப்பிப்பவர் யார்? என்று அவன் கேட்கின்றான்.

79

قُلْ یُحْیِیْهَا الَّذِیْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ ؕ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِیْمُ ۟ۙ

அவனிடம் கூறுங்கள்: “எவன் முதலில் அவற்றைப் படைத்தானோ அவனே அவற்றை உயிர்ப்பிப்பான். மேலும், அவன் படைப்பு நுட்பம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.”

80

لَّذِیْ جَعَلَ لَكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًا فَاِذَاۤ اَنْتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ ۟

அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பைப் படைத்தான். இப்போது நீங்கள் அதன் மூலம் (தீ) பற்றவைத்துக் கொள்கின்றீர்கள்!

81

اَوَلَیْسَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یَّخْلُقَ مِثْلَهُمْ ؔؕ بَلٰی ۗ وَهُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟

வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அவன் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவனல்லவா? ஏன் இல்லை! நன்கு அறிந்த மாபெரும் படைப்பாளன் அவனே.

82

اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـًٔا اَنْ یَّقُوْلَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟

அவன் ஏதாவது ஒருபொருளைப் படைக்க நாடினால், அவன் செய்வது ‘ஆகுக!’ என்று அதற்கு ஆணை இடுவதுதான்; உடனே அது ஆகிவிடுகின்றது!

83

فَسُبْحٰنَ الَّذِیْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠

தூய்மையானவன், ஒவ்வொரு பொருளின் முழு அதிகாரமும் எவனுடைய கையில் உள்ளதோ அவன்! மேலும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்கள்.

PreviousFatirNextAs-Saffat

0:00–:––